பிள்ளைகள் பள்ளி விட்டு வந்ததும் சூடான மொறுமொறுப்பான ஏதேனும் தின்பண்டங்களை எதிர்பார்ப்பது வழக்கம். கடைகளில் பாக்கெட்டுகளில் விற்கும் தீனிகளை விட, நாமே நம் கையால் வீடுகளில் சுகாதாரமாக சத்தான உணவுகளை தயாரித்துக் கொடுத்தால் உடல் நலத்துடன் மகிழ்ச்சியும் பெருகும். இதோ குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான மீல் மேக்கர் கோலா உருண்டை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மீல் மேக்கர் உருண்டைகள் பெரியது - ஒரு கப் (கொதி நீரில் போட்டு அலசி நன்றாக பிழிந்து வைக்க வேண்டும்)
பொட்டுக்கடலை - அரை கப்
பட்டை - சிறிது
லவங்கம் - 5
சோம்பு - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - ஓரு ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - ஒன்று ( பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை கொத்துமல்லி- சிறிது
உப்பு -தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - பொறிப்பதற்கு.
செய்முறை:
கொதி நீரில் விட்டு இரண்டு முறை அலசி பிழிந்து வைத்த மீல்மேக்கரை மிக்ஸியில் இட்டு அரைத்துக் கொள்ளவும். பொட்டுக்கடலையை தனியே ஈரம் இல்லாத மிக்ஸியில் இட்டு தூளாக்கவும். பச்சை மிளகாய், பட்டை, சோம்பு, லவங்கம், இஞ்சி, பூண்டு போன்றவற்றை உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும் . இவை அனைத்தையும் மீல்மேக்கர் கலவையுடன் ஒன்றாக கலந்து நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை கொத்தமல்லி கலந்து நன்கு பிசைந்து கொள்ளவும். இதற்கு நீர் தெளிக்க வேண்டிய அவசியம் இராது. மிகவும் கெட்டியாக இருந்தால் மட்டும் சிறிது நீர் தெளிக்க வேண்டும்.
நன்கு கெட்டியாக பிசைந்த மாவை உருண்டைகளாக்கி அடுப்பில் வைத்த வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து பொரித்து எடுத்தால் சுவையான மீல் மேக்கர் கோலா உருண்டை தயார். இதை சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும். தேவைப்பட்டால் தக்காளி சாஸ் தொட்டுக்கொள்ளலாம்.