விவசாயிகள் விளைபொருள்களை மூன்றாம் நபரான இடைத்தரகளிடம் இடத்தில் விற்பனை செய்வதால் தான் அதிக லாபம் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். இதுதவிர விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் விளைபொருள்களின் விலையை தங்களால் நிர்ணயிக்க முடியவில்லை என்ற ஆதங்கம் இன்றுவரை தொடர்கிறது. இதற்கெல்லாம் மற்றோரை குறைசொல்லிப் பலன் கிடைக்கப் போவதில்லை. விவசாயிகளே நேரடி விற்பனையில் இறங்க வேண்டும் அல்லது விளைபொருள்களை மதிப்புக் கூட்டி விற்க வேண்டும்.
விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்வது சற்று சிரமத்தைக் கொடுக்கும். இருப்பினும், சிறிதளவு விளைபொருள்களையாவது விற்பனை செய்யத் தொடங்கினால் போதுமான லாபமும், விற்பனை அனுபவமும் கிடைக்கும். மேலும் பல விவசாயிகளுக்கு மதிப்புக் கூட்டுதல் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. இதனால் தான் விற்பனை செய்வதிலும், மதிப்புக் கூட்டுவதிலும் விவசாயிகள் திணறுகின்றனர். இவர்களுக்கெல்லாம் ஒரு பயிற்சியை வழங்கினால் நிச்சயமாக அது உபயோகமாக இருக்கும். அப்படியான ஒரு பயிற்சியைத் தான் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேசிய உணவுத்தொழில்நுட்பம் தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் வழங்க இருக்கிறது.
பயிற்சி நாள் மற்றும் நேரம்:
வருகின்ற மே 10 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 'முருங்கையில் எப்படி மதிப்புக் கூட்டி லாபம் பெறுவது' என்பது தொடர்பான இலவச ஆன்லைன் பயிற்சி, தேசிய உணவுத்தொழில்நுட்பம் தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தால் வழங்கப்பட இருக்கிறது.
முருங்கை விவசாயிகள் தங்களது விளைபொருள்களை வந்தவரை லாபம் என இடைத்தரகர்களிடம் விற்று விடுகின்றனர். ஆனால், முருங்கையை மதிப்புக் கூட்டி விற்றால் அது பன்மடங்கு லாபத்தை அடைய வழிவகுக்கும். மதிப்புக் கூட்டுதலில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் தான் மேற்படி இலவச மதிப்புக் கூட்டுதல் பயிற்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இலவச ஆன்லைன் பயிற்சியில் முருங்கையில் மதிப்புக் கூட்டுதல் தொழிற்சாலை அமைப்பது, பேக்கிங் மற்றும் லேபிளிங் தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்புத் துறைச் சான்றிதழ் வாங்குவது, மைக்ரோ உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கான பிரதம மந்திரியின் திட்டங்கள் (PMFME) குறித்து விளக்கம் போன்றவை அளிக்கப்படும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனப் (FPO) பிரதிநிதிகள், உணவுத்தொழில் நிபுணர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், அனைத்து விவசாயிகள், கூட்டுறவுத் துறை பிரமுகர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்:
niftem-t.ac.in என்ற இணையதளத்தில் உள்ள பயிற்சி (Training) என்ற பிரிவிற்கு சென்று, இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். மதிப்புக் கூட்டுதலுக்கு உதவும் இப்பயிற்சி, விவசாயிகளுக்கு நிச்சயமாக ஊன்றுகோலாக இருக்கும். மேலும், தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு இப்பயிற்சி வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை.
விவசாயிகளே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது தங்களின் லாபத்தை அதிகரிக்க உதவியாக இருக்கும். முருங்கை விவசாயிகள் மட்டுமல்லாது அனைத்து விவசாயிகளும் இப்பயிற்சியில் கலந்து கொண்டால், அது அவர்களுக்கு ஒரு அனுபவமாக இருக்கும்.