Biriyani Masala 
உணவு / சமையல்

அட, பாக்கெட் பிரியாணி மசாலா தூக்கிப் போடுங்க… இனி வீட்டிலேயே செஞ்சுக்கலாம்! 

கிரி கணபதி

பிரியாணி என்றால் யாருக்குதான் பிடிக்காது? அந்த பிரியாணியின் சுவைக்கு முக்கிய காரணமே அதில் பயன்படுத்தப்படும் மசாலாதான். வீட்டில் பிரியாணி செய்யும்போது நாம் விரும்பும் அளவு மசாலாவை சேர்த்து, எவ்வித செயற்கை நிறமிகளும் இல்லாமல் சுவையாக பிரியாணியைத் தயாரிக்க முடியும். பிரியாணி மசாலாவை வீட்டிலேயே தயாரிக்கும்போது உணவுப் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். மேலும், நமது சொந்த சுவைக்கு ஏற்ப அதைத் தயாரிக்கும் வாய்ப்பை இது வழங்குகிறது. இந்தப் பதிவில் வீட்டிலேயே பிரியாணி மசாலாவை எளிமையாகவும், சுவையாகவும் செய்வது எப்படி என்பது பற்றி பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

  • கொத்தமல்லி விதை - 4 டேபிள்ஸ்பூன்

  • மிளகு - 2 டேபிள்ஸ்பூன்

  • சோம்பு - 2 டேபிள்ஸ்பூன்

  • பட்டை - 10 துண்டு

  • லவங்கம் - 2 டேபிள்ஸ்பூன்

  • ஏலக்காய் - 2 டேபிள்ஸ்பூன்

  • அன்னாசி பூ (ஸ்டார் அனிஸ்) - 10

  • ஜாதிக்காய் - 3

  • ஜாதிபத்திரி - 4

  • பிரியாணி இலை - 10

  • வரமிளகாய் - 10 (உங்கள் சுவைக்கு ஏற்ப அதிகரிக்கலாம்)

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கொத்தமல்லி விதை, மிளகு, சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய், அன்னாசிப்பூ, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, பிரியாணி இலை மற்றும் வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். 

மசாலாக்கள் நன்கு வாசனை வரும் வரை, வரமிளகாய் சற்று கருப்பாக மாறும் வரை வறுக்க வேண்டும். வறுக்கும்போது மசாலாக்கள் கருகி விடாமல் கவனமாக இருக்கவும். பின்னர், வறுத்த மசாலாக்களை ஒரு தட்டில் போட்டு முற்றிலுமாக ஆற வைக்கவும். 

ஆறிய மசாலாக்களை மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும். இது மிகவும் நுண்ணிய பொடியாக அல்லாமல் லேசாக கொரகொரப்பாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். இறுதியாக அரைத்த பொடியை ஒரு காற்று புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும். 

இப்படி, வீட்டிலேயே தயாரிக்கும் பிரியாணி மசாலா உங்கள் பிரியாணிக்கு தனித்துவமான சுவையையும், நறுமணத்தையும் கொடுக்கும். இது கடைகளில் கிடைக்கும் மசாலாக்களை விட ஆரோக்கியமானது. இந்தப் பதிவில் நான் சொன்ன வழிமுறைகள், வீட்டிலேயே பிரியாணி மசாலாவை தயாரிப்பதற்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன். 

பிக்கி உண்டியலின் வரலாறு தெரியுமா?

வேகமாகச் சுழலும் இறந்த நியூட்ரான் நட்சத்திரத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்! 

இன்சுலின் சுரப்பை இயற்கையாக சீராக்க உதவும் எளிய உணவுகள்!

உடலில் மருக்கள் இருந்தால் சாதாரணமாக நினைக்காதீங்க… ஜாக்கிரதை! 

கனக விநாயகர் கணக்கு விநாயகர் ஆன கதை தெரியுமா?

SCROLL FOR NEXT