வடா பாவ்... 
உணவு / சமையல்

புகழ்பெற்ற மும்பை Street Food வடா பாவ்!

ஆர்.வி.பதி

ம் தமிழ்நாட்டில் கிராமம் முதல் நகரம் வரை அனைத்து பகுதிகளிலும் பஜ்ஜி, போண்டா கடைகளைக் காண முடிகிறது. அதுபோலவே மும்பையில் அனைத்து பகுதிகளிலும் வடா பாவ் (Vada Pav) கடைகளைக் காணலாம். மும்பையின் புகழ் பெற்ற சாலையோர உணவு (Street Food) வடா பாவ்.

சாலையோரங்களிலும், சிறிய மற்றும் பெரிய உணவகங்களிலும் காலை முதல் இரவு வரை வடா பாவ் கிடைக்கும். ஒரு வடா பாவ் இருபது ரூபாய் முதல் முப்பது ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்துத் தரப்பினரும் விரும்பி சுவைக்கும் ஒரு சாலையோர உணவு வடா பாவ்.

மும்பை மக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு வடாபாவ். ஒரு வடா பாவ் சாப்பிட்டு டீயைக் குடித்தால் வயிறு நிரம்பிய உணர்வு கிடைத்துவிடும். இது “பாம்பே பர்கர்” என்றும் அழைக்கப்படுகிறது. வடா பாவ் மும்பையில் 1966 ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகமானதாக கூறப்படுகிறது.

உருளைக்கிழங்கு போண்டா, தவாவில் வெண்ணையில் டோஸ்ட் செய்த பன், புதினா சட்னி மற்றும் எண்ணெயில் பொரித்தெடுத்த முழு பச்சைமிளகாய். இதுவே வடா பாவ் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. வடா பாவை தனித்தனியே பிரித்து சாப்பிடாமல் மொத்தமாகச் சேர்த்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கடித்துச் சுவைத்துச் சாப்பிட வேண்டும். இப்படிச் சாப்பிட்டால் அதன் சுவை அபாரமாக இருக்கும்.

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு மசாலாவை கடலை மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் வடா தயாராகிவிடும். தோசைக்கல்லில் வெண்ணையை இட்டு பாவ் பன்னை இரண்டாகப் பிளந்து டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பாவ் பன்னுக்குள் வடாவை வைத்து புதினா சட்னி மற்றும் எண்ணெயில் பொரித்தெடுத்த பச்சைமிளகாயையும் சேர்த்து பரிமாறினால் அதுதான் வடா பாவ். இதை நாமே வீட்டிலும் சுலபமாகச் செய்து சாப்பிடலாம்.

மும்பையில் சுமார் 20000 வடா பாவ் கடைகள் இருப்பதாக 2022 ல் எடுக்கப் பட்ட புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது. மும்பையில் வடா பாவிற்கென்றே புகழ் பெற்ற பிரத்யேகமான கடைகள் ஏராளமாக உள்ளன.

தற்போது சென்னையிலும் பல இடங்களில் வடா பாவ் கிடைக்கிறது என்பது கூடுதல் தகவல். மேலும் இந்தியாவின் பல நகரங்களிலும் மும்பையின் புகழ் பெற்ற வடா பாவ் கிடைக்கிறது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT