மாம்பழ ஹல்வா: ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் நன்கு பழுத்த ஒரு பெரிய மாம்பழத்தின் விழுதையும் கால் கப் சர்க்கரையும் சேர்த்து நன்கு மை போல் அரைக்கவும். அத்துடன் அரை கப் காய்ச்சி ஆறவைத்த பாலை சேர்த்து அரைக்கவும். பின்னர் ஒரு பௌலில் ஒரு ஸ்பூன் சோள மாவு ஒரு கப் பால் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் அரைத்த மாம்பழ விழுதை சேர்த்து கொதிக்க வைத்து கரைத்த சோளமாவை சேர்த்து கை விடாமல் கிளறவும். ஹல்வா பதத்திற்கு கடாயில் ஒட்டாமல் வந்ததும் அடுப்பை நிறுத்தி விட்டு மேலே 2 ஸ்பூன் நெய் விட்டு இறக்கி ஒரு நெய் தடவிய பௌவுலுக்கு மாற்றவும்.
பரங்கி வெல்ல ஹல்வா: பரங்கி காயை துருவி 2 கப் அளவு எடுக்கவும். இந்த துருவலை 2 ஸ்பூன் நெய் விட்டு நல்ல மணம் வரும் வரை வதக்கி பால் அல்லது நீரில் வேகவிடவும். அளவாக பால் ஊற்றி வேக வைத்தால் விரைவில் வேகும். கையில் நசுக்கி பார்த்து வெந்ததும் தண்ணீர் பசை இல்லாமல் சுண்டும் வரை இன்னும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து வதக்கவும் வெல்லத்தை துருவி 1 கப் எடுக்கவும். இனிப்பு தேவைக்கு அளவு கூடவோ, குறைவாகவோ எடுத்துக்கலாம். நன்றாக வெந்த கலவையில் வெல்லப்பொடி சேர்த்து மேலே இன்னும் நெய் விட்டு கிளறி இறக்கவும். இது பார்க்க இருண்ட கலரில் வரும் என்பதால் வெள்ளரி விதை அல்லது பாதாம் பருப்பால் மேலே அலங்கரிக்கலாம்.
முலாம் பழ ஹல்வா: முலாம் பழத்தை தோல் சீவி கொட்டைகள் நீக்கி மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அரைத்த விழுதை முதலில் வாணலியில் கொட்டி கெட்டியாகும் வரை கிளறவும். கெட்டிப்பட்டதும் சர்க்கரை சம அளவு சேர்த்துக் கிளறவும். நடுவில் 2 ஸ்பூன் நெய்யும் சேர்க்கலாம். அல்வா பதம் வரும் போது சர்க்கரை இல்லாத கோவா 50 கிராம் போட்டால் சீக்கிரமே கெட்டிப்படும். மொத்தம் 4 ஸ்பூன் நெய் இருந்தாலே போதும். இது துண்டுகள் போட வராது. ஆனால் முலாம் பழ வாசனையே இல்லாமல் இருக்கும். விரும்பினால் ஏலக்காய்த்தூள் போடலாம்.
உளுந்து ஹல்வா: ஒரு கப் உளுந்தை வாணலியில் பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் நைசாக பொடிக்கவும். 1/2 லிட்டர் காய்ச்சின பாலை எடுத்து கொள்ளவும். 1 கப் பொடித்த வெல்லத்தில் சிறிதளவு பால் விட்டு பாகு காய்ச்சவும். மீதி பாலில் இந்த உளுந்து மாவை கட்டியின்றி கலக்கவும். ஏலக்காய்த்தூள் சேர்த்து 1 சிட்டிகை உப்பு போட்டால் இனிப்பை கூட்டிக்காட்டும் வெல்ல பாகு கம்பி பதம் வந்ததும் இந்த மாவை கொட்டி கிளறி அவ்வப்போது நெய் விடவேண்டும். கலவை ஒரு கட்டத்தில் ஒட்டாமல் வரும். அப்போது இறக்கி வைத்து நிதானமாக கிளறி சுருண்டு வந்ததும் தட்டில் கொட்டி மேலே முந்திரி பருப்பை போடவும்.
கம்பு ஹல்வா: கம்பை ஊறவைத்து அரைத்து பால் எடுக்கவும். பால் உள்ள அளவுக்கு சம அளவு வெல்லத்தூள் வேண்டும். வெல்லத்தை கரைத்து வடிகட்டி பாகு காய்க்கவும். அரைத்த கம்பு பாலை 2 ஸ்பூன் நெய்விட்டு இன்னொரு அடுப்பில் கிளறவும். கைவிடாமல் கிளறி கலவை கெட்டி படும் போது வெல்லப் பாகை சேர்த்து கிளறி இறக்கவும். நெய் அவ்வப்போது விட்டு கிளற வேண்டும். சுக்குப்பொடி வாசனைக்கு சேர்க்கலாம் பார்க்க களி போல் இருக்கும் இது ஆரோக்கியமானது.