காலிஃப்ளவரில் லேசான கசப்பு சுவை இருப்பதால் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். இதில் கொழுப்பு சத்து குறைவாக உள்ளது. ஒரு கப் வேகவைத்த காலிஃப்ளவரில் விட்டமின் சி பி5 பி6 மாங்கனிஸ் ஒமேகா 3 பேட்டி ஆசிட் தாராளமாக உள்ளது. இதுவிட்டமின் சி மிகுந்த நீர் தன்மை உள்ள முழுமையான ஊட்டச்சத்து மிகுந்த உணவு பொருளாகும். இதில் நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் உள்ளதால் மலச்சிக்கலுக்கு நல்லதாக இருக்கும். குரூசி பெரஸ் குடும்ப வகை தாவரமான இது கேன்சரை தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதிலிருந்து ஒரு ரெசிபியை பார்க்கலாம்.
காலிஃப்ளவர் தேங்காய் சாதம்:
காலிஃப்ளவரை சிறிது சிறிதாக கட் செய்து மஞ்சள் உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுத்து மிக்ஸியில் ஜெர்க் விட்டு பொடித்தால் காலிஃபிளவர் அரிசி ரெடி. இதில் லேசாக தண்ணீர் தெளித்து வேக வைத்து எடுத்தால் காலிஃபிளவர் சாதம் ரெடி.
செய்ய தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் ரைஸ்- ஒரு கப்
தேங்காய் துருவல் -அரை கப்
மிளகாய்- ஆறு
பொட்டுக்கடலை- சிறிதளவு
உப்பு ,எண்ணெய் -தேவைக்கேற்ப
கறிவேப்பிலை ,தனியா அலங்கரிக்க
செய்முறை:
தேங்காய் துருவலுடன், மிளகாய் வற்றல், பொட்டுக்கடலை சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு ,கடலைப்பருப்பு, சிறிதளவு வேர்க்கடலை சேர்த்து தாளித்து கறிவேப்பிலை, தனியாவையும் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் காலிஃப்ளவர் சாதத்தை இதில் சேர்த்துக் கிளறி உதிர் உதிராக எடுக்கவும்.
நீரிழிவு காரர்களுக்கு இதில் விதவிதமான சமையல் செய்து பரிமாறலாம். பேலியோ டயட் இருப்பவர்கள் கூட இது மாதிரி செய்து சாப்பிடலாம். நல்ல எனர்ஜிட்டிக்காக இருப்பது தெரியவரும். மேலும் இந்த காலிஃப்ளவர் சாதத்துடன் அன்றாடம் சமைக்கும் குழம்பு கூட்டு வகைகளையும் வைத்து சாப்பிடலாம்.
சேமியா பக்கோடா:
தேவையான பொருட்கள்:
சேமியா -ஒரு கப்
பெரிய வெங்காயம் -ஒன்று பொடியாக அரிந்தது
பச்சை மிளகாய் -3 நீளமாக அரிந்தது
கடலை மாவு -அரைகப்
அரிசி மாவு -2 டேபிள் ஸ்பூன்
உப்பு ,எண்ணெய்- தேவைக்கேற்ப
கருவேப்பிலை, புதினா, தனியா-தலா கைப்பிடி அளவு
சில்லி ஃப்ளேக்ஸ்- ஒரு டேபிள் ஸ்பூன்
சன்னமாக அரிந்த முட்டைக்கோசு, கேரட், பீன்ஸ் மூன்றும் சேர்த்து- கைப்பிடி அளவு
இஞ்சி துருவல் ஒரு டீஸ்பூன் பூண்டு நறுக்கியது-3பல்
செய்முறை:
சேமியாவில் வெந்நீர் ஊற்றி ஊறவிடவும். ஊறியதும் நீரை வடித்து விட்டு குளிர விடவும். சேமியா நன்கு குளிர்ந்ததும் மேலே கொடுத்துள்ள அத்தனை பொருட்களையும் அதனுடன் கலந்து வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்து எடுக்கவும்.