விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டைதான் நினைவுக்கு வரும். சிறிது வித்தியாசமான 4 வகையான பூரண கொழுக்கட்டைகள் செய்வதற்கு அதன் மேல் மாவு ஒரே மாதிரி தான் செய்யணும் உள்ளே வைக்கும் ஸ்டபிங்தான் மாறுபடும்.
முதலில் கொழுக்கட்டை மேல் மாவு தயாரிக்கும் முறை:
தேவையானவை
பச்சரிசி _2 கப்
உப்பு _தேவைக்கு
நெய் _ 2ஸ்பூன்
அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து நன்கு கழுவி நிழலில் உலர்த்தி சற்று ஈரம் இருக்கும் போது மிக்ஸியில் அரைத்து நன்கு சலிக்கவும். 1கப் மாவிற்கு 1 கப் தண்ணீர் என்ற விகிதத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சிறிது உப்பு, நெய் சேர்த்து பின்னர் மாவைக் கொட்டி கிளறி சிறு தீயில் சிறிது நேரம் வேகவைத்து எடுக்கவும்.
1. கோவா கொழுக்கட்டை
தேவையானவை
கொழுக்கட்டை மாவு _2 கப்
பால்கோவா _100 கிராம்
பாசிப்பருப்பு _1/4 கப்
தேங்காய் துருவல் _1/4 கப்
வெள்ளரி விதை _1 ஸ்பூன்
வெல்லத்தூள் _4 ஸ்பூன்
செய்முறை
பாசி பருப்பை குழையாமல் வேக வைத்து வடிகட்டவும். அத்துடன் மற்ற பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். முன் சொன்ன படி கொழுக்கட்டை மாவு தயாரித்து சிறு உருண்டைகளாக உருட்டி கிண்ணம் போல் செய்து கொண்டு அதனுள் சிறிதளவு பூரணம் வைத்து மடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
2. பன்னீர் கொழுக்கட்டை
தேவையானவை
கொழுக்கட்டை மாவு _2 கப்
பன்னீர் _ 200 கிராம்
மிளகாய் தூள் _1 ஸ்பூன்
மல்லித்தூள் _1/2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு _1 ஸ்பூன்
உப்பு _ தேவைக்கு
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
மல்லித்தழை தேவைக்கு
செய்முறை
முதலில் கொழுக்கட்டை வெளி மாவு தயாரிக்கவும். பின்னர் பன்னீரை நன்கு உதிர்த்து மல்லித்தழையை பொடியாக நறுக்கவும். பன்னீருடன் மற்ற பொருட்களை எல்லாம் ஒன்றாக நன்கு கலக்கவும். மாவை வேண்டிய வடிவத்தில் செய்து பூரணம் வைத்து மடித்து ஆவியில் வேகவைக்கவும்.
3. வெஜிடபிள் கொழுக்கட்டை
தேவையானவை
கொழுக்கட்டை மாவு _2கப்
பீன்ஸ் _5
கேரட் _1
முட்டை கோஸ் _ 1சிறிய துண்டு
முளைபயிறு _ 1/4 கப்
மிளகு தூள் _தேவையான அளவு
சின்ன வெங்காயம் _5
பூண்டு _5 பல்
ஸ்வீட் சாஸ் _2 ஸ்பூன்
உப்பு _தேவைக்கு
செய்முறை
கொழுக்கட்டை மாவு தயாரித்து கொள்ளவும். காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்கி, பூண்டை யும், வெங்காயத்தை யும் பொடியாக நறுக்கவும். அடுப்பில் எண்ணெயை காயவைத்து பூண்டை சேர்த்து பின்னர் காய்கறிகளையும், வெங்காயத்தையும் சிறிதளவு உப்பையும் சேர்த்து வதக்கவும். கடைசியில் சாஸ், மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும் மாவில் சிறிதளவு எடுத்து வேண்டிய வடிவத்தில் செய்து பூரணம் வைத்து மடித்து ஆவியில் வேகவிடவும்.
4. ட்ரைப்ரூட் கொழுக்கட்டை
கொழுக்கட்டை மாவு _2 கப்
தேங்காய் _ 1/2 மூடி
முந்திரி _10
பாதம் _10
திராட்சை _20
கடலை பருப்பு _1/4 கப்
வெல்லப்பொடி _1/2 கப்
ஏலப்பொடி _ 1/2 ஸ்பூன்
நெய் _2 ஸ்பூன்
செய்முறை
கடலைப்பருப்பை நன்கு வேகவைத்து வடிக்கவும். தேங்காயை பூவாக துருவி முந்திரி, பாதாமை பொடியாக நறுக்கி நெய்யை காயவைத்து முந்திரி, பாதமை வறுத்து அத்துடன் திராட்சையையும் வறுத்து கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய் சேர்த்து சிறிது கிளறி இறக்கவும். கொழுக்கட்டை மாவு தயாரித்து இந்த பூரணத்தை வைத்து மடித்து ஆவியில் வேக வைக்கவும்.