'க்வாகமோல்' (Guacamole) என்பது பதினைந்து நிமிடத்தில் ஃபிரஷ்ஷா வீட்டிலேயே சுலபமாகத் தயாரிக்கக் கூடிய ஒரு க்ளாசிக் மெக்சிகன் டிஷ். இது அனைவராலும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு
சுவைமிகுந்த 'டிப்' (Dip). இதை பிரட் டோஸ்ட், டாகோஸ் (Tacos), டார்ட்டிலா சிப்ஸ் போன்றவற்றுடன் தொட்டு சாப்பிட சுவையும் ஆரோக்கியமும் பன் மடங்கு கூடும். இந்த க்வாகமோல் டிப்பை எப்படி தயாரிப்பது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
நன்கு பழுத்த அவகோடா பழம் - 1
பொடிசா நறுக்கிய வெங்காயம் - ¼ கப்
பொடிசா நறுக்கிய தக்காளி - ¼ கப்
பொடிசா நறுக்கிய ஜலபீனோ
(Jalapeno) பெப்பர் - முக்கால் டீஸ்பூன்
பொடிசா நறுக்கிய பூண்டு - ⅙ டீஸ்பூன்
நசுக்கிய கருப்பு மிளகு - ¼ டீஸ்பூன்
பொடிசா நறுக்கிய மல்லி தழை - 2 டேபிள்ஸ்பூன்
லெமன் ஜூஸ் - 2 டீஸ்பூன்
எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
தேவையான அளவு உப்பு
செய்முறை:
அவகோடா பழத்தை நன்கு கழுவி இரண்டு துண்டாக வெட்டவும். கொட்டையை நீக்கிவிட்டு சதைப் பகுதியை சுரண்டி எடுத்து ஒரு மிக்ஸிங் பௌலில் போட்டு ஒரு ஸ்பூனால் நன்கு மசிக்கவும். பின் அதில், நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய், பூண்டு, மல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். அவகோடா பழம் மற்ற பொருள்கள் அனைத்தின் மீதும் படரும்படி கலந்து விடவும். பிறகு அதில் லெமன் ஜூஸ், ஆலிவ் ஆயில் ஊற்றி, உப்பு மற்றும் மிளகையும் சேர்த்து கலக்கவும். மேலே கொஞ்சம் மல்லி தழை தூவி அலங்கரிக்கவும். க்வாகமோல் ரெடி!!
இந்த க்வாகமோலில் முக்கிய சேர்க்கைப் பொருள் அவகோடா பழம். இப்பழத்தில் ஆரோக்கியம் தரும் மோனோஅன் சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இது நம் மூளை மற்றும் உடலின் மொத்த செல் சவ்வு (Cell membrane) களின் அமைப்புக்கும் இயக்கங்களுக்கும் பெரிதும் உதவி புரியக்கூடியது. இந்த டிஷ்ஷை நாமும் செய்து உட்கொண்டு ஆரோக்கியம் பெறுவோம்.