தேற்றான்கொட்டை என்பது தேற்றான் மரத்திலிருந்து பெறப்படும் மருத்துவ குணங்கள் பல நிறைந்த ஒரு கொட்டையாகும். இம்மரம் மிகவும் அரிதான மரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. முற்காலத்தில் தண்ணீரை சுத்திகரிக்க தேற்றாங்கொட்டை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதைப் பற்றிய பல நன்மை தரும் பொதுவான மற்றும் மருத்துவத் தகவல்களை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
‘ஸ்ட்ரைக்னோஸ் பொட்டாடோரம்’ (Strychnos potatorum) என்ற தாவரவியல் பெயர் கொண்ட தேற்றா மரம், ‘லோகனியேசி’ குடும்பத்தைச் சேர்ந்தது. இம்மரம் முப்பது முதல் ஐம்பது அடி உயரம் வளரக்கூடியது. தேறாதவனையும் தேற்றும் மகிமை கொண்ட மரமாக தேற்றா மரம் கருதப்படுகிறது.
தேற்றா மரம் என்றழைக்கப்படும் மரமானது இல்லம், சில்லம், கதலிகம், பிங்கலம் என பலவிதமான பெயர்களில் அழைக்கப்படுகின்றது. மேலும், இதற்கு `தேறு’ மற்றும் `தேத்தாங்கொட்டை’ என்ற பெயர்களும் வழங்கப்படுகிறது.
தமிழகத்தின் மலைக்காடுகளிலும் சமவெளிகளிலும் பரவலாகக் காணப்படும் இம்மரமானது, கரும்பச்சை நிற இலைகளையும் உருண்டையான விதைகளையும் கொண்டது. இம்மரம் சற்று பளபளப்பாகக் காணப்படும். தேற்றான் மரத்தின் விதைக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
முற்காலத்தில் குளம், ஊருணி போன்றவற்றில் இருந்து நீரை எடுத்து அதை குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்தனர். கலங்கலாக சகதியாக உள்ள இந்த நீர் நிலைகளில் நீரைத் தெளிய வைக்க தேற்றான் கொட்டைகளைப் பயன்படுத்தியுள்ளனர். நீரை தூய்மைப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. வீடுகளில் பத்து லிட்டர் தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று தேற்றாங்கொட்டையைப் போட்டு வைத்தால் அந்த நீரானது சுத்தமாகிவிடும்.
தேற்றான்கொட்டையை தற்காலத்தில் சுக்கு, அதிமதுரம் முதலான மூலிகைகளுடன் கலந்து தேற்றான் காபி என்றொரு பானத்தை சென்னை முதலான நகரங்களில் விற்பனை செய்கிறார்கள். தேற்றான் கொட்டை உடல் சூடு, வயிற்றுக் கடுப்பு, சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் முதலான பிரச்னைகளை சரி செய்யக் கூடிய ஆற்றல் வாய்ந்தது. புண்களையும், காயங்களையும் ஆற்றும் தன்மை உடையது தேற்றாங்கொட்டை. மேலும், வயிற்றுப்போக்கு மற்றும் சிறுநீரகக் கோளாறுகளையும் குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. பலவீனமானவர்களுக்கு பலத்தை அளிக்கக்கூடிய சக்தி இந்தக் கொட்டைகளுக்கு உள்ளது. இதனாலேயே ‘தேறாதவனையும் தேற்றும் தேறாமரம்’ என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது. தேற்றான்கொட்டை மரத்தின் பழமும் மருத்துவ குணங்கள் வாய்ந்தது. சீதபேதியை கட்டுப்படுத்தும் சக்தி இப்பழத்திற்கு உள்ளது.
தேற்றாங்கொட்டை மரம் அருகி வரும் ஒரு மரமாகும். இதன் மருத்துவ குணங்களைக் கருதி சில கோயில்களில் தல விருட்சமாக வளர்க்கப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்த திருக்குவளையில் உள்ள அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலின் தல விருட்சமாக தேற்றாங்கொட்டை மரம் உள்ளது.
தொல்காப்பியம், கலித்தொகை, நற்றினை முதலான இலக்கிய நூல்களில் தேற்றாமரத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன என்பது கூடுதல் சிறப்பு. இதுபோன்ற அரிய மருத்துவ குணங்கள் கொண்ட மரங்களைப் பற்றி அறிந்து கொள்ளுவதும் அவற்றை அழிவிலிருந்து காப்பதும் நமது கடமையாகும்.