அடுப்பில் சாதத்தை வைத்துவிட்டு அது ரெடியாவதற்குள் சுலபமா இந்த நார்த் இந்தியன் 'லவுக்கி காய் கோஃப்தா' கறியை செய்துவிடலாமே! அதன் செய்முறை எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கோஃப்தா செய்வதற்கு:
நடுத்தர அளவு சுரைக்காய்(Lauki) 1
கடலை மாவு (besan) ½ கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன்
ஜீரகப் பொடி ½ டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் ½ டீஸ்பூன்
ஓமம் ½ டீஸ்பூன்
உப்பு & எண்ணெய் தேவையான அளவு
கிரேவி செய்ய:
எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டேபிள்ஸ்பூன்
தக்காளி 2
மஞ்சள் தூள் ½ டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் ½ டீஸ்பூன்
பொடிசா நறுக்கிய வெங்காயம் 1
பச்சை மிளகாய் 2
உப்பு மற்றும் நறுக்கிய ஃபிரஷ் மல்லி இலைகள்.
செய்முறை:
சுரைக்காயை தோல் நீக்கி, துருவி, அதிகம் உள்ள நீரைப் பிழிந்து எடுத்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடவும். அதனுடன் கடலை மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், ஜீரகப் பொடி, சிவப்பு மிளகாய் தூள், ஓமம் மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி எண்ணெயில் சிவக்கப் பொரித்து எடுக்கவும். பொரித்தெடுத்த கோஃப்தாக்களை பேப்பர் டவலில் பரத்தி வைக்கவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகத்தைப் போட்டு வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து மணம் வரும் வரை வதக்கவும்.
பின் அதனுடன் தக்காளியை பொடிசா நறுக்கி சேர்க்கவும். அதனுடன் உப்புத் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவிடவும். பிறகு அதனுடன் கிரேவிக்குத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும். பின் பொரித்து வைத்துள்ள கோஃப்தாக்களை கிரேவியில் சேர்க்கவும்.
மீடியம் தீயில் மூடி வைத்து நான்கு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். கடைசியில் கரம் மசாலா தூள், நறுக்கிய ஃபிரஷ் மல்லி இலைகள், மற்றும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி இறக்கவும். சுவையான 'லவுக்கி கா கோஃப்தா' தயார். இதை ரொட்டி மற்றும் சாதத்துடன் பிசைந்து உண்ண சூப்பர் டேஸ்ட் தரும்.