Birds 
பசுமை / சுற்றுச்சூழல்

உலகின் எந்தப் பகுதிகளில் பறவைகளை அதிகம் பார்க்க முடியும்!

A.N.ராகுல்

பறவைகள், அதன் வண்ணங்கள் மற்றும் இனிமையான சத்தங்களால், பலரின் இதயங்களை கவர்கின்றன. சில நாடுகளில் நம்பமுடியாத அளவில் பறவைகளின் கூட்டங்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. அந்த இடங்கள் பல பறவை ஆர்வலர்களுக்கு புகலிடமாக மாறுகின்றன. அவற்றில் கொலம்பியா, பெரு மற்றும் பிரேசில் ஆகியவை சிறந்த நாடுகளாக உள்ளன. பறவைகளை அங்கு குடியேற எது ஈர்க்கிறது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

அதிகளவிலான பறவைகள் குடியிருக்கும் சிறந்த நாடுகள்:

கொலம்பியா(Colombia) தோராயமாக 1,958 பறவை இனங்களுடன் உலகில் முன்னணியில் உள்ளது. இந்த தென் அமெரிக்க நாடு ஆண்டிஸ்(Andes) மலைகள் முதல் அமேசான் மழைக்காடுகள் வரை, பறவைகள் உட்பட பல்வேறு வகையான உயிரினங்களின் வாழ்விடங்களை கொண்டுள்ளது. அதனால் இது பறவை ஆர்வலர்களுக்கு சொர்க்க பூமியாக விளங்குகிறது. பெருவில்(Peru) சுமார் 1,860 இனங்கள் உள்ளன. பிரேசிலில்(Brazil), சுமார் 1,816 பறவை இனங்கள் உள்ளன. அவற்றில் பல பறவையினங்கள் பரந்த அமேசான் மழைக்காடுகளில் வாழ்கிறது.

பறவைகளை அங்கு குடியேற எது ஈர்க்கிறது:

இந்த நாடுகளை பறவைகள் தங்கள் அடைக்கலமாக ஆக்குவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் அதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மலைகள், மழைக்காடுகள் மற்றும் கடலோரப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு நிலப்பரப்புகளில், அதிகமான பறவை இனங்களுக்கு ஏராளமான வாழ்விடங்களை வழங்குகின்றன. இரண்டாவதாக, காலநிலை ஒரு குறிப்பிடத்தக்க காரணமாகும். அதாவது இந்த நாடுகளில் வெப்பமண்டல(tropical) மற்றும் மிதவெப்ப மண்டல(subtropical) காலநிலைகள் உள்ளன. அவை பல பறவை இனங்களுக்கு ஏற்றவையாக இருக்கிறது. கடைசியாக, இந்தப் பகுதிகளில் மேற்கொள்ளும் பாதுகாப்பு முயற்சிகளால் பறவைகளின் வாழ்விடங்களை பாதுகாக்கவும் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

பறவைகள் இருப்பதால் இயல்பாக வரும் நன்மைகள்:

அதிக எண்ணிக்கையிலான பறவை இனங்கள் இருப்பது இந்த நாடுகளுக்கு பல நன்மைகளைத் தருகின்றன. சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுலா ஒரு முக்கிய நன்மையாகும். இதனால் உலகெங்கிலும் உள்ள பறவைக் கண்காணிப்பாளர்கள் இந்தப் பகுதிகளில் திரண்டு, உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்தி பல வேலைகளை உருவாக்குகிறார்கள். கூடுதலாக, பறவைகள் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை விதை பரவல்(seed dispersal), மகரந்தச் சேர்க்கை(pollination) மற்றும் பூச்சிகளின் எண்ணிக்கையின் குறைப்பு ஆகியவற்றில் உதவுகின்றன. ஒட்டுமொத்தமாக இது சுற்றுச்சூழலின் சமநிலைக்கு பெரிதும் பங்களிக்கின்றது. கடைசியாக, பறவைகளின் இந்த மொத்த சமுதாயம் பல விஞ்ஞான ஆராய்ச்சி வாய்ப்புகளை மேம்படுத்துகிறது. அவற்றின் நடத்தைகளை வைத்து, சுற்றுச்சூழல் சார்ந்த பல ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகளால் இங்கு மேற்கொள்ள முடிகிறது.

இப்படி, கொலம்பியா, பெரு மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் காணப்படும் நம்பமுடியாத இந்த பறவைகளின் கூட்டம் அவர்களுக்கு பல வழிகளில் தெரிந்தோ தெரியாமலோ நன்மை அளிக்கின்றன. இதன் காரணமாக பார்க்கப்படும் அங்குள்ள சீதோஷ்ண நிலை இதற்கு பெரும் சாதகமாக இருக்கின்றது. ஆகையால், உலகின் மற்ற இடங்களில் இந்த நிலையை வர வைக்க முடியாவிட்டாலும், ஆங்காங்கே இருக்கும் மரங்களையாவது வெட்டாமல் விட்டாலே, பறவைகளால் வரும் பல நன்மைகளை எல்லோராலும் பெற முடியும்.

நித்திய சொர்க்கவாசல் உள்ள கலியுக வேங்கடேச பெருமாள் கோயில் தெரியுமா?

தோஷங்கள், பாவங்கள் போக்கும் பாப விமோசனப் பெருமாள்!

ஐஸ்கிரீமின் வரலாறு என்ன தெரியுமா? 

ஆயில் இல்லாமல் சமைப்பது ஆரோக்கியம் தருமா?

Janhvi kapoor beauty tips: ஜான்வி கபூரின் அழகின் ரகசியம் இதுதான்!

SCROLL FOR NEXT