Strange trees 
பசுமை / சுற்றுச்சூழல்

விசிலடிக்கும் மரம் தெரியுமா?

தேனி மு.சுப்பிரமணி

மரங்களில், மரத்தைக் கொல்லும் மரம், பாட்டில் மரம், மெழுகுவர்த்தி மரம், யானைக் காது மரம், விசிலடிக்கும் மரம் என்று சில விசித்திரமான மரங்கள் இருக்கின்றன. இந்த மரங்களைப் பற்றித் தெரிந்து  கொள்ளலாமா?

மரத்தைக் கொல்லும் மரம்:

Ficus Aurea Tree

மரங்களில் மோரேசியீ (Moraceae) குடும்பத்தில் ஃபைக்கஸ் ஆரியா (Picus Aurea) எனப்படும் தாவரவியல் பெயர் கொண்ட நசுக்கிக்கொல்லும் அத்தி எனப்படும் ஒரு மரம் இருக்கிறது. இம்மரம் 60 அடி உயரம் வளரக்கூடியது. இது ஒரு தொற்று மரமாகும். முதலில் பறவைகள் இதன் பழத்தைச் சாப்பிட்டு, வேறு மரத்தின் கிளைகளில் இதன் எச்சம் விழுகிறது. நல்ல சூழ்நிலை கிடைக்கும் போது விதை முளைத்து வேர் விடுகிறது. வேர் மிக நீண்டு வளர்கிறது. இதனுடைய வேர் மிக நீளமானது. இது மரத்தைச் சுற்றித் தரையை அடைகிறது. தரையிலிருந்து மிக அதிகப்படியான நீரை மேலும், மேலும் உறிஞ்சி வேகமாக வளர்கிறது. மேலும் பல வேர்கள் மரத்தைச் சுற்றிக் கொண்டு தரையை அடைகின்றன. மரம் வளர வளர இதன் வேர் கழுத்தை நெருக்குவது போல் நெருக்குகிறது. இந்த அத்திமரம் வேகமாக வளர்ந்து, நிலத்தில் உள்ள நீரை அதிக அளவில் உறிஞ்சிக் கொள்வதாலும், சூரிய ஒளி, காற்று ஆகியவற்றின் பற்றாக்குறையாலும், இது தொற்றி வளர்ந்த மரம் சாகடிக்கப்படுகிறது. மேலும் அதிகப்படியான வேர் வளர்ந்து இம்மரம் பெரிதாகிறது. 

பாட்டில் மரம்:

Brachychiton Rupestris Tree

மரங்களில் பிராக்சிகிட்ரான் ரூபாஸ்ட்ரிஸ் (Brachychiton Rupestris) எனும் தாவரவியல் பெயர் கொண்ட ஆஸ்திரேலியாவில் பாட்டில் மரம் இருக்கிறது. இம்மரம் 60 அடி உயரம் வளரக் கூடியது. இதன் அடிமரம் மிகவும் விசித்திரமாக பாட்டில் வடிவத்தில் உள்ளது. அடிப்பகுதி 12 அடி விட்டம் கொண்டுள்ளது. மரத்தின் அடிப்பகுதி மேல் நோக்கி செல்லச் செல்லக் குறுகிய கழுத்து உள்ளது. இதிலிருந்து பல கிளைகள் விரிந்து பறந்து செல்கின்றன. கை வடிவ கூட்டிலைகள் உள்ளன. இம்மரத்தின் கட்டை பகுதி மிருதுவான பஞ்சு போன்ற சோற்றணு திசுக்களால் ஆனது. இவற்றில் நீர் சேமித்து வைக்கப்படுகின்றன. கோடை காலங்களில் இம்மரத்தின் பாகங்களுக்கு தேவையான நீர் இவற்றிலிருந்து கிடைக்கிறது. ஆஸ்திரேலியாவில் இவ்வகை மரங்கள் அதிக அளவில் இருக்கின்றன. 

மெழுகுவர்த்தி மரம்:

Parmentiera cereifera Tree

பார்மன்ச்டீரியா செரிபெரா (Parmentiera cereifera) எனும் தாவரவியல் பெயர் கொண்ட மெழுகுவர்த்தி மரம் இருக்கிறது. இதன் பட்டை கரடுமுரடாக இருக்கும். இதில் இரட்டை அல்லது மூன்று கூட்டிலைகள் உள்ளன. மரத்தின் அடிப்பகுதியிலும், கிளைகளின் தண்டுப் பகுதியிலும் பூக்கள் வருகின்றன. இவை மரத்தின் அடிப்பகுதியிலும், கிளைகளிலும் தொங்கிக் கொண்டு இருக்கும். இது ஒன்று முதல் 3 அடி நீளம் வரை இருக்கும். இம்மரத்தில் ஆப்பிள் பழத்தின் வாசனை இருக்கும். இக்காய்கள் மெழுகுவர்த்தி போன்றே இருக்கும். இதனால் இதை மெழுகுவர்த்தி மரம் என்று அழைக்கிறார்கள். இவை மெக்சிகோ மற்றும் பனாமா ஆகிய இடங்களில் வளர்கின்றன. இவற்றில் இரண்டு இனங்கள் மட்டுமே உள்ளன.

யானைக் காது மரம்:

Enterolobium cyclocarpum tree

எண்டெரோலொபியம் சைக்ளோகார்பம் (Enterolobium cyclocarpum) எனும் தாவரவியல் பெயர் கொண்ட யானைக் காது மரம் இருக்கிறது. இம்மரம் அமெரிக்காவின் வெப்பவளையப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டது. இது நடு மெக்சிகோவில் இருந்து வடக்கில் பிரேசில் மற்றும் வெனிசுவேலா வரையில் பரவியுள்ளது. இதன் முற்றிய விதைக் காய்கள் அசைக்கும் போது அதனுள் உள்ள விதைகளால் சலசலக்கும் ஒலியைத் தரக்கூடியன. காய்கள் கேடயம் போன்று பட்டையாக யானையின் காதைப் போன்ற தோற்றத்திலிருக்கிறது. இதனாலேயே இந்த மரம், யானைக் காது மரம் எனும் பெயரைப் பெற்றது. இந்த மரங்கள் குறிப்பாக, கோஸ்ட்டா ரிக்காவின் குவானா காஸ்ட் மாகாணத்தில் பெருமளவு காணப்படுகிறன. இந்த மரங்கள் நடுத்தர அளவில் இருந்து பெரிய அளவு வரை உள்ளன. இவை 25 முதல் 35 மீ உயரம் வரை வளர்கின்றன. மரத்தின் அடிப்பாகம் 3.5 மீ விட்டம் வரை இருக்கும். இவை அவற்றின் அளவைப் பொறுத்து நல்ல நிழல் தரும் மரங்களாக உள்ளன. இந்த மரம் கோஸ்டா ரிக்கா நாட்டின் தேசிய மரமாகவும் இருக்கிறது.

விசில் அடிக்கும் மரம்:

Vachellia drepanolobium Tree

அக்கேசியா ட்ரிபனோலோபியம் (Vachellia drepanolobium) எனும் தாவரவியல் பெயர் கொண்ட விசில் அடிக்கும் மரம் ஒன்று இருக்கிறது. இதனை விசில் முள் மரம் என்றும் அழைக்கின்றனர். கிழக்கு ஆரிக்காவைத் தாயகமாக் கொண்ட ஒரு சிறிய மரமாகும். கிளைகள் கிடைமட்டமாக வளர்கிறது. மேல்பகுதி தட்டையாக இருக்கும். பட்டை கருப்பாக இருக்கும். இம்மரத்தில் நீண்ட வெள்ளை முட்கள் 8 செ.மீ. நீளத்திற்கு உள்ளது. இவற்றில் வரும் பூக்கள் வெளுத்த மஞ்சள் நிறத்தில் உருண்டையாக இருக்கும். ஒவ்வொரு முள்ளின் அடியிலும் பருத்த, வெற்றிடமான பை போன்றுள்ளது. இந்தக் காலி இடத்தில் எறும்புகள் உள்ளே போய் தங்குகின்றன. எறும்புகள் வெளியே வந்த பிறகு, காற்று, துவாரத்தின் மூலம் உள்ளே செல்லும் போது, விசில் போன்ற சப்தம் வருகிறது. மரத்தில் உள்ள அனைத்து வெற்றிடத்தின் உள்ளே காற்று சென்று வரும் போது அதிகப்படியான விசில் சப்தம் வருகிறது. இம்மரம் ஆப்பிரிக்காவில் வளர்கிறது. கென்யா, உகாண்டா ஆகிய பகுதிகளிலும் வளர்கிறது.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT