Mealy Bugs 
பசுமை / சுற்றுச்சூழல்

விவசாயிகளுக்கு வில்லனே இந்தப் பூச்சி தான்!

ரா.வ.பாலகிருஷ்ணன்

விவசாயத்தில் பூச்சித் தாக்குதல் என்பது விவசாயிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துகின்றன. அதிலும் முக்கியமாக மாவுப் பூச்சிகளின் தாக்குதல் இன்றைய காலகட்டத்தில் அதிகமாகவே உள்ளன. இந்தப் பூச்சிகளை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும் என இப்போது தெரிந்து கொள்ளலாம்.

விவசாயத்தில் அதிக மகசூல் கிடைக்க ஒன்றல்ல, இரண்டல்ல பல விஷயங்களில் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும். மேலும், இயற்கையின் ஆதரவும் அவசியம். மழை குறைந்தாலும் பிரச்சினை தான்; அதிகமாக பெய்தாலும் பிரச்சினை தான். இருப்பினும் நிலத்தில் போதிய வடிகால் வசதிகளை செய்திருந்தால், வெள்ளப் பெருக்கின் போது ஓரளவு பயிர்களைக் காப்பாற்றலாம். இருப்பினும், பயிர்களுக்கு அதிக பாதிப்பைத் தருவது பூச்சித் தாக்குதல் தான். அதிலும் குறிப்பாக மாவுப் பூச்சிகளைக் கூறலாம். அளவில் சிறிதாக இருந்தாலும், பயிர்களை சேதப்படுத்தி மகசூலைக் குறைத்து விடும். இதனால் தான் மாவுப் பூச்சிகள் விவசாயிகளின் வில்லனாக பார்க்கப்படுகிறது.

ஒரு காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த மாவுப் பூச்சிகள், இன்று பலமடங்கு பெருகி விட்டன. காலநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதலின் விளைவாகத் தான் மாவுப் பூச்சிகளின் இனப்பெருக்கம் அதிகரித்து இருப்பதாக வேளாண் வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். மாவுப் பூச்சிகள் இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் 3 முதல் 5 மி.மீ அளவில் காணப்படுகின்றன. மிருதுவான சாறு உறிஞ்சும் பூச்சிகளான இவை, சூடோ காக்ஸிடே குடும்பத்தைச் சேர்ந்த வெளிநாட்டு இனம்.

இப்பூச்சிகளின் உடலை மென்மையான மெழுகு படிவங்கள் மூடியிருப்பதால் கட்டுப்படுத்துவது சற்று கடினம். எறும்புகள் தான் மாவுப் பூச்சிகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்துகின்றன. ஆகையால், வயல்வெளிகளில் எறும்புகளின் நடமாட்டத்தைக் குறைத்து விட்டாலே போதும்; மாவுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும்.

எந்தப் பயிர்களைத் தாக்கும்?

மாவுப் பூச்சிகள் கிட்டத்தட்ட 200 வகையான பயிர்களைத் தாக்குகின்றன. குறிப்பாக வெண்டை, பயறு வகைகள், கத்திரி, பருத்தி, பப்பாளி, கொய்யா, செம்பருத்தி, மிளகாய் மற்றும் குரோட்டன்ஸ் போன்ற பயிர்களை அதிகமாகத் தாக்குகின்றன. பயிர்களின் தண்டுகள், இலைகள் மற்றும் வேர்ப் பகுதிகளை மாவுப் பூச்சிகள் தாக்கும். இவை திசுக்களை உண்டு, எச்சிலை செடியிலேயே செலுத்தி விடுவதால், விரைவாக இலைகள் சுருங்கி இளஞ்செடிகள் காய்ந்து விடும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  1. களைச் செடிகளை அவ்வப்போது அகற்ற வேண்டும்.

  2. சோப்புக் கரைசலை மாவுப் பூச்சிகளின் மீது பீய்ச்சி அடித்தால், அவை கட்டுக்குள் வரும்.

  3. இளம் மாவுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மீன் எண்ணெய் சோப்பை தண்ணீரில் 2.5% என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.

  4. உயிரியல் முறையில் கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய பொறி வண்டுகள் மற்றும் கிரிப்டோலிம்ஸ் மாண்ட் ரோசோரி வண்டுகளை ஹெக்டேருக்கு 300 வீதம் பயன்படுத்தலாம்.

  5. பயிர்களில் பாதிப்பு அதிகமாக இருந்தால், புரபனோபாஸ் அல்லது அசிபேட் 75 SP ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

  6. வயலுக்கு அருகில் இருக்கும் எறும்புப் புற்றுகளை அழிக்க ஒரு லிட்டர் தண்ணீரில், குளோரி பைரிபாஸ் 20 இ.சி மருந்தினை 2.5 மி.லி. கலந்து தெளிக்கலாம்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT