Trees 
பசுமை / சுற்றுச்சூழல்

உலகின் மிகச் சிறிய மரம் எது? வித்தியாசமான இந்த ஐந்து மரங்கள் பற்றி படித்தால் தெரியும்!

தேனி மு.சுப்பிரமணி

கண்ணாடி மரம்

Looking Glass Tree

கண்ணாடி மரம் (Looking Glass Tree ) அல்லது சுந்தரி மரம் என்பது இசுட்டெர்குலியா பேரினத்தின் மால்வேசியே குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். சிறிய அழகான பசுமையான மரம்.

இதன் இலைகள் ஒரு அடி நீளம் வரை இருக்கும். பார்ப்பதற்கு பளபளப்பான மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும். இதன் அடிப்பகுதி ஒளி புகாதவாறு வெள்ளி நிறத்தில் உள்ளது. இதனால் சூரிய ஒளிப்பட்டு இதன் இலைகள் கண்ணாடி போல் எதிரொளிரும் தன்மையுடையது. இதனைப் பார்ப்பதற்குப் பல கண்ணாடிகள் தொங்க விட்டது போல் இருக்கும். இவ்விலையில் முகம் கூடத் தெரியும்.

இம்மரத்தில் சிறிய பச்சை நிறப்பூக்கள் தோன்றும். இதில் நான்கு இனங்கள் உண்டு. இந்தியா, பாகிஸ்தான், ஆசிய நாடுகளின் சதுப்பு நிலப்பகுதியில் இவை வளர்கின்றன. பெரும்பாலும் அடர்ந்த காடுகளிலேயே உள்ளது. இவ்விலைகளிலிருந்து எதிரொளிரும் ஒளியைப் பயிர்த்தொழிலுக்கு ஏற்றதாகப் பயன்படுத்துகிறார்கள்.

மிருதுவான மரம்

Ochroma pyramidale

ஆக்ரோமா பிரமிடேல் (Ochroma pyramidale) எனும் தாவரவியல் பெயர் கொண்ட இம்மரத்தைப் பொதுவாக, பால்சா மரம் அல்லது தக்கை மரம் என்றும் அழைக்கின்றனர். அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பெரிய, வேகமாக வளரும் மரமாகும். இது ஆக்ரோமா இனத்தின் ஒரே ஒரு இன மரமாக உள்ளது. இது உலகில் உள்ள மரங்களில் மிகவும் லேசான மரம்.

இது 60 முதல் 70 அடி உயரம் வரை வளரக்கூடியது. மிகவும் வேகமாக வளரும் இம்மரத்தின் மரச்சோறு தக்கை போன்று இருக்கும். இதனால் இம்மரத்தை கட்டுமரம் செய்வதற்கும், முதல் உதவிக்குப் பயன்படும் மிதவையாகவும் பயன்படுத்துகிறார்கள். மேலும் விமானம் கட்டுவதற்கும், சுரங்கங்களில் மின் தடையாகவும் பயன்படுத்துகிறார்கள்.

இம்மரம் மத்திய அமெரிக்காவில் அதிக அளவில் காணப்படுகிறது. இம்மரத்தில் பழுப்பு நிற வெள்ளை பூக்கள் காணப்படும். இம்மரத்தில் வரும் பழுப்பு நிற காய்கள், பார்ப்பதற்கு விசித்திரமாக இருக்கும். இதனுள்ளே இருக்கும் பஞ்சு மினுமினுப்பாகவும் செம்பழுப்பு நிறத்திலும் இருக்கும். இப்பஞ்சு தலையணை செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. 

பசு மரம்

Brocimum

மோரேசியீ குடும்பத்தைச் சேர்ந்த, புரோசிமம் கெட்டாக்டோடென்ரான் எனும் தாவரவியல் பெயர் கொண்ட, அமெரிக்க வெப்பமண்டலப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட மரம் பசு மரம் என்று அழைக்கப்படுகிறது.

இம்மரத்தின் அடர்த்தியான வண்ணச் சிவப்பு நிறம் அலங்கார மரவேலைக்குப் பயன்படுத்தப்படுகிறது. பெரிய பசுமையான மரம் 70 முதல் 80 அடி உயரமும் 6 முதல் 8 அடி விட்டமும் கொண்டுள்ளது. இதனுடைய இலைகள் பாம்பின் தோல் போன்று தடிமனாக இருக்கும். இம்மரத்தில் வரும் பூக்கள் மிகவும் ஆச்சரியமாக, இதனுடைய உருண்டை மலர்க்கொத்தில் பல ஆண் பூக்களும், இதன் நடுவில் ஒரு பெண் பூவும் உள்ளது. மரத்தின் கனியையுயும், பூவையும் சாப்பிடலாம்.

இது தென் அமெரிக்க ஷாமன் குழுக்களால் ஒரு மனநோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மரத்தின் தண்டுப்பகுதியில் அளவுக்கு அதிகமான பால் உள்ளது. இது பசுவின் பாலைப் போன்றே இருக்கிறது. இதை அமெரிக்காவின் கிராமப்புறத்தில் உணவாகச் சேர்த்துக் கொள்கிறார்கள். இலங்கையில் இப்பாலை பசுவின் பாலுக்கு மாற்றாகப் பயன்படுத்துகிறார்கள். எனவே, இம்மரத்தைப் பசுமரம் என்கின்றனர். 

குரங்கு மரம்

Chiranthodendron

குரங்கு மரம் (Chiranthodendron ) என்பது மால்வேசியே குடும்பத்தில் ஒரு பூக்கும் தாவர இனமாகும். இது சிராந்தோடென்ட்ரான் பென்டாடாக்டைலான் என்ற ஒற்றை வகை மரங்களை உள்ளடக்கியது. இந்த மரம் டெவில்ஸ், குரங்கு அல்லது மெக்சிகன் கை மரம் அல்லது ஆங்கிலத்தில் கை மலர் என்றும், ஜப்பானிய மொழியில் árbol de las manitas (சிறிய கைகளின் மரம்) என்றும், நாகவற் மொழியில் mācpalxōchitl (உள்ளங்கை மலர்) என்றும் அழைக்கப்படுகிறது.

இம்மரம் 100 அடி உயரம் வளரக் கூடியது. இதனுடைய இலைகள் பெரியதாக ஒரு அடி நீளத்திற்கு இருக்கும். இம்மரத்தில் வரும் பூக்கள் மிக விசித்திரமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. இதன் பூக்கள் ஆழ்ந்த சிவப்பு நிற மகரந்த தாள்கள் வெளியே நீட்டிக்கொண்டு உள்ளது. இது மனித கையைப் போலவே உள்ளது. விரல்கள் போல் நீண்டும் அதன் நுனியில் வளைந்த நகமும் உள்ளது. பெருவிரல் போன்றதும் உள்ளது. இந்த கைபோன்ற அமைப்பு மற்ற எந்த வகை தாவரத்திலும் கிடையாது. இச்சாதியில் ஒரே இனம் மட்டுமே உள்ளது. 

மிகச் சிறிய மரம்

Willow

சாலிக்கேசியீ (Salicaceae) எனும் தாவரக் குடும்பத்தில், சாலிஸ் கெர்பேசியா (Salix herbacea) எனும் தாவரவியல் பெயர் கொண்ட, வில்லோ (Willow) என்று அழைக்கப்படும் வகையைச் சேர்ந்த மரம் உலகின் மிகச் சிறிய மரமாகும். இது 2.5 செ.மீ. (ஒரு இஞ்ச்) உயரமே வளரக்கூடியது.

இம்மரம் அடர்த்தியாகவும், விளிம்பு பற்கள் போன்றும் உள்ளது. இதனுடைய பூக்கள் பூனைவால் மஞ்சரி போன்றது. இது வெள்ளை நிறப் பூக்களாகும். இச்செடியின் தண்டு மிகச்சிறியது. இது மிக மிக மெதுவாக வளர்கிறது. இதனுடைய தண்டு பென்சில் அளவு தடிமன் ஆவதற்கு 100 வருடங்கள் ஆகிறது. இந்த மரம் பனி நிறைந்த துருவப் பகுதியில் வளர்கிறது. இவ்வினத்தில் 300 இனம் வரை உள்ளது. இவை அனைத்தும் ஈரம் நிறைந்த ஈரமான பகுதியில் வளர்கின்றன. இவைகளை அழகிற்காக வளர்க்கிறார்கள்.

பத்தே நிமிடத்தில் சுடச்சுட வெஜ் கட்லெட்டும், சோயா கட்லெட்டும் செய்வோமா?

குழந்தைகளிடம் அடிக்கடி கேள்வி கேட்கும் பெற்றோரா நீங்க? அப்போ இதை நோட் பண்ணிக்கோங்க!

குறுநாவல்: 'அம்புஷ்' அத்தியாயம் - 5

நம் கைகளையும் கொஞ்சம் கவனிப்போமா?

சுவாமி ஐயப்பன் வேட்டையனாக காட்சித்தரும் இடம் எது தெரியுமா?

SCROLL FOR NEXT