காற்று மாசுபாடு பிரச்னை உலகெங்கிலும் உள்ள பல முக்கிய நகரங்களை பாதித்துள்ளது. ஆனால், அதில் சில நகரங்களிலேயே இந்தியாவில் உள்ள டெல்லியைப் போலவே கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.
என்னதான் டெல்லி அதன் கலாசாரம், பாரம்பரியத்திற்கு பெயர் பெற்றதாக இருந்தாலும், துரதிஷ்டவசமாக கடுமையான காற்று மாசுபாட்டை எதிர்கொண்டு வருகிறது. இந்த நகரின் காற்றின் தரக் குறியீடு தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்து வருவதால், இதற்கான காரணி என்ன என்பதை நாம் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும்.
உலகிலேயே காற்று மாசுபாட்டால் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் டெல்லி ஏன் தனித்து நிற்கிறது என்பதற்கான காரணங்களாக புவியியல், வாகன உமிழ்வு, தொழில்துறை நடவடிக்கைகள் மற்றும் விவசாய நடைமுறைகள் போன்ற எண்ணற்ற காரணிகள் அடங்கியுள்ளது.
புவியியல் நிலை: டெல்லியின் புவியியல் நிலை அதன் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. முற்றிலும் நிலம் சூழ்ந்த பரப்பு மற்றும் இந்தோ - கங்கை சமவெளிக்கு அருகாமையில் இருப்பதால், இந்த நகரம் புவியியல் குறைபாடுகளை அனுபவிக்கிறது. இந்தப் புவியியல் நிலைப்பாடு காற்றின் மாசுபாட்டை அதிகரிக்கிறது. இதன் விளைவாக காற்றில் புகை மற்றும் தூசிக்கள் அதிக அளவில் குவிந்து, நகரின் வானிலைக்கு ஏற்ப மாசுக்கள் தரைக்கு நெருக்கமாக வந்துவிடுகிறது.
வாகன உமிழ்வு: காற்று மாசுபாட்டிற்கு வாகன உமிழ்வும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது காற்று மாசின் அளவை அதிகரிக்க வழி வகுத்து, நகரில் மோசமான நிலைமையை ஏற்படுத்துகிறது. மோசமாகப் பராமரிக்கப்படும் வாகனங்கள் மற்றும் சாலைகளில் அதிக எண்ணிக்கையில் இயங்கும் கார்கள் ஆகியவை கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் தூசுக்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் மாசுகளை வெளியேற்றுகிறது. இதனால் காற்றின் தரம் மேலும் மோசமடைகிறது.
தொழில்துறை: விரைவான நகரமயமாக்கல் மற்றும் தொழில்துறை வளர்ச்சி காரணமாகவும் காற்றின் தரம் குறைகிறது. தில்லியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமான தொழிற்சாலைகள் இருப்பதால், தொழில்துறை கழிவுகள் வளிமண்டலத்தில் தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் மற்றும் தூசிகளை வெளியேற்றி காற்றின் தன்மையை முற்றிலுமாக பாதிக்கிறது.
விவசாயம்: மேலும், பருவ மழைக்கு பிந்தைய காலங்களில் டெல்லிக்கு அருகில் உள்ள மாநிலங்களில் விவசாயக் குப்பைகளை எரிக்கும் பழக்கத்தினால், டெல்லியில் அதிகப்படியான மாசு ஏற்படுகிறது. பயிர் எச்சங்களை எரிப்பதினால் காற்றில் கணிசமான அளவு மாசு வெளியேறி இப்பகுதியின் காற்றின் தரத்தை மோசமாகிவிடுகிறது.
மேற்குறிப்பிட்டுள்ள இத்தகைய காரணங்களினாலேயே டெல்லியில் அதிகப்படியான காற்று மாசுபாடு அதிகரிக்கிறது.