மதுரை பால் பன்
தேவையான பொருட்கள்:
மைதா மாவு _ 1கப்
சர்க்கரை _ 1 கப்
புளிக்காத தயிர் _1 கப்
பொரிக்க தேவையான எண்ணெய்
நெய் _2 ஸ்பூன்
உப்பு + சோடாஉப்பு _ சிறிது
சர்க்கரை 2ஸ்பூன்+ ஏலக்காய்_1 சேர்த்து திரிந்த பொடி
லெமன் ஜூஸ் 3 சொட்டு
செய்முறை:
முதலில் ஒரு அகன்ற கிண்ணத்தில் தயிரை ஊற்றி அதில் உப்பு, சோடா உப்பு இரண்டையும் சேர்த்து நன்கு நுரை வரும் வரை அடித்து கலக்கவும். இத்துடன் நெய்யை விட்டு பொடித்த சர்க்கரை ஏலக்காய் பவுடரை சேர்த்து அடித்து கலக்கி மைதா மாவை அதில் சேர்த்து நன்கு கை கொண்டு நன்றாக பிசைந்து விட்டு 5 நிமிடம் மாவை நன்கு மசாஜ் பண்ணி விடவும். பிசைந்த மாவை 1/2 மணி நேரம் மூடி போட்டு ஊறவைக்கவும்.
பின்னர் சர்க்கரை பாகு தயார் பண்ண அடி கனமான வாணலியில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி சர்க்கரையை போட்டு அடுப்பில் வைத்து சர்க்கரை கரையும் வரை கரண்டியால் நன்கு கரைத்து விடவும். பாகு பிசுபிசுப்பு தன்மை வரும் வரை காய்த்து இறக்கி 3 சொட்டு லெமன் ஜூஸ் விட்டால் பாகு உறையாமல் அப்படியே இருக்கும்.
பிறகு பொரிப்பதற்கு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் தீயை குறைத்து வைத்து மாவை எடுத்து மேலும் கை கொண்டு நன்கு அடித்து கலக்கி விட்டு கையால் சிறிதளவு மாவை எடுத்து அப்பம் பொரிப்பது போல் பன்னை பொரித்து மறுபக்கமும் திருப்பி, போட்டு சமமாக வெந்து பொன்னிறமாக வந்ததும் கண் அகப்பை வைத்து பன்னை எடுத்து எண்ணெய் வடிந்ததும் சூட்டோடே சர்க்கரை பாகில் போட்டு திருப்பி போட்டு 3 நிமிடம் ஊறவிட்டு முழுமையாக சர்க்கரை பாகில் நனைத்து எடுத்து தனி பாத்திரத்திற்கு மாற்றி விடவும். மிகவும் சுவையான மதுரை பால் பன் ரெடி. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
பீட்ரூட் கேசரி:
தேவையான பொருட்கள்:
பெரிய பீட்ரூட் _1
ரவை _1கப்
தண்ணீர் _11/2 கப்
நெய்_ 1/4 கப்
சர்க்கரை _11/4 கப்
ஏலக்காய் தூள்_1/2 ஸ்பூன்
எண்ணெய் _11/2 ஸ்பூன்
செய்முறை:
முதலில் பீட்ரூட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான தண்ணீர் விட்டு நைசாக அரைத்து வடிகட்டி ஜூஸ் எடுக்கவும்.
பின்னர் ஒரு வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு ரவையை போட்டு மிதமான தீயில் இடையிடையே குறைவான தீயில் வைத்து ரவையை பொன்னிறமாக வரும் வரை நன்கு வறுத்து எடுக்கவும்.
பின்னர் ஒரு அடி கனமான பாத்திரத்தில் 2 கப் ஜூஸ் ஊற்றி 11/2 கப் தண்ணீர் சேர்த்து இத்துடன் 1/2 ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கொதித்த பிறகு ரவையை சிறிது சிறிதாக தூவி கிண்டி கொடுக்க வேண்டும். ரவை சிறிது கெட்டியானதும் சர்க்கரை சேர்த்து நன்கு கிண்டி விடவும். சர்க்கரை நன்கு உருகி, ஓரளவு தண்ணீர் பதத்துக்கு வரும். திரும்பவும் ஓரளவு கெட்டியாகியதும், எண்ணெய், 1 ஸ்பூன் நெய் ஏலக்காய்பொடி சேர்த்து நன்கு கலந்து விட்டு தீயை அணைக்கவும்.
பின்னர் சிறிய வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு, முந்திரி, கிஷ்மஸ் போட்டு வறுத்து கேசரியுடன் கலந்து விடவும். எண்ணெய் சேர்ந்திருப்பதால் விரைவில் கெட்டியாகாது. சூப்பர் சுவையுடன் பீட்ரூட் கேசரி ரெடி. இரத்த சத்து நிறைந்த பீட்ரூட் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.