இன்றைக்கு தீபாவளி ஸ்பெஷல் இனிப்பான மினி பாதுஷா மற்றும் சுவையான தோதா பர்பி ரெசிபிஸை வீட்டிலேயே எப்படி செய்யலாம்னு பார்ப்போம்.
மினி பாதுஷா செய்ய தேவையான பொருட்கள்;
மைதா-1 ¼ கப்.
பேக்கிங் பவுடர்-1/4 தேக்கரண்டி.
பேங்கிங் சோடா-2 சிட்டிகை.
நெய்-5 தேக்கரண்டி.
சர்க்கரை-1 ½ கப்.
தண்ணீர்-1 ½ கப்.
குங்குமப்பூ-சிறிதளவு.
ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.
எழுமிச்சை சாறு-1 தேக்கரண்டி.
எண்ணெய்- தேவையான அளவு.
பிஸ்தா- சிறிதளவு.
மினி பாதுஷா செய்முறை விளக்கம்;
ஒரு பவுலில் 1 ¼ கப் மைதா எடுத்துக்கொள்ளவும். இதில் ¼ தேக்கரண்டி பேக்கிங் பவுடர், 2 சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக ஒருமுறை கிளறிவிட்டுக் கொள்ளவும்.
இப்போது இதில் 5 தேக்கரண்டி நெய்விட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிசைந்து 20 நிமிடம் ஊற வைக்கவும். இப்போது ஒரு பாத்திரத்தில் 1 ½ கப் சர்க்கரை, 1 ½ கப் தண்ணீர், குங்குமப்பூ சிறிதளவு, ஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி சேர்த்து தேன் போன்ற பதம் வந்ததும் 1 தேக்கரண்டி எழுமிச்சை சாறு சேர்த்து கலந்து விட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது மாவை குட்டி குட்டி உருண்டைகளாக எடுத்துக்கொள்ளவும். நன்றாக உருட்டி நடுவிலே ஒரு ஒட்டை போட்டு எண்ணெய்யில் நன்றாக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இதை உடனேயே செய்து வைத்திருக்கும் ஜீராவில் சேர்த்து ஐந்து நிமிடம் ஊறவைத்து வேறு தட்டில் மாற்றிவிடவும். இதற்கு மேல் அழகுக்கு பிஸ்தா தூவி பரிமாறவும். சுவையான மினி பாதுஷா தயார். நீங்களும் இந்த தீபாவளிக்கு இந்த சிம்பிள் ரெசிபியை ட்ரை பண்ணிப் பாருங்கள்.
தோதா பர்பி செய்ய தேவையான பொருட்கள்;
நெய்-3 தேக்கரண்டி.
கோதுமை மாவு-2 தேக்கரண்டி.
கோதுமை ரவை-1 கப்.
பால்-1 லிட்டர்.
வெல்லம்-3/4 கப்.
எழுமிச்சை சாறு-1 தேக்கரண்டி.
கொக்கோ பவுடர்-1 தேக்கரண்டி.
ஏலக்காய் பொடி-1/2 தேக்கரண்டி.
பாதாம், பிஸ்தா- தேவையான அளவு.
தோதா பர்பி செய்முறை விளக்கம்;
முதலில் ஃபேனில் 3 தேக்கரண்டி நெய் விட்டுக் கொள்ளவும். அதில் 2 தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்து கட்டி வராமல் தீயை கம்மியாக வைத்து வேகவிடவும். இதில் கோதுமை ரவை 1 கப் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
இப்போது இதில் 1 லிட்டர் காய்த்த பாலை சேர்த்துக் கொள்ளவும். பாலிலே கொதி வந்ததும் அதில் ¾ கப் வெல்லம் சேர்க்கவும். இப்போது அதில் எழுமிச்சை சாறு 1 தேக்கரண்டி சேர்த்து கலந்து விடவும். பால் நன்றாக திரிய ஆரம்பிக்கும். இப்போது கொக்கோ பவுடரை 1 தேக்கரண்டி சேர்த்து அதில் தண்ணீர் சிறிது விட்டு நன்றாக கலக்கி இதில் சேர்த்துக்கொள்ளவும்.
இதில் 1 தேக்கண்டி நெய் விட்டு கிண்டவும். வாசனைக்காக ஏலக்காய் பொடி ½ தேக்கரண்டி சேர்த்துக்கொள்ளவும். நன்றாக திரண்டு நெய் பிரிந்து வரும் அப்போது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். இப்போது ஒரு தட்டில் கொட்டி சமன் செய்து விடுங்கள். இதற்கு மேலே பாதாம், பிஸ்தா தேவையான அளவு துருவி தூவி விடவும். அப்படியே இதை 2 மணி நேரம் விட்டு வைத்துவிட்டு ஆறியதும் சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி பரிமாறவும். டேஸ்டியான தோதா பர்பி தயார். நீங்களும் வீட்டிலே இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.