தினம் காலை வேளையில் பரபரவென்று பிள்ளைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் தயார் செய்து டிபனும் செய்வது என்றால் மலைப்பான காரியமாக தோன்றும். டிபன் வகைகள் செய்ய எளிதாகவும் அதே சமயம் சத்துள்ளதாக இருக்க வேண்டும் என்று நினைப்போம். அப்படி சில காலை உணவுகள் இங்கே.
ஜவ்வரிசி உப்புமா
தேவை:
ஜவ்வரிசி - 1 கப்
உருளைக்கிழங்கு -1 கப்
உப்பு - தேவைக்கேற்ப
வறுத்த வேர்க்கடலை - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - 5
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தலை - சிறிது
கருவேப்பிலை – சிறிது
செய்முறை:
ஜவ்வரிசியைக் கழுவி 8 மணி நேரம் ஊறவைத்து நீரை வடித்து வைக்கவும். மிதமான தீயில் சிவக்க வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி மிக்சியில் கரகரப்பாக பொடிக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசிக்கவும். இப்போது ஜவ்வரிசியுடன் உருளைக்கிழங்கு வேர்க்கடலை மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சீரகம், பொடியாக அரிந்த பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி ஜவ்வரிசி கலவையை சேர்த்துக்கிளறி ஐந்து நிமிடங்கள் வைத்திருந்து மேலே கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறலாம். எளிதான சட்டென்று செய்யக்கூடிய ஜவ்வரிசி உப்புமா, பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள். வயிறு நிறைக்கும் என்பது இதன் ஸ்பெஷல்.
இன்ஸ்டன்ட் இட்லி
தேவை:
அரிசி மாவு - மூன்று கப்
ரவை பாசிப்பருப்பு - தலா 1/4 கப்
சற்றே புளித்த கெட்டி தயிர் - 2 கப்
உப்பு - தேவைக்கு
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை
செய்முறை:
பாசிப்பருப்பை அரைமணி நேரம் ஊறவைத்து நீரை வடித்து மிக்சியில் கெட்டியாக அரைக்கவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு, அரைத்த பாசிப்பருப்பு, ரவை, உப்பு, சமையல் சோடா, தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். பத்து நிமிடம் வைத்து ஊறியதும் மினி இட்லிகளாகவோ தட்டு இட்லிகளாகவோ ஊற்றி கெட்டிச்சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறலாம். இந்த இன்ஸ்டன்ட் இட்லியில் நேரமிருந்தால் கேரட் துருவல் பீன்ஸ் வதக்கி சேர்ப்பது போன்றவை உங்கள் சாய்ஸ்.
கோதுமை பொங்கல்
தேவையானவை:
முழு கோதுமை- 1 கப்
பச்சரிசி - 1/4 கப்
பச்சைப்பயிறு - 1/4 கப்
உப்பு - தேவைக்கு
நெய்- நான்கு ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய்- 2
செய்முறை:
கழுவிய கோதுமை, அரிசி, பச்சை பயறுடன் தாராளமாக தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் ஊறவைக்கவும். இதை அப்படியே குக்கரில் வைத்து நன்றாக விசில் வரும் வரை வேகவைக்கவும். வேகவைத்து சிம்மில் 10 நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும். அப்போதுதான் அனைத்தும் குழைந்து இருக்கும். விசில் அடங்கியதும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் சீரகம், கடுகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய மிளகாய், மிளகு தாளித்து குக்கரை திறந்து அதில் மேலாக சேர்த்து மூடி சிறிது நேரம் கழித்து பரிமாறவும். இந்த பொங்கல் நார்ச்சத்து நிறைந்தது. காலை டிபனுக்கு மிகவும் ஏற்றது. இதற்கு தொட்டுக் கொள்ள சாம்பார் அல்லது தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்.