அரவண பாயாசம் கேரளா ஸ்பெஷல் பாயாசம். இது கோவில் பிரசாதமாக செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. பகவதி அம்மன் கோவிலிலும், சபரிமலை பிரசாதமாகவும் இந்த அரவண பாயாசமே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என்று பாக்கலாம்.
தேவையான பொருட்கள்:
பொடித்த வெல்லம்- 400 கிராம்.
நெய்- தேவையான அளவு.
தண்ணீர்- தேவையான அளவு.
தேங்காய் துண்டுகள்- 1கப்.
முந்திரி பருப்பு- தேவையான அளவு.
சிவப்பு அரிசி- 200 கிராம்.
சுக்கு தூள்- 2 டேபில் ஸ்பூன்.
அரவண பாயாசம் செய்முறை:
இந்த பாயாசத்திற்கு நல்ல டார்க் பிரவுன் வெல்லம் தான் பயன்படுத்துவார்கள். அது இல்லையென்றால் வழக்கமாக வீட்டில் பயன்படுத்தும் வெல்லத்தை எடுத்துக் கொள்ளலாம்.
முதலில் கடாயில் 1கப் தண்ணீர் விட்டு 400 கிராம் பொடித்த வெல்லத்தை போடவும். வெல்லம் நன்றாக கரைந்து வந்ததும் வடிகட்டி தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.
இப்போது கடாயில் ஒரு டேபில் ஸ்பூன் நெய் சேர்த்து நறுக்கி வைத்திருக்கும் தேங்காய் துண்டுகளை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது அதே கடாயில் ஒரு டேபில் ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
சிவப்பு அரிசியை எடுத்துக்கொள்ளுங்கள். இது இல்லையென்றால் வீட்டிலே பயன்படுத்தும் அரிசியை கூட எடுத்துக்கொள்ளலாம். பாஸ்மதி அரிசியை உபயோகப்படுத்த வேண்டாம்.
இப்போது சிவப்பு அரிசியை 2 முறை நன்றாக கழுவி விட்டு வேகவைக்கவும். குக்கரில் வேகவைக்க வேண்டாம் அரிசி குழைந்துவிடும்.
200 கிராம் அரிசிக்கு ஆறு கப் தண்ணீர் ஊற்றி பாத்திரத்தில் வேக வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் அதில் 1 டேபில் ஸ்பூன் நெய் சேர்க்கவும்.
சாதம் நன்றாக வெந்ததும் அதில் கரைத்து வைத்திருக்கும் வெல்லத்தை சேர்க்கவும். அதில் 2 டேபில் ஸ்பூன் சுக்கு பொடியை சேர்த்து,. அதில் 3 டேபில் ஸ்பூன் நெய்,வறுத்து வைத்திருக்கும் தேங்காய் துண்டுகள், முந்திரி சேர்த்து கலக்கவும்.
இந்த பாயாசத்தை அப்படியே ஆற விடவும். 10 நிமிடம் கழித்து நன்றாக கெட்டியாகியிருக்கும். பருப்பு, பால் சேர்க்காததால் அவ்வளவு சீக்கிரம் கெட்டு போகாது. பிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.