Cow and Cheeta 
பசுமை / சுற்றுச்சூழல்

மாமிச உண்ணிகளின் வயிற்றை விட, தாவர உண்ணிகளின் வயிறு பெரிதாக இருப்பது ஏன் தெரியுமா? 

கிரி கணபதி

நமது கிரகத்தில் வாழும் பல்வேறு வகையான விலங்கினங்கள் பல்வேறு சூழ்நிலைகளில் உயிர் வாழ்வதற்கான குறிப்பிட்ட மாற்றங்களுடன் உள்ளன. இதில், விலங்குகளிடையே நாம் காணும் ஒரு புதிரான வேறுபாடு என்னவென்றால், மாமிச உண்ணிகளின் வயிற்றை விட தாவர உண்ணிகளின் வயிறு பெரியதாக இருப்பதுதான். இதற்கான காரணம் என்னவென்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா? வாருங்கள் இந்த பதிவில் அதுபற்றிய உண்மைகள் குறித்து ஆராய்வோம்.

தாவர உண்ணிகளின் செரிமான அமைப்பு: 

தாவரங்களை முதன்மை உணவாக சாப்பிடும் விலங்குகளை தாவர உண்ணிகள் என்பார்கள். தாவரங்களிலிருந்து கார்போஹைட்ரேட்டுகளை உடைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை பிரித்தெடுக்க சிறப்பு செரிமான அமைப்பு தேவை. இதன் காரணமாகவே பெரிய வயிறு, நீண்ட குடல் மற்றும் பல சிறப்பு அறைகள் போன்றவை தாவர பொருட்களின் செரிமானத்திற்கு தேவைப்படுகிறது. 

தாவரங்களில் செல்லுலோஸ் எனப்படும் சிக்கலான கார்போஹைட்ரேட் உள்ளது. இது மிகவும் கடினமானது என்பதால் உடைபடுவது சவாலானது. இந்த செல்லுலோசை திறம்பட கையாளுவதற்காகவே தாவர உண்ணிகளுக்கு சிறப்பு செரிமான அமைப்புகள் உள்ளன. இந்த விலங்குகளின் பெரிய வயிறுகள், சிம்பயோடிக் நுண்ணுயிரிகள் செழித்து வளர சிறந்த சூழலை வழங்குகிறது. இந்த நுண்ணுயிரிகள் தாவரங்களில் உள்ள கடினமான கார்போஹைட்ரேட்டை உடைக்க உதவுகின்றன. 

தாவர உண்ணிகளின் வயிற்றில் பெரும்பாலும் நொதித்தல் அறைகள் உள்ளன. இந்த விலங்குகள் சாப்பிடும் எல்லா உணவுகளும் முதலில் நொதித்தல் செயல்முறைக்கு உட்பட்ட பிறகே செரிமானமடையும். இந்த நொதித்தல் செயல்முறை நடப்பதற்கு நீண்ட நேரம் ஆகும் என்பதால், பெரிய வயிற்றில் அதிக உணவு சேமிக்கப்படுகிறது. மேலும் தாவர பொருட்களில் இருந்து ஊட்டச்சத்துக்களை முழுமையாக உறிஞ்சுவதற்கு, நீண்ட குடல் அமைப்பு வேண்டும் என்பதால், மாமிச உண்ணிகளை விட தாவர உண்ணிகளின் வயிறு பெரியதாக உள்ளது. 

மாமிச உண்ணிகளின் செரிமான அமைப்பு: 

மாமிச உண்ணிகளின் உணவில் புரதம், கொழுப்பு போன்றவை நேரடியாக இருப்பதால், அவற்றிலிருந்து ஊட்டச்சத்துக்களைப் பெறுவதற்கு சிறிய அளவிலான செரிமான அமைப்பே போதுமானது. மேலும் தாவரப் பொருட்களுடன் ஒப்பிடும்போது விலங்கு திசுக்கள் எளிதில் உடைபட்டு ஜீரணித்துவிடும் என்பதால், மாமிச உண்ணிகளுக்கு செரிமானம் விரைவாக நடக்கிறது. 

மாமிச உண்ணிகள் அதிக அமிலத்தன்மை கொண்ட வயிற்றைக் கொண்டுள்ளன. இது இறைச்சியில் இருக்கும் புரதங்களை விரைவாக முறித்து, இறைச்சியில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது. மேலும் அவற்றின் செரிமான அமைப்புகள் விரைவாகவும் திறமையாகவும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளதால், நீடித்த செரிமான செயல்முறையின் தேவையைக் குறைக்கிறது. இதன் காரணமாகவே மாமிச உண்ணிகளின் வயிறு சிறியதாக உள்ளது. 

இயற்கையின் இந்த அற்புதமான படைப்பைப் பார்க்கும்போது உண்மையிலேயே வியப்பாக உள்ளது. 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

12 ரோபோக்களைப் பேசி மயக்கி கடத்திய ரோபோ… திட்டம் போட்டு செய்த சம்பவம்… கிரிமினலாக மாறிய ஏஐ!

பெற்றோர்களை தெருவில் பிச்சையெடுக்க விடும் பிள்ளைகள்! கொடுமையின் உச்சம்!

இது தெரிஞ்சா முட்டையை தலையில் தடவ மாட்டீங்க! 

SCROLL FOR NEXT