வித்தியாசமான மூன்று மீன்கள்:
1. பேத்தா:
பேத்தா அல்லது பேத்தை மீன் அல்லது பேத்தையன் மீன் அல்லது முள்ளம்பன்றி மீன் (Porcupine Fish) என்பது ஒரு வினோதமான கடல் மீனினமாகும். இவை ஆழம் குறைந்த கடல் பகுதியில் வாழ்கின்றன. இம்மீன் தன் உடலைப் பத்து மடங்கு பருமன் உள்ளதாக மாற்றிக் கொள்ளும் திறன் வாய்ந்தது. நீர் அல்லது காற்றைக் கொண்டு தனது உடலை ஊதிப் பெருக்கும் ஆற்றல் கொண்டது. சில சமயங்களில் காற்றை நிரப்பிக் கொண்டு ரப்பர் பந்து போலக் கடலில் மிதக்கும். ஏதாவது பறவை இதைப் பிடித்தாலும், இது ஊதிப் பெருகுவதால் இதை விழுங்க இயலாமல் விட்டுவிடும். இது மெதுவாக நீந்தக்கூடியது. இம்மீனின் உடலில் முட்கள் காணப்படுகின்றன. இம்மீன் ஊதிப் பெருகும் போது இந்த முட்கள் விறைத்து நிற்கும். சாதாரண நிலையில் இம்மீனின் முட்கள் படுக்கை நிலையில் இருப்பதால், இது நீந்தும் போது எந்த இடைஞ்சலும் ஏற்படுவதில்லை. இது ஒரு நச்சு மீன் என்பதால் இதைப் பெரும்பாலான மீன்கள் உண்பதில்லை. மீறி உண்டால் இது ஊதிப் பெருகி விழுங்கும் மீனின் தொண்டையில் சிக்கி அந்த மீனைக் கொன்று விடும்.
2. சவப்பெட்டி மீன்:
சவப்பெட்டி மீன் (Coffinfish, Chaunax endeavouri), என்பது கடல் தேரை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இன மீனாகும். ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையான, தென்மேற்கு பசிபிக் உப்பு மிதவெப்பக் கரையில் காணப்படுகின்றன. இவை கடலடி சேற்றில் வாழும் இனத்தைச் சேர்ந்தவை. இவை சிறிய கால்கள் போலத் தோன்றும் துடுப்புகளைக் கொண்டு கடல் தரையில் நடந்து செல்லும். இதனால் இதற்கு கை மீன் (Hand Fish) என்று வேறு பெயரும் உண்டு. இம்மீன்களை எதிரி தாக்க வந்தால், உடனடியாக நிறைய தண்ணீரைக் குடித்து, உடலை புடைக்கச் செய்து விடும். இதனால் இதன் உப்பிய உடலை எதிரியால் கடிக்க முடியாதவாறு தன்னை தற்காத்துக் கொள்ளும்.
3. சோம்பேறித் தூண்டில் மீன்:
தூண்டில் மீன் (Angler Fish) என்பது லோபிபார்ம்சு என்ற வரிசையினைச் சார்ந்த மீன்களாகும். இவை எலும்பு மீன்கள் வகையினைச் சார்ந்தவை. பிற மீன்களை இவற்றின் வேட்டையாடலின் மூலம் கவரும் சிறப்பியல்பு முறையினால் இவை தூண்டில் மீன் எனும் பெயரினைப் பெற்றன. இம்மீன்களின் முன் பகுதியில் தூண்டில் போன்ற மாற்றியமைக்கப்பட்ட ஒளிரும் துடுப்பு கதிர் மற்ற மீன்களைக் கவர்ந்து வேட்டையாட வழி செய்கிறது. ஒளி உமிழ்வானது இணைவாழ்வு பாக்டீரியாக்கள் மூலம் வெளியிடப்படுகிறது. இப்பாக்டீரியாக்கள் கடல் நீர்லும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் வாழ்கின்றன.
தூண்டில் மீன்களில் ஆண் மீன்கள், பெண் மீன்களை விடச் சிறியது. பெண் மீன்கள் தலையில் நீண்ட முன்புறத்தைப் பெற்றுள்ளன. ஆண் மீன்களிடம் இவை காணப்படுவதில்லை. ஆண் மீன்கள் மாபெரும் சோம்பேறிகள். இவை தமது தேவைகளுக்குப் பெண் மீன்களையே நம்பி வாழ்கின்றன. துணை ஏதும் கிடைக்கவில்லையெனில், உணவு உண்ணாமலே உயிர் நீக்கும்.
பெண் துணை கிடைக்கும் போது, தனது பற்களை அதன் உடலில் பதிய வைத்து கொண்டு ஒட்டி வாழ்கிறது. பிறகு சிறிது சிறிதாக ஆண் மீனின் உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெண் உடலின் தசையோடு ஆணின் தசை இணைந்து விடுகின்றது. ஆணின் நரம்பு மண்டல உறுப்புகள், உணவு மண்டல உறுப்புகள் அழிந்து மறைகின்றன. இனப்பெருக்க உறுப்புகள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஒட்டுண்ணியாக பெண்ணோடு சேர்ந்து வாழ்கின்றது. சுவாச்சித்திற்கான பிராண வாயுவினையும் பெண்ணிடமிருந்தேப் பெற்றுக் கொள்கிறது. இனப்பெருக்கமும் நடைபெறுகிறது. தனது முழுத் தேவைகளையும் பெண்களிடமிருந்தேப் பெற்றுக் கொள்கிறது. உணவு உண்பதில் ஆண் தூண்டில் மீன்களைப் போலச் சோம்பேறி வேறு ஏதும் எதுவுமில்லை.