வெந்தயப் பணியாரம், வெந்தயக் கஞ்சி...
வெந்தயப் பணியாரம், வெந்தயக் கஞ்சி... 
உணவு / சமையல்

கோடைக்கேற்ற - குளுகுளு வெந்தயப் பணியாரமும், வெந்தயக் கஞ்சியும்!

இரவிசிவன்

தோ கோடை வெயில் தொடங்கி விட்டது.
கோடையின் தாக்கத்திலிருந்து நம் உடலை காக்க குளுமையான உணவுகள்தான் ஒரே தீர்வு.  ஆரோக்கியமான, செரிப்பதற்கு மிகவும் எளிமையான -  அதே நேரம் உடலுக்குள் ஏசி பொருத்தியது போல குளுமையைத் தரக்கூடிய இரண்டு விதமான 'கூல் ரெசிபி' - களைப் பார்ப்போமா?

வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி:

தேவையானவை:
பச்சரிசி - 200 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
தேங்காய் - ஒரு மூடி.
பெரியவெங்காயம் - ஒன்று
பூண்டு - 7 பல்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
பட்டை - 2 துண்டு
பச்சை மிளகாய் - ஒன்று
புதினா, மல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
பச்சரிசி, பாசிப்பருப்பு, வெந்தயம் மூன்றையும் கலந்து 1 மணி நேரம் ஊற விடவும். தேங்காயைத் துருவி பால் எடுத்து வைக்கவும்.

அடுப்பில் குக்கரை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, நசுக்கிய பூண்டு, பொடித்த சோம்பு தாளித்த பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், புதினா சேர்த்து நன்கு வதக்கவும். நன்றாக வதக்கியபின் ஊற வைத்த அரிசி, பருப்பு, வெந்தயம் மற்றும் தண்ணீரை குக்கரில் சேர்க்கவும். (ஒரு பங்கு அரிசிக்கு 6 பங்கு தண்ணீர் என்பதே  அளவீடு).

இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கி குக்கரை மூடி 5 அல்லது 6 விசில் விட்டு
வேகவைத்து இறக்கவும். வெந்தயக் கஞ்சி ஆறியதும் தேங்காய்ப்பால் சேர்த்துக் கலக்கவும். கொத்தமல்லித்தழை, புதினா இலைகள் தூவிப் பரிமாறவும்.

வெந்தயப் பணியாரம்:

தேவையானவை:
பச்சரிசி - 200 கிராம்
உளுந்து - 6 டீஸ்பூன்
வெந்தயம் - ஒன்றரை டீஸ்பூன்
வெல்லம் - 200 கிராம்
ஏலக்காய் - 2
நெய் - 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 10 டீஸ்பூன்
சோடா உப்பு - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
முதலில் பச்சரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் ஒன்றாகக் கலந்து சுமார் 4 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். அடிகனமான  பாத்திரம் ஒன்றை அடுப்பிலிட்டு 2 கப்  தண்ணீர் ஊற்றிக் கொதி வந்த பின் பொடித்த வெல்லத்தைச் சேர்த்துக்  நன்கு கொதிக்கவிட்டு பின்னர் வடிகட்டவும்.

ஊறவைத்த அரிசி, உளுந்து, வெந்தயத்துடன் வெல்லம் கரைத்த தண்ணீர் ஊற்றி மையாகக் கிரைண்டரில் அரைக்கவும். அரைத்த மாவை  8 மணிநேரம் புளிக்கவிடவும்.

அடுத்து, நெய்யில் வதக்கிய தேங்காய்த் துருவல், பொடித்த ஏலக்காய், சோடா உப்பு மூன்றையும் புளித்த  மாவில் சேர்த்துக் கலந்து  பணியாரம் ஊற்றும் பதத்துக்குக் கரைக்கவும். அவ்வளவுதான் பணியாரக் குழியில் ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து எடுத்தால் பணியாரம் தயார்!

‘கத்புட்லி’ பொம்மலாட்டம் பற்றித் தெரிந்து கொள்ளுவோமா?

நல்ல சகுனம், கெட்ட சகுனம் எவை தெரியுமா?

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உணவுகளை இப்படிச் சாப்பிட்டு பாருங்களேன்!

க்ளூடாமைன் அதிகமுள்ள உணவுகள் தெரியுமா?

12 ராசிக்கும் 12 குபேரர்கள் இருக்கும் கோவில் எது தெரியுமா?

SCROLL FOR NEXT