மென்மையான ஜூசி மற்றும் மெல்லிய பாதுஷாவை வீட்டிலே எளிதாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
மைதா மாவு _2 கப்,உப்பு_1_ சிட்டிகை, சோடா உப்பு _1/2 ஸ்பூன், பேக்கிங் சோடா _1/4 ஸ்பூன், தயிர் _1 ஸ்பூன், நெய் _5 ஸ்பூன், சர்க்கரை 11/2 கப், குங்குமப்பூ_ 1 சிட்டிகை, ஏலக்காய் தூள்_1/2 ஸ்பூன்,
செய்முறை:
ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவை எடுத்து கொள் ளவும். அத்துடன் உப்பு, சோடா உப்பு, பேக்கிங் பவுடர், இவற்றை சேர்த்து பின் தயிரையும் சேர்த்து நன்றாக கலந்து மாவு ஒன்று சேர்ந்து வரும் வரை கலந்து விட்டு நெய்யையும் சேர்த்து நன்றாக பிசைந்து விட்டு புட்டு மாவு மாதிரி விரவி எடுத்துக் கொள்ளவும். பின்னர் தண்ணீர் சிறிது சிறிதாக ஊற்றி பிசைந்து மாவை உருட்டி மிருதுவான சப்பாத்தி மாவு பக்குவத்தில் எடுத்துக் கொள் ளவும்.
பின்னர் பாகு தயாரிக்க ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சர்க்கரையை சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு நன்கு சர்க்கரை கொதித்து வரும்போது ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்க்கவும். பின் கேசரி பவுடர் வேண்டு மானால் சேர்த்துக் கொள்ளலாம். பாகு காய்க்கும்போது பிசு பிசு என்று வரும். அப் போது தீயை அணைத்துவிட்டு மூடி வைத்துவிடவும்.
பின்னர் மாவை சிறு உருண்டை எடுத்து உருட்டி இரு கைகளாலும் அழுத்தி விட்டு நடுவில் விரலால் ஒரு ஓட்டை போட்டு விட்டு பின்னால் திருப்பி வைத்து ஒரு அழுத்தம் கொடுத்தால் பாதுஷா வடிவம் வந்துவிடும். எல்லா பாதுஷாவும் ஒரே அளவில் இருந்தால் அழகாக இருக்கும்.
பின்னர் எண்ணெய் சட்டியை அடுப்பில் வைத்து சிறிது காய்ந்ததும், பாதுஷாக்களை எண்ணெயில் அடுக்கி விட்டு விட வேண்டும். பின்னர் எண்ணெய் சூடாக, சூடாக பாதுஷா வெந்து மேலே எழும்பும். சிறு தீயில் வைத்து வேக விட்டு இடை இடையே திருப்பி . பிரௌன் கலரில் வரும் வரை பொறுமையாக வேக விட்டு எடுக்கவும்.
பாதுஷாக்களை எண்ணெய் சட்டியில் இருந்து எடுத்து தனியாக வைத்து எண்ணெய் நன்கு வடிந்த பின்னர் சிறிது ஆற விடவும். ஒரு சட்டியில் போட்ட பாதுஷாக்களை எடுத்துவிட்டு அடுத்த பாதுஷாக்களை பொரிக்க எண்ணெயில் போடுவதற்கு முன் எண்ணெயை சற்று ஆற விட்டு அதன் பின்னர் பாதுஷாக்களை எண்ணெயில் அடுக்க வேண்டும். தீயை மிதமாக வைத்து திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து தனியாக ஆறவிடவும்.
பின்னர் மொத்தமாக அனைத்து பாதுஷாக்களையும் சர்க்கரை பாகில் அடுக்கி விட லாம். சிறிது நேரம் கழித்து பாதுஷாக்களை திருப்பி போட்டு விட்டு நன்றாக ஊற வைத்து எடுக்கலாம். சுவையான பாதுஷா தயார்.
ரொட்டி கேசரி:
ரொட்டி துண்டுகள் _6, அவல் 1 ஸ்பூன், பொட்டுக்கடலை_2 ஸ்பூன், முந்திரி பருப்பு_8, திராட்சை_10, பால்_1 லிட்டர் சர்க்கரை_1 கப், ஏலக்காய் பொடி_1/2 ஸ்பூன், நெய்_5 ஸ்பூன்
செய்முறை:
ஒரு வாணலியில் சிறிது நெய்விட்டு நிதானமாக எரிய கூடிய அடுப்பில் வைத்து முந்திரி, அவல், திராட்சை முதலியவற்றை தனி தனியாக வறுத்து எடுத்த பின் ரொட்டிதுண்டுகளை பொரித்து எடுக்கவும்.
ஒரு கனத்த பாத்திரத்தில் பாலை விட்டு அடுப்பில் வைத்து கொதித்து காய்ந்து கெட்டியான பின் சர்க்கரையை போட்டு கிளறி எடுக்கவும். வறுத்த சாமான்களை பொட்டுக்கடலை சேர்த்து மிகவும் சன்னமாக தூள் செய்யவும்.
ரொட்டி துண்டுகளை மசித்து அத்துடன் பொடித்து வைத்தி ருக்கும் தூள், ஏலக்காய் பொடி, நெய் முதலியவற்றை சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து சற்று கெட்டி யானதும் கிளறி எடுக்கவும். சுவையான ரொட்டி கேசரி ரெடி.
நெஞ்சு சளி போக்கும் தேங்காய்பால்:
தேவையான பொருட்கள்;
தேங்காய் _1 மூடி,
கருப்பட்டி பொடி_4 ஸ்பூன், சுக்கு தூள்_2 ஸ்பூன், மிளகு_7 ஏலக்காய் தூள் _1/2 ஸ்பூன்
செய்முறை:
முதலில் மிக்ஸி ஜாரில் மிளகு, ஏலக்காய், தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் குறைவாக விட்டு நைசாக அரைத்து பால் எடுத்து வடி கட்டி 2 கப் அளவு பால் எடுத்து கொள்ளவும்.
கருப்பட்டியை 2 ஸ்பூன் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து தூசி நீங்க வடிகட்டி கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வடிகட்டி வைத்த கருப்பட்டி தண்ணீரை முதலில் ஊற்றவும். பின் தேங்காய் பாலை சேர்த்து கரண்டியால் கலந்து விடவும். பின் சுக்கு தூள், ஏலக்காய் தூள் சேர்த்து இனிப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்து தேவை இருந்தால் கருப்பட்டி சேர்த்து கொள்ளவும். தேங்காய் பால் சூடானதும் இறக்கி விடவும். கொதிக்க விட வேண்டாம்.
இந்த தேங்காய்பால் நெஞ்சு சளி மற்றும் இருமலுக்கு அருமருந்தாகும்.