Sambar, Rasam, Idly Podi Recieps Image credit - youtube.com
உணவு / சமையல்

வீடே மணக்கும்படி சாம்பார், ரசம் வைக்கணுமா இந்த ரகசியத்தை ஃபாலோ பண்ணுங்க!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

ப்பொழுதெல்லாம் சாம்பார் பொடி, ரசப்பொடி எல்லாம் ரெடிமேடாக கிடைப்பதால் அதையே வாங்கி பயன் படுத்துகிறார்கள். வீட்டில் அரைத்து செய்யப்படும் சாம்பார் பொடி, ரசப்பொடி மற்றும் இட்லி பொடி ஆகியவற்றின் ருசி அலாதியானது. அத்துடன் சிக்கனமும் கூட. கீழ் சொன்ன அளவுபடி அரைத்து காற்று புகாத டப்பாவில் வைத்துக் கொண்டால் மூன்று மாதங்கள் வரை பிரஷ்ஷாக இருக்கும். செய்துதான் பாருங்களேன்.

மணக்க மணக்க சாம்பார் பொடி:

தனியா கால் கிலோ 

மிளகாய் கால் கிலோ 

கடலைப்பருப்பு 50 கிராம் 

துவரம் பருப்பு 50 கிராம்

வெந்தயம் 2 ஸ்பூன்

பெருங்காய கட்டி ஒரு துண்டு

வரளி மஞ்சள் 2(நான்கைந்து துண்டுகளாக உடைத்தது)

அடுப்பில் அடி கனமான வாணலி ஒன்றை வைத்து தனியா, மிளகாய், பருப்பு வகைகள், வெந்தயம், பெருங்காய கட்டி ஆகியவற்றை தனித்தனியாக நன்கு சூடு வர வறுத்து எடுக்கவும். சிறிது ஆறியதும் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் போட்டு நைசாக பொடிக்கவும். நல்ல வாசனைடன் கூடிய சுவையான சாம்பார் பொடி தயார். இதனை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு பயன்படுத்தவும்.

வீடே மணக்கும் ரசப்பொடி:

தனியா ஒரு கப் 100 கிராம் 

மிளகு 50 கிராம் 

சீரகம் 25கிராம் 

கடலைப்பருப்பு 50 கிராம்

துவரம் பருப்பு 50 கிராம் 

காய்ந்த கறிவேப்பிலை சிறிது

வரளி மஞ்சள் 2(நான்கைந்து துண்டுகளாக உடைத்தது)

பெருங்காய கட்டி ஒரு சிறு துண்டு

அடி கனமான வாணலியில் தனியா, மிளகு, சீரகம், பருப்பு வகைகள், பெருங்காய கட்டி, கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தனித்தனியாக நன்கு சூடு வர வறுக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். மணக்க மணக்க வீட்டிலேயே தயாரித்த ரசப்பொடி தயார். இதனை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து பயன்படுத்தவும்.

இட்லி பொடி:

சாம்பார், சட்னி செய்ய நேரம் இல்லை என்றால் கவலைப்பட வேண்டாம். இந்த இட்லிப் பொடியை செய்து வைத்துக் கொண்டால் தோசை இட்லிக்கு வெகு பொருத்தமாக இருக்கும்.

கடலைப்பருப்பு 100 கிராம் 

உளுத்தம் பருப்பு 50 கிராம் 

எள் 20 கிராம் 

காய்ந்த மிளகாய் 15 

உப்பு தேவையானது

பெருங்காய கட்டி ஒரு துண்டு 

சர்க்கரை ஒரு ஸ்பூன்

வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் போட்டு ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு நன்கு சிவக்க வறுக்கவும். கருகக் கூடாது. காய்ந்த மிளகாயை காம்புகள் நீக்கி சிறிது நல்லெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து வறுக்க தொண்டை கமறல் ஏற்படாமல் ஒரே சீராக வருபடும். எள்ளைத் தனியாக படபடவென்று பொரியும் வரை வாணலியில் போட்டு வறுத்தெடுக்கவும். பெருங்காயத்தை கிள்ளிப்போட்டு நன்கு வறுத்து எடுத்து சிறிது ஆறியதும் அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக பொடித்து எடுக்கவும். கடைசியாக சர்க்கரை ஒரு ஸ்பூன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். மிகவும் ருசியான இட்லி பொடி தயார்.

இட்லிப் பொடியுடன் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு குழைத்து இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள மிகவும் அருமையாக இருக்கும்.

சுவாமி ஐயப்பன் அரக்கி மகிஷியை வதம் செய்த வாள் எங்குள்ளது தெரியுமா?

தோரின் பிரபலமான 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்! 

சிறுதானிய உணவுகள் உடலில் ஏற்படுத்தும் ஆரோக்கிய மாற்றங்கள்!

கேட்ட வரத்தைக் கொடுக்கும் கார்த்திகை சோமவார விரதம்!

SIP திட்டத்தின் மாதத்தவனையை தவறவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? 

SCROLL FOR NEXT