Bohemian furniture 
பசுமை / சுற்றுச்சூழல்

பொஹிமியன் மரச்சாமான்கள் ஏன் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளன?

எஸ்.விஜயலட்சுமி

வீடுகள், அலுவலகங்கள், ஹோட்டல்கள் போன்றவற்றில் உபயோகப்படுத்தப்படும் பொஹிமியன் மரச்சாமான்கள் தனித்துவம் மிக்கவை. இவை இயற்கையான கரிம வடிவங்களின் பிரதிபலிப்புகள். நிலையான, இயற்கையான பொருட்களால் செய்யப்படும் இந்த போஹிமியன் மரச்சாமான்கள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஏற்றவை. அவற்றின் சிறப்பு பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

இயற்கை பொருட்களின் பயன்பாடு: பொஹிமியன் மரச்சாமான்கள் பெரும்பாலும் மரம், பிரம்பு, மூங்கில், சணல், பருத்தி போன்ற இயற்கை பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. அவை புதுப்பிக்கத்தக்க வளங்களில் இருந்து வருகின்றன. இந்தப் பொருட்கள் மக்கும் தன்மை கொண்டவை. இவை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் இயற்கையாக பூமியில் அழிந்துவிடும். செயற்கைப் பொருட்கள் போல் அல்லாமல் சிதைவதற்கு நீண்ட நேரம் எடுக்காது.

நிலைத்தன்மை: பொஹோ மரத் துண்டுகள் நிலையான மூலங்களில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளன. இயற்கை வளங்களை குறைக்காமல் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக, மிக விரைவாக வளரும் மூங்கில் தாவரங்களிலிருந்து மரச்சாமான்கள் செய்யலாம். கடினமான மரங்களுக்கு நிலையான மாற்றாக இவை அமைகின்றன.

மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டுப் பொருட்கள்: பொஹோ பாணியில் பெரும்பாலும் பழங்கால, மறுசுழற்சி செய்யப்பட்ட அல்லது மறுபடியும் பயன்படுத்தப்பட்ட மரச்சாமான்கள் அடங்கும். பழைய கட்டடங்கள் அல்லது தளபாடங்களில் இருந்து மறுசுழற்சி செய்யப்படுவது பொஹோ பாணியின் சிறப்பம்சம். புதிய மரங்களை வெட்டாமல் பழைய பொருட்களிலிருந்து மரச்சாமான்கள் செய்து கொள்ளலாம் என்பது இதன் தனித்துவத்தை குறிக்கிறது. பழைய பொருட்களை தூக்கி எறிவதற்கு பதிலாக அவற்றிற்கு புதிய வாழ்க்கை அளிக்கலாம். இது கழிவுகளை குறைக்க உதவுகிறது. உதாரணமாக, பழங்கால மரத்தாலான ட்ரெஸ்ஸிங் டேபிளை மீண்டும் வர்ணம் பூசி அதை காபி மேசையாகப் பயன்படுத்தலாம். அல்லது பழைய மரப்பெட்டிகளை உபயோகித்து அலமாரிகளாக மாற்றலாம்.

கைவினைப் பொருட்கள்: பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி உள்ளூர் கைவினைஞர்களால் இவை  கையால் தயாரிக்கப்படுகின்றன. இதனால் உள்ளூர் பொருளாதாரங்களை ஆதரிப்பதோடு வெகுஜன உற்பத்தி மற்றும் கப்பல் மூலம் வரும் கார்பன் தடமும் குறைகிறது. கைவினைப் பொருட்கள் சிறிய அளவில் தயாரிக்கப்படுகின்றன. பெரிய அளவிலான தொழிற்சாலை உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் ஆற்றல் பயன்பாடு மற்றும் கழிவுகளை குறைக்கிறது.

நீடித்து உழைக்கும்: பொஹோ பொருட்கள் பெரும்பாலும் நீடித்து உழைக்கக் கூடியதாக இருக்கும். இவற்றை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. காலப்போக்கில் வளங்களின் நுகர்வைக் குறைக்க உதவுகிறது. உயர்தர நீடித்த துண்டுகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் இவை நீண்ட காலத்துக்கு உபயோகமாகும்.

இயற்கைக்கு முக்கியத்துவம்: பொஹோ பாணியில் பெரும்பாலும் தாவரங்கள் மற்றும் பசுமை போன்ற இயற்கை கூறுகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இவை காற்றின் தரத்தை மேம்படுத்துகின்றன மற்றும் மக்களை இயற்கையுடன் இணைக்கின்றன. சுற்றுச்சூழல் நட்பு மற்றும்  இயற்கையான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கின்றன. பொஹோ தளபாடங்கள் பல்வேறு இயற்கை பொருட்களின் கலவையால் உருவாக்கப்படுபவை. பருத்தி, கைத்தறி, கம்பளி போன்ற துணிகளை வைத்து மூங்கில், சணல் போன்ற இயற்கை பொருட்களாலான மரச்சாமான்கள் செய்யப்படுகின்றன. மரத்தாலான காபி டேபிளுடன் மென்மையான பட்டுப் படுக்கையை இணைத்து, அல்லது விளிம்புகள் கொண்ட விரிப்பை சேர்ப்பது போன்ற கலவையான கட்டமைப்பு பாணியின் மையமாக போஹோ மரச்சாமான்கள் உள்ளன.

வண்ண இணைப்பு: பொஹோ மரச்சாமான்கள் பொதுவாக பழுப்பு, கிரீம், ஆலிவ் பச்சை போன்ற நடுத்தர வண்ணங்களுடன் அடர் சிவப்பு, ஆரஞ்சு, பழுப்பு மற்றும் கடுகு, மஞ்சள் போன்ற செம்மையான சூடான நிறங்களுடன் கலக்கப்படுகிறது. இவற்றுடன் பிரகாசமான டர்க்காய்ஸ், கோபால்ட் ப்ளூ, மெஜந்தா மரகதப் பச்சை ஆகியவற்றில் கண் கவரும் தலையணைகள், விரிப்புகள் போன்றவை இணைக்கப்படும்போது கண்களுக்கு மிக அழகாக இருக்கும்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT