tasty recipes for senior citizens 
உணவு / சமையல்

August 21 - world senior citizens day எப்பப்பாரு இட்லி தோசை தானா? இதுவும் பிடிக்குமே!

ஆதிரை வேணுகோபால்

வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு எப்பப்பாரு இட்லி தோசை மட்டும் தானா... இதோ சில வித்தியாசமான ரெசிபிகளை செய்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள்.

கேழ்வரகு குழிப்பணியாரம்

Kelvaraku kulipaniyaram

தேவையான பொருட்கள்:

  • கேழ்வரகு மாவு- ஒரு கப்

  • ஜவ்வரிசி - 1/4 கப்

  • இட்லி மாவு - கால் கப்

  • மோர் - அரை கப்

  • பச்சை மிளகாய் விழுது - இரண்டு டீஸ்பூன்

  • பொடியாக அரிந்த வதக்கிய காய்கறிகள் - அரைக்கப் (கேரட் கோஸ் குடமிளகாய் வெங்காயம் கலந்து)

  • ஊறவைத்த கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்

  • உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

ஜவ்வரிசியை மோரில் 3 மணி நேரம் ஊற விடவும் .கேழ்வரகு மாவுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து அதோடு இட்லி மாவு தேவையான உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். இதை ஆறு மணி நேரம் புளிக்க விடவும் பிறகு அந்த மாவுடன் ஊறிய கடலைப்பருப்பு, வதக்கிய காய்கறிகள், மிளகாய் விழுது சேர்த்து நன்கு கலந்து பணியார கல்லில் சிறிது( குழிகளில்) எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். சுவையில் அசத்தும் இந்தப் பணியாரம் தொட்டுக்கொள்ள வெங்காய சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

வெந்தயக்கீரை சப்பாத்தி

Vendhaya keerai chapathi

தேவையான பொருட்கள்:

  • கோதுமை மாவு - ஒரு கப்

  • அரிசி மாவு - அரை கப்

  • ரவை - கால் கப்

  • பொட்டுக்கடலை மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்

  • மிகவும் பொடியாக அரிந்த வெங்காயம் - தேவையான அளவு

  • பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை - அரைக்கப்

  • பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்

  • பொடியாக அரிந்த இஞ்சி - சிறிதளவு                        

  • உப்பு எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

இஞ்சியுடன் சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, ரவை பொட்டுக்கடலை மாவு, பொடியாக அரிந்த வெங்காயம் ,பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை, பச்சை மிளகாய் விழுது, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாக மாவாக பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக்கொண்டு , ஒரு ஈரத் துணியை பரப்பி அதன் மேல் உருண்டையை ரொட்டிகளாகத் தட்டி தோசை கல்லில் சுட்டு எடுக்கவும். தயிருடன் கொஞ்சம் உப்பு, சிறிதளவு ஊறுகாய்காரம் சேர்த்து நன்கு கலந்து தொட்டுக் கொண்டால் சுவையில் அசத்தும் இந்த சப்பாத்தி.

திணை வெஜிடபிள் கிச்சடி

Thinai kichadi
  • தினை அரிசி, பாசிப்பருப்பு - தலாகால் கப்

  • பொடியாக நறுக்கிய காய்கறிகள் - கால் கப் (கேரட் பட்டாணி காலிஃப்ளவர், பீன்ஸ்)

  • மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

  • தனியாத்தூள் , சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன் கரம் மசாலா - 1 சிட்டிகை

  • உப்பு எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயத்தை நீளநீளமாக மெல்லிசாக அரிந்து கொள்ளவும். திணை அரிசி மற்றும் பாசிப்பருப்பை குறைந்தது 20 நிமிடம் ஊறவிடவும். பிரஷர்பேனில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை நன்கு வதக்கி காய்கறிகளை போட்டு நன்கு வதக்கவும். பிறகு திணை அரிசி மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து தேவையான உப்பு, மிளகாய்தூள், மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து இரண்டு கப்நீர் விடவும் வெயிட் போட்டு  5 விசில் விட்டு குழைவாக வேகவிடவும்.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு அடை

Sakkaravalli kizhangu adai

தேவையான பொருட்கள்:

  • புழுங்கல் அரிசி - ஒரு கப்

  • சர்க்கரைவள்ளிக் கிழங்கு துருவல் - அரை கப் பச்சை மிளகாய் - இரண்டு

  • பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1

  • சீரகம் - அரை டீஸ்பூன்

  • தேங்காய் துருவல் - கால் கப்

  • பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு                    

  • உப்பு ,எண்ணெய்/நெய் - தேவையான அளவு.

செய்முறை:

அரிசியை ஒரு மணி நேரம் ஊற விட்டு நைசாக அமைத்துக் கொள்ளவும். அரைக்கும் போதே கறிவேப்பிலை நெய் நீங்கலாக எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து தோசை கல் காய்ந்ததும் அடைகளாக தட்டி சுற்றிலும் நெய் அல்லது எண்ணெய் விட்டு சுடச்சுட பரிமாறவும் சுட சுட சாப்பிட சுவையில் அசத்தும் இந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு அடை.

சிகப்பு அரிசி ஆனியன் ஊத்தப்பம்

red rice onion uttapam
  • சிவப்பு அரிசி - ஒரு கப்

  • உளுந்து - கால் கப்

  • வெங்காயம் - ஒன்று

  • மல்லித்தழை - சிறிதளவு

  • உப்பு எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை

சிகப்பு அரிசி + உளுந்து இரண்டையும் நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற விட்டு பிறகு தேவையான உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு மணி நேரம் கழித்து மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை சேர்க்கவும். தோசைக் கல்லை சூடாக்கி மாவை சற்று கனமாக ஊற்றி (ஊத்தப்பமாக)  சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். தொட்டுக்கொள்ள தண்ணியாதேங்காய் சட்னி வைத்தால் அருமையாக இருக்கும்.

இப்படி வித்தியாசமாக, கொஞ்சம் கற்பனை திறன் சேர்த்து, விதவிதமாய் பலகாரங்கள் செய்து பெரியவர்களை அசத்துங்கள். ஹெல்த்தி ஃபேமிலி என்கிற நிறைவு உங்கள் குடும்பத்திற்கு நிச்சயம் கிடைக்கும்.

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

சிறுகதை - தன்மானக் கவிஞன் ராஜாமணி!

SCROLL FOR NEXT