Aadi Kummayam Recipe. 
உணவு / சமையல்

ஆடி மாத ஸ்பெஷல் கும்மாயம் ரெசிபி செய்யலாம் வாங்க!

கிரி கணபதி

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் சிறப்பு வாய்ந்தது. இது பெருமாள் வைகுண்டம் விட்டு பூமியில் எழுந்தருளும் மாதம் என்பதால் ஆடி மாதத்தில் பல்வேறு வழிபாடுகள் விழாக்கள் நடைபெறுகின்றன. அதேபோல ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகவும் பார்க்கப்படுகிறது. ஆடி பதினெட்டில் ஆடிப்பெருக்கு அன்று செட்டிநாட்டு உணவு முறைகளில் ஒன்றான ஆடி கும்மாயம் ரெசிபி செய்யப்படும்.

குறிப்பாக, இந்த உணவை பெண்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு கொடுப்பார்கள். இது அவர்களின் எலும்புகளை வலுவாக்கி, உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த அற்புதமான ரெசிபியை இந்த ஆடி மாதத்தில் நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்: 

  • பச்சரிசி மாவு 1/4 கிலோ 

  • உளுந்து மாவு 1/4 கிலோ 

  • வெல்லம் 1 கப்

  • நெய் ½ ஸ்பூன்

  • ஏலக்காய் தூள் ¼ ஸ்பூன்

  • ஜாதிக்காய் தூள் ¼ ஸ்பூன் 

  • முந்திரி 10

  • உப்பு ¼ ஸ்பூன்

  • தண்ணீர் தேவையான அளவு 

செய்முறை: 

முதலில் அரிசி மற்றும் உளுந்து மாவை தனித்தனியாக வாணலியில் சேர்த்து வறுத்து வைத்துக் கொள்ளவும். 

பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வெல்லத்தை போட்டு கரைந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது வறுத்து வைத்துள்ள மாவில் வெல்லத் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். 

அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து சூடானதும் வறுத்து வைத்துள்ள மாவை அதில் ஊற்றி கிளறவும். இப்போது, அதில் ஏலக்காய் மற்றும் ஜாதிக்காய் தூள் சேர்த்து கிளறிக் கொண்டே இருங்கள். 

நெய் லேசாக பிரிந்து வரும் அளவுக்கு கிளறினால் போதும். இறுதியாக நறுக்கி வைத்துள்ள முந்திரியைத் தூவி அலங்கரித்தால் சூப்பரான சுவையில் ஆடி கும்மாயம் தயார். 

இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாப்பிடலாம். அந்த அளவுக்கு உடலுக்கு ஆரோக்கியமான உணவாகும். ஆடி மாதத்தில் இந்த அற்புதமான ரெசிபியை செய்து பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

இந்த சின்னஞ்சிறு காயில் ஒளிந்திருக்கும் சூப்பர் நன்மைகள் தெரியுமா?

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

SCROLL FOR NEXT