மா, பழா, வாழை ஆகியவற்றை முக்கனிகள் என்று கூறுவார்கள். இப்பழங்கள் மிகவும் எளிதாக கிடைக்கும் பழங்கள் என்பதாலும் நிறைய சத்துக்களை கொண்டுள்ளதாலும் இவை முக்கனிகளாக கொண்டாடப்படுகிறது என்று சொல்லலாம். எனவே இன்று இந்த முக்கனிகளை வைத்து வீட்டிலேயே சுவையான மற்றும் சத்தான அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
முக்கனி அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
மாம்பழம்-1.
பலாப்பழ சுளை-6.
வாழைப்பழம்-1.
சோளமாவு-1/4 கப்.
நெய்-6 தேக்கரண்டி.
முந்திரி பருப்பு-10.
ஏலக்காய் தூள்- சிறிதளவு.
உப்பு-தேவையான அளவு.
முக்கனி அல்வா செய்முறை விளக்கம்:
முதலில் மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் ஆகியவற்றை சிறிதாக வெட்டி வைத்து கொள்ளவும். இப்போது அதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும். பிறகு 1/4கப் சோள மாவில் முக்கால் கப் தண்ணீர் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து அதில் 2 தேக்கண்டி நெய் சேர்த்து உருகியதும் 10 முந்திரி பருப்பை போட்டு நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். இப்போது அதே நெய்யில் அரைத்து வைத்திருக்கும் பழங்களை சேர்த்து நன்றாக கிண்டவும். அடுப்பில் 2 நிமிடம் வரை கிண்டிய பிறகு 3/4 கப் சக்கரையை சேர்க்கவும். அத்துடன் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து விடவும். இப்போது அத்துடன் ஏற்கனவே கலந்து வைத்த சோளமாவு தண்ணீரை சேர்த்து கொள்ளவும். இப்போது நன்றாக கிண்ட வேண்டும். அல்வா நன்றாக திரண்டு வரும் போது மீதம் உள்ள 4 தேக்கரண்டி நெய்யை ஊற்றவும். அல்வா ஃபேனில் ஒட்டாமல் வரும்போது ஏலக்காய் சிறிதளவும், வறுத்து வைத்திருக்கும் முந்திரி பருப்பையும் சேர்த்து நன்றாக கிண்டிவிட்டு இறக்கவும். அவ்வளவுதான் அல்வா தயார்.
ஒரு பாத்திரத்தில் நெய் தடவி அதில் அல்வாவை ஊற்றி ஆறவிடவும். நன்றாக அல்வா ஆறியதும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும். சாதாரணமாக ஒரு பழத்தில் அல்வா செய்தாலே சுவை அள்ளும். இதில் முக்கனி என்றால் சொல்லவா வேண்டும். முக்கனிகளையும் சேர்த்திருப்பதால் குழந்தைகளுக்கு தாராளமாக தரலாம். அவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டில் ஒரு முறை செய்து பாருங்கள்.