திருமணம் ஆகி புதிதாக பலகாரம் செய்ய முனைவோர்கள் கூட மிகவும் எளிமையாக செய்து தீபாவளியை அசத்தலாக கொண்டாடி மகிழலாம். அதற்கு ஏற்ற இரண்டு ஸ்வீட் வகைகளை இதில் காண்போம்.
ஒன் டூ த்ரீ கேக்:
செய்ய தேவையான பொருட்கள்:
ஒரு கப் -நெய்
இரண்டு கப்- தேங்காய் துருவல்
மூன்று கப்- சீனி
நான்கு கப்- பால்
செய்முறை:
இந்த நான்கு பொருட்களையும் நன்றாக கலந்து அடுப்பில் ஏற்றி கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவேண்டும். இந்த ஸ்வீட்டில் தேங்காய் தவிர மீதியெல்லாம் திரவப் பொருளாக இருப்பதால் கெட்டியாக சற்று நேரம் பிடிக்கும். ஆதலால் பொறுமையாக அடிபிடிக்க விடாமல் கிளறவும்.
வேகும்போது கையில் அதன் கலவை தெறிக்கும். ஆதலால் ஒரு துணியை கையில் சுற்றிக்கொண்டு கிளறி, நன்றாக வெந்ததும் கெட்டியாகி பூத்து மணம் வரும். அப்பொழுது நெய் தடவிய தட்டில் சட்டென்று கொட்டி ஒரு டபராவால் நன்றாக பரத்திவிட்டு, இளம் சூடாக இருக்கும் பொழுது துண்டுகள் போட்டு ஆறவிட்டு எடுத்து வைக்க வேண்டியதுதான். எந்தவித குழப்பமும் இல்லாமல் எளிமையாக செய்து முடித்து விடலாம். மற்றவர்களுக்கு கொடுக்கும் பொழுதும் திருப்தியாக இருக்கும்.
நட்ஸ் கேக்:
செய்ய தேவையான பொருட்கள்:
பாதாம் முந்திரி பிளேக்ஸ், தேங்காய் துருவல் எல்லாமும் ஆக சேர்த்து-1கப்
வறுத்த கடலை மாவு -ஒரு கப்
நெய் -ஒரு கப்
பால்- ஒரு கப்
சர்க்கரை -3 கப்
செய்முறை:
அடி கனமான உருளியில் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில், கட்டி தட்டாமல், அடிபிடிக்காமல், கைவிடாமல் கிளறி கெட்டியாகி பூத்து நன்றாக வாசம் வரும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டி சமமாக பரவி விட்டு, இளஞ்சூடாக இருக்கும்பொழுது துண்டுகள் போட்டு ஆற விட்டு எடுத்து வைக்க வேண்டியதுதான். இந்த ஸ்வீட் செய்யும் பொழுது எந்தவித குழப்பமும் வராது. எளிமையாகவும், சீக்கிரமாகவும் செய்து விடலாம்.
இரண்டு ஸ்வீட்டையும் இந்த தீபாவளிக்கு செய்து அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு கொடுத்து அசத்துங்கள்.