மழை, குளிர் இருந்தாலே சளி, இருமல், தும்மல், சைனஸ் பிரச்சனைகள் ஆரம்பித்து விடும். காற்று மாசுபாடும், தட்ப வெப்பநிலையில் மாறுதலும் ஏற்படும் பொழுது அதிக பிரச்னை கொடுக்கும் சைனஸ். தலைவலி, மூக்கை சுற்றிலும் இரண்டு பகுதிகளிலும் தண்ணீர் சேர்ந்தது போல் சுருக்கென்று குத்தி வேதனை தரும். இதற்கு மூன்று பொருட்களைக் கொண்டு எளிதாக நிவாரணம் பெற முடியும்.
காட்டு முள்ளங்கி லேகியம்:
காட்டு முள்ளங்கி ஒன்று
ஆப்பிள் சிடார் வினிகர் 1/4 கப்
தேன் 1/2 கப்
காட்டு முள்ளங்கி என அழைக்கப்படும் குதிரை முள்ளங்கியை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். அத்துடன் ஆப்பிள் சிடார் வினிகரையும், தேனையும்,1 சிமிட்டு உப்பையும் சேர்த்து நன்கு கலக்கவும். இதனை ஒரு மெல்லிய பருத்தி துணி கொண்டு மூடி அதிக வெளிச்சம் படாத இருட்டான பகுதியில் இரண்டு நாட்கள் வைத்து விடவும். இது திக்கான இருமல் மருந்து பதத்தில் வந்து விடும். எளிதில் கெட்டுப் போகாது. ஃபிரிட்ஜில் வைத்து ஆறு மாதங்கள்வரை பயன்படுத்தலாம்.
காரமான சுவை கொண்ட காட்டு முள்ளங்கியில் அதிக அளவில் சல்ஃபர் அடங்கியுள்ளது.
தேன் தொண்டை மற்றும் மூக்கு தொற்றுகளுக்கு குணமளிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
ஆப்பிள் சிடார் வினிகர் சளி படலத்தை கரைத்து சைனஸ் அழுத்தத்தை போக்கும். இதில் சுவாசப் பாதையை சுத்தம் செய்யும் ஏராளமான ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்களைக் கொண்டுள்ளது.
தலைவலி, மூக்கின் இரு பக்கமும் வீக்கமுடன் கூடிய வலி, நீர் வடிதல் போன்ற சைனஸின் அறிகுறிகள் தோன்றும் பொழுது ஒரு ஸ்பூன் அளவில் இதை சாப்பிட மூக்கடைப்பு சரியாகி சளி, தும்மல், சைனஸ் பிரச்சினைகளை சரி செய்து விடும். அத்துடன் சிறிதளவு எடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும் செய்யலாம்.
நாட்டு மருந்து கடைகளில் நன்கு உலர்த்திய வேர்களும், அதன் பொடிகளும் கிடைக்கின்றன. அதை வாங்கியும் பயன்படுத்தலாம். எந்தப் பக்க விளைவுகளும் இல்லாதது.
முசுமுசுக்கை டீ:
மழைக்காலத்தில் ஏற்படும் இருமல், சளி, மூச்சிரைப்பு போன்ற பிரச்னைக்கு முசுமுசுக்கை டீ பருக நல்ல நிவாரணம் கிடைக்கும்.
முசுமுசுக்கை இலை 1 கைப்பிடி
டீத்தூள் 1 ஸ்பூன்
மிளகுத் தூள் 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2
கிராம்பு 2
துளசி 10 இலைகள்
ஏலக்காய் 1
பனை வெல்லம் சிறிது
வெறும் வாணலியில் கிராம்பு, ஏலக்காய் இரண்டையும் சூடு வரும் வரை வறுத்து அதில் மிளகுத்தூள், மஞ்சள்தூள், துளசி, முசுமுசுக்கை இலை ஆகியவற்றை சேர்த்து வதக்கி இரண்டு கப் தண்ணீர்விட்டு டீ தூள் சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி பனைவெல்லம் சேர்த்துப் பருக மணம் மிக்க சுவையான முசுமுசுக்கை டீ தயார்.