Elephants 
பசுமை / சுற்றுச்சூழல்

பசிக்காக 200 யானைகளை கொல்ல தயாராகும் ஜிம்பாப்வே... இது என்ன கொடுமையடா சாமி?

ராஜமருதவேல்

சமீபத்தில் யானைகளை கொன்ற நமீபியா அரசை தொடர்ந்து தற்போது ஜிம்பாப்வே நாடும் யானைகள் உள்ளிட்ட பல்வேறு காட்டு விலங்குகளை கொலை செய்ய முடிவு செய்துள்ளது. நான்கு தசாப்தங்களில் மிக மோசமான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களுக்கு உணவு வழங்குவதற்காக 200 யானைகளை படுகொலை செய்ய ஜிம்பாப்வே திட்டமிட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

அதிகாரிகள் யானை படுகொலையை செய்வதற்கான திட்டங்களை தீட்டி அதற்கான சிறப்பு வழிமுறைகளில் நடைமுறைப்படுத்த முயற்சி செய்வதாக  ஜிம்பாப்வே பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் டினோஷா பிராவோ தெரிவித்தார். யானைகளை வேட்டையாடுவதற்கு தேவைப்படும் சமூகங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களுக்கு யானை இறைச்சி விநியோகிக்கப்படும் என்றும் ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்பட்ட 200 விலங்குகளில் சிலவற்றையும் அந்த நிறுவனம் கொல்லும் என்றும் கூறினார்.

ஹ்வாங்கே தேசியப் பூங்காவில் 45,000 யானைகள் உள்ளன, ஆனால் தற்போது 15,000 யானைகளை மட்டுமே பராமரிக்க முடியும் என்று பிராவோ குறிப்பிட்டார். பூங்கா அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜிம்பாப்வேயின் மொத்த யானைகளின் எண்ணிக்கை சுமார் 100,000, நாட்டின் தேசிய பூங்காக்கள் ஆதரிக்கும் திறனை விட இரண்டு மடங்கு அதிகம். ஜிம்பாப்வே நமீபியா நாடுகளுக்கு நடுவில் உள்ள போட்ஸ்வானா பகுதிகளில் மட்டும் 130,000 யானைகள் உள்ளதாக தகவல்கள் உள்ளன.

தென்னாப்பிரிக்க நாடுகளில் தூண்டப்பட்ட வறட்சி அதனை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது, இது பரவலான பயிர் தோல்விக்கு வழிவகுத்தது மற்றும் பிராந்தியம் முழுவதும் 6.8 கோடி மக்கள் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. கடுமையான வறட்சி நிலைமைகளுக்கு மத்தியில் பசியால் வாடும் மக்களுக்கு உணவளிக்க நூற்றுக்கணக்கான காட்டு யானைகள் மற்றும் பிற விலங்குகளை படுகொலை செய்யும் திட்டத்தை ஜிம்பாப்வே மற்றும் நமீபியா அரசு அறிவித்துள்ளன.

மூன்று வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக நமீபியாவில் 83 காட்டு யானைகள் உட்பட 700 க்கும் மேற்பட்ட காட்டு விலங்குகளைக் கொல்வது  நடந்து வருகிறது.

வறட்சிப் பகுதிகளில் மனிதர்களுக்கும் வன விலங்குகளுக்கும் இடையில் உணவுக்கான போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. உணவுக்கும் தண்ணீருக்கும் பஞ்சமாகியுள்ள சூழலில் மக்களும் மாக்களும் ஒருவருக்கு ஒருவர் பெரும் இடையூறாக இருக்கின்றனர். கடந்த வருடத்தில் மட்டும் யானையால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 54. தற்போது வன விலங்குகளை மனிதர்கள் வாழாத பகுதிகளுக்கு நகர்த்தியும் சென்று கொண்டுள்ளனர்.

தென் ஆப்ரிக்கா நாடுகளின் வறட்சிக்கு அவர்களின் மோசமான பயிர் கொள்கைகளும், தவறான பொருளாதார கொள்கைகளும் காரணம். எத்தனைக் காரணங்கள் இருந்தாலும் மக்களின் பசியை காரணம் காட்டி வன விலங்குகளை கொல்வது சரியான நடைமுறை ஆகாது. நாட்டில் மக்களுக்கு என்று ஒரு இறையாண்மை உள்ளது போல வனத்தில் விலங்குகளுக்கு என்று ஒரு இறையாண்மை உள்ளது . மனிதர்கள் அதில் தலையிடுவது தவறு. வறட்சிக்காக தெற்கு ஆப்பிரிக்க நாடுகள் உலக நாடுகளின் உதவியை கோரலாம் அல்லது ஐநா சபையை நாடலாம் என்பது சமூக மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்களின் பரிந்துரையாக உள்ளது.

10 Golden Rules of the Road: A Guide for Kids!

சிறுகதை: புளிய மரத்தின் உச்சியிலே..!

விஞ்ஞானமா, மெய்ஞானமா, எது சிறந்தது?

இரவில் மட்டுமே மலரும்; நறுமணம் வீசும்; மனதை மயக்கும் பச்சை நிறப்பூ - அது என்ன பூ?

சண்டிகரை சுற்றிப் பார்க்க வேண்டிய அருமையான இடங்கள்!

SCROLL FOR NEXT