கொத்தவரங்காய் கிரேவி 
உணவு / சமையல்

தோசை, சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள சூப்பரான கொத்தவரங்காய் கிரேவி!

சேலம் சுபா

சில காய்களைப் பார்த்தால் பிள்ளைகள் காத தூரம் ஓடுவார்கள் . அதில் ஒன்றுதான் கொத்தவரங்காய். பெரியவர்களுக்கே சில நேரங்களில் கொத்தவரங்காய் என்றால் சலிப்பாக சாப்பிடாமல் விடுவார்கள். சிலருக்கு அதன் சுவை பிடிக்காமல் சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். விலை மலிவாக கிடைக்கும் காய்களில் கொத்தவரங்காய் முதலிடம் உண்டு. காரணம் செடிக்களில் கொத்துக் கொத்தாக எளிதில் விளையும் தன்மை கொண்டது இந்தக்காய்.

கொத்தவரங்காயில் இருக்கும் சத்துக்கள் தெரிந்தால் நிச்சயம் நாம் அதை தவிர்க்க மாட்டோம். இதயத்தை பலப்படுத்தி நரம்புகளை வலுப்படுத்தும் சக்தி கொத்தவரங்காய்க்கு உண்டு. அதிக நார்ச்சத்து உள்ள காய்களில் இதுவும் ஒன்று. ஆஸ்துமா பிரச்னை என்றாலும் கொத்தவரங்காய் நிவாரணம் தருகிறது. இப்படி  எண்ணற்ற மருத்துவ பலன்களை கொண்ட கொத்த வரங்காய்களை ருசியாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு சுவையான சத்துள்ள ரெசிபிதான் இந்த கொத்தவரங்காய் கிரேவி. இதோ எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

கொத்தவரங்காய் – கால் கிலோ  

கடுகு, உளுத்தம் பருப்பு,சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 2 ( நறுக்கியது )

தக்காளி – 3 (நறுக்கியது)

பச்சை மிளகாய் -2  

கருவேப்பிலை கொத்துமல்லி – சிறிது  

மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்  

மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன் அல்லது காரத்திற்கேற்ப  

கரம் மசாலாத்தூள் – அரை ஸ்பூன்

மஞ்சள்தூள் – சிறிது

பெருங்காயத்தூள் -சிறிது

வறுத்த வேர்க்கடலை – 3 சிறிய கப் ( பொடித்தது )

எண்ணெய் - தேவையான அளவு (சற்று அதிகமாக )

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கொத்தவரங்காய்களை மேலேயும் கீழேயும் நறுக்கி நாரை எடுத்துவிட்டு அரை இன்ச் அளவு வரும்படி நறுக்கி நன்கு கழுவி வைக்கவும். ஒரு கடாயில் அல்லது குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் உளுத்தம் பருப்புடன் கறிவேப்பிலை போட்டுத் தாளித்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். பெரிய வெங்காயம் நான்கு சிவந்து வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வதக்கவும்.

அதில் நறுக்கி வைத்த தக்காளிகளை சேர்த்து மேலும் வதக்கி மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம்மசாலா, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். எண்ணை நன்கு பிரித்து வரும் சமயம் நறுக்கி வைத்துள்ள கொத்தவரங்காயை சேர்த்து மேலும் கிளறவும். இப்போது வறுத்த வேர்க்கடலையை பொடித்துக் கொள்ளவும். தூளாக்கிய வேர்க்கடலையை வதங்கிய கொத்தவரங்காய் கலவையுடன் கலந்து ஒரு டம்ளர் அல்லது இரண்டு டம்ளர் நீர் ஊற்றி தேவையான உப்பு போட்டு மூடி வைக்கவும்.

இரண்டு விசில் வந்ததும் குக்கரை அனைத்து மேலும் சிறிது நேரம் மிதமான தீயில் வைத்து மேலே நறுக்கிய கொத்துமல்லித் தழை தூவி இறக்கினால் எண்ணைய் மிதங்கும்  கொத்தவரங்காய் கிரேவி ரெடி.

இந்த கொத்தவரங்காய் கிரேவி தோசை, சப்பாத்தி, சூடான சாதம் என்று எதற்கு வேண்டுமானாலும் சரியான ஜோடியாக இருப்பதுதான் சிறப்பு. என்ன கிரேவி ரெடி சாப்பிட நீங்களும் தயார்தானே!

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT