Thiruvakkarai National Stone Tree Park 
பசுமை / சுற்றுச்சூழல்

திருவக்கரை தேசிய கல் மரப் பூங்கா...2 கோடி ஆண்டுகள் பழமையான கல் மரங்கள்!

தேனி மு.சுப்பிரமணி

கல்மரங்கள் எனும் தாவரங்கள் பட்டையில்லாத் தாவரப் (Psilophyton) பேரினத்தைச் சேர்ந்தவையாகும். இவ்வகைத் தாவரங்கள் அழிந்து போன கடத்துத்திசு தாவரங்களில் (Vascular Plant) ஒன்றாக இருக்கிறது. 1859 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இவ்வகைத் தாவரம் புதைபடிவத் தாவரங்களில் ஒன்றாகும். இத்தாவரங்கள், சுமார் 420 மில்லியன் முதல் 360 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டெவோனிய வயதுடையவை (Devonian Age) என்கின்றனர்.

இத்தாவரங்களின் மாதிரிகள் அமெரிக்காவின் வடக்கு மைனேப் பகுதியில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. கனடா, செக் குடியரசு, சீனாவின் யுனான் பகுதிகளிலும் இவ்வகை மரங்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன. இவ்வகைத் தாவரங்கள் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகிலுள்ள திருவக்கரை எனப்படும் கிராமத்தில் காணப்படுகின்றன. முதன்முதலில் 1781 ஆம் ஆண்டில் எம். சொன்னோர்ட் எனும் ஐரோப்பிய அறிஞர் இந்தப் பகுதியில் கல்மரங்கள் இருப்பதைக் கண்டறிந்து ஆவணப்படுத்தியதுடன் உலகிற்கும் அறிமுகப்படுத்தினார்.

சுமார் ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உலகத்தில் 4 பனியுகங்கள் தோன்றின. இதை குவார்ட்டர்னரி காலம் என்று கூறுவர். அப்போது ஏற்பட்ட புவியியல் மாறுபாட்டால், மரங்கள் புதைந்து படிமங்களாக மாறின. அவற்றுள் பட்டையில்லாத் தாவர வகையைச் சேர்ந்த மரங்களும் அடங்கும். இப்பட்டையில்லாத் தாவரங்கள் மொட்டு இல்லாமல் சிதில்கள் மூலமே இனப்பெருக்கம் செய்ய வல்லவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. திருவக்கரை பகுதியிலிருக்கும் மரங்களில் சில இந்தப் பேரினத்தைச் சேர்ந்தவை என்கின்றனர்.

திருவக்கரையை அடுத்துள்ள சேதாரப்பட்டு முதலிய இடங்களில் மீன் இனத்தைச் சார்ந்த உயிரினங்கள் இறுகிக் கல்லாக மாறியுள்ளன. இதனால் திருவக்கரை பகுதி ஒரு காலத்தில் மிகப்பெரும் நீர்நிலையாக இருந்திருக்கலாம். அதையொட்டி இருந்த நிலப்பகுதிகளில் பெருங்காடுகள் இருந்து, காலநிலை மாற்றத்தால் பெரும் வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம். அதன் விளைவாக, இந்தப் பாறைகள் அடித்துச் செல்லப்பட்டு மண்ணுள் புதைந்திருக்கலாம். மரங்களின் மீது படிந்த மண் மரங்களில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி அந்த மரங்களைக் கல்லாக மாற்றி இருக்கலாம் என்ற யூகங்களை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த மாற்றத்திற்கு, “கல்லாகச் சமைதல்” என்ற பெயரையும் குறிப்பிடுகின்றனர்.

திருவக்கரை பகுதியில் 200 மரத் தண்டுகள் சுமார் 247 ஏக்கர் பரப்பளவில் உள்ளன. இங்கிருக்கும் மரங்கள் அனைத்தும் 3 முதல் 15 மீட்டர் நீளமும், 5 மீட்டர் சுற்றளவும் கொண்டதாக இருக்கின்றன. எந்த மரத்திற்கும் வேரோ, கிளைகளோ இல்லை. எல்லாம் படுக்கை வாக்கில் மண்ணில் புதைந்தபடி இருக்கின்றன. அதனால், இவையெல்லாம் வேறொரு பகுதியில் இருந்து ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு புதைந்திருக்க வாய்ப்புண்டு என்று புவியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

திருவக்கரையிலுள்ள மணற்கல் வகைப் பாறைகளோடு ஒட்டியுள்ள இக்கல்மரங்கள் குறைந்த பட்சம் சுமார் 2 கோடி ஆண்டுகள் பழமையானவை என்று கூறலாம். வாழும் மரங்களில் காணப்படும் பட்டை போன்ற அமைப்புகள், வட்ட வளையங்கள் (Annular Rings), கணுக்கள் (Nodes) போன்ற அனைத்தும் இந்தக் கல்மரங்களில் அழகாகத் தெரிகின்றன.

இந்தப் பழமையான கல்மரங்களைப் பாதுகாக்க வேண்டுமென்கிற நோக்கத்தில், 1957 ஆம் ஆண்டில் இந்தியப் புவியியல் ஆய்வுத் துறை (Geological Survey of India) இந்தப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொண்டதுடன், தேசியக் கல் மரப் பூங்கா (National Fossil Wood Park) ஒன்றையும் இங்கு அமைத்தது. இப்பூங்காவில் இங்குள்ள கல் மரங்களைத் தவிர்த்து, சுற்றியுள்ள பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட அனைத்துக் கல் மரங்களையும் இயற்கையான சூழலில், பெரிய அளவிலானதைப் படுக்கைவாக்கிலும், சிறிய அளவிலானதைச் செங்குத்தாகவும் நிறுவிக் காட்சிப்படுத்தியுள்ளனர்.

மிகவும் பழமையான தேசியக் கல் மரப் பூங்காவைக் காண விரும்புபவர்கள், திண்டிவனத்திலிருந்து கூட்டேரிப்பட்டு, மயிலம் வழியாகப் புதுச்சேரி செல்லும் சாலையில் சென்று திருவக்கரையை அடையலாம். காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பூங்காவைச் சுற்றிப் பார்க்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT