Kongu Naadu Thengai Pal Rasam 
உணவு / சமையல்

கொங்கு நாட்டு தேங்காய் பால் ரசம் செய்யலாம் வாங்க! 

கிரி கணபதி

கொங்குநாடு தன் தனித்துவமான கலாச்சாரம், பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்களுக்குப் பெயர் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் ஒவ்வொரு உணவும் தலைமுறை தலைமுறையாக பகிரப்படும் ரகசிய செய்முறைகளின் விளைவாகும். இவற்றில் ஒன்றுதான் கொங்கு நாட்டு தேங்காய் பால் ரசம். இது வெறும் உணவு என்பதைத் தாண்டி, கொங்கு மக்களின் அடையாளம் என்றே சொல்லலாம். இந்தப் பதிவில் கொங்கு நாட்டு தேங்காய்ப்பால் ரசம் எப்படி செய்வது என்பதை விரிவாகப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

  • தேங்காய்: 1 தேங்காய் (துருவியது)

  • புளி: ஒரு நெல்லிக்கனி அளவு

  • தக்காளி: 2

  • பூண்டு: 5-6 பல்

  • கறிவேப்பிலை: ஒரு கொத்து

  • கொத்தமல்லி விதை: 1 டீஸ்பூன்

  • சீரகம்: 1/2 டீஸ்பூன்

  • மிளகு: 1/2 டீஸ்பூன்

  • மஞ்சள் பொடி: 1/2 டீஸ்பூன்

  • உப்பு: தேவையான அளவு

  • எண்ணெய்: 2 டேபிள்ஸ்பூன்

  • கடுகு: 1/4 டீஸ்பூன்

  • வெந்தயம்: 1/4 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் தேங்காயை துருவி கெட்டியான பால் மற்றும் நீர்த்த பால் என இரண்டு பால் எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும். பின்னர், புளியை தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். 

மிக்ஸியில் கொத்தமல்லி விதை சீரகம், மிளகு, பூண்டு, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அடுத்ததாக தக்காளியை நறுக்கி, மஞ்சள் பொடி மற்றும் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து பேஸ்ட் போல ஆக்கிக் கொள்ளவும். 

இப்போது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, வெந்தயம் போட்டு தாளித்ததும் அரைத்த பொடி சேர்த்து வதக்கவும். பின்னர், தாளித்த மசாலாவில் தக்காளி பேஸ்ட் சேர்த்து வதக்கி பின்பு புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். 

ரசம் லேசாக கொதித்த பிறகு கெட்டியான தேங்காய் பால் சேர்த்து கிளறவும். பின்பு தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். இறுதியாக, நீர் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, அதில் கொத்தமல்லித் தழை தூவினால் சூப்பரான கொங்கு நாட்டு தேங்காய் பால் ரசம் தயார்.  

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT