Madurai Veg Salna Recipe.
Madurai Veg Salna Recipe. 
உணவு / சமையல்

இப்படி ஒரு முறை மதுரை வெஜ் சால்னா செஞ்சு பாருங்க.. ஒரு இட்லி, தோசை கூட மிச்சம் இருக்காது! 

கிரி கணபதி

நாம் என்னதான் வீட்டில் சுவையாக வெஜ் சால்னா செய்ய முயற்சி செய்தாலும் அது ஹோட்டலில் செய்யும் ருசிக்கு வருவதில்லை. ஆனால் ஒரு முறை இந்த பதிவில் நான் சொல்லப்போவது போல மதுரை ஸ்டைலில் வெஜ் சால்னா செய்து பாருங்கள், சுவை அட்டகாசமாக இருக்கும். இட்லி, சப்பாத்தி, பூரி, பரோட்டா என அனைத்திற்குமே செம காம்பினேஷனாக இருக்கும். சரி வாருங்கள் அதை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 

வெங்காயம் - 3

தக்காளி - 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்

தேங்காய் - அரை கப் துருவியது

மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்

மிளகாய் தூள் - 2 ஸ்பூன்

கசகசா - 1 ஸ்பூன்

கரம் மசாலா - 1 ஸ்பூன்

முந்திரி - 10

கொத்தமல்லித் தூள் - 1 ஸ்பூன் 

சோம்பு - 1 ஸ்பூன் 

பட்டை - 2

கிராம்பு - 4

எண்ணெய் - தேவையான அளவு

அன்னாசிப் பூ - 1

ஏலக்காய் - 2

புதினா இலை - ½ கைப்பிடி

பிரியாணி இலை - 2

கொத்தமல்லித் தழை - சிறிதளவு

சர்க்கரை - ½ ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு

செய்முறை: 

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் கசகசா மற்றும் முந்திரிப் பருப்பை தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வையுங்கள். அடுத்ததாக ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கிராம்பு, பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசி பூ சேர்த்து மிதமான சூட்டில் கலந்து விடுங்கள். 

அடுத்ததாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் பொடியாக நறுக்கப்பட்ட தக்காளியை சேர்த்து, அத்துடன் உப்பையும் கொஞ்சம் போட்டு தக்காளி மென்மையாக வேகும் வரை வதக்கவும். 

தக்காளி மற்றும் வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட், புதினா இலைகள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்குங்கள். பிறகு அதிலேயே மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். 

இவை அனைத்தும் வதங்கிக் கொண்டிருக்கும்போதே, ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சோம்பு, ஊற வைத்துள்ள கசகசா மற்றும் முந்திரியை சேர்த்து பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை வதங்கிக் கொண்டிருக்கும் வெங்காயம் தக்காளியில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்றாகக் கிளறி விடவும். 

பின்னர் தேவையான அளவு உப்பு இருக்கிறதா என சரி பார்த்து, குக்கரை மூடி, குறைந்த தீயில் ஒரு விசில் விடுங்கள். பின்னர் குக்கர் மூடியைத் திறந்து அதில் சர்க்கரை மற்றும் கொத்தமல்லித் தழையை சேர்த்து கலந்துவிட்டால், சூப்பர் சுவையில் கமகமக்கும் மதுரை வெஜ் சால்னா தயார். 

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT