பழங்களின் அரசன் எனப் போற்றப்படும் பலாப்பழத்தை விரும்பாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இதனை வெறும் பழமாக மட்டுமின்றி, பல்வேறு வகையான உணவுகளில் சேர்த்தும் சமைக்கலாம். அவற்றுள் ஒன்றுதான் பலாப்பழ ஊறுகாய். இது தென்னிந்தியாவில் பரவலாக செய்யப்படும் ஒரு பாரம்பரிய உணவு. பலாப்பழத்தின் இயற்கை இனிப்புடன் மசாலாக்களின் கலவை சேர்ந்து இந்த ஊறுகாய்க்கு தனித்துவமான சுவையை அளிக்கிறது. வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய இந்த ஊறுகாயை சாதத்துடன், இட்லி தோசை, போன்றவற்றுடன், சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பழுத்த பலாப்பழம் - 1 கிலோ
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5-6
வெங்காயம் - 2
பூண்டு - 5-6 பற்கள்
இஞ்சி - ஒரு துண்டு
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
வினிகர் - 2 தேக்கரண்டி
செய்முறை:
பலாப்பழத்தை நன்றாக சுத்தம் செய்து விதைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பின்னர், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து, கடுகு பெருங்காயத்தூள், வெங்காயம் பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும்.
வதங்கிய வெங்காயத்தில் காய்ந்த மிளகாய், கரம் மசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்குங்கள். பின்னர், இந்த மசாலாவில் பலாப்பழ துண்டுகளை சேர்த்துக் கிளறவும். இப்போது தேவையான அளவு உப்பு மற்றும் வினிகர் சேர்த்து கிளறினால் பலாப்பழ ஊறுகாய் தயார்.
தயாரான ஊறுகாயை கண்ணாடி பாத்திரத்தில் மாற்றி மூடி வைக்கவும். குறைந்தது ஒரு நாளாவது அப்படியே மூடி வைத்து பின் சாப்பிட்டுப் பாருங்கள் சுவை அட்டகாசமாக இருக்கும்.
இந்த பலாப்பழ ஊறுகாய் ரெசிபியை நீங்களும் முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.