"உப்பத் தொட்டுக்கிட்டு உரல முழுங்கு" ன்னு கிராமங்களில் பெரிசுகள் அடிக்கடி சொல்வதுண்டு. அதாவது, நீண்ட நாட்கள் கெடாமலிருப்பதற்காக அதிகளவில் உப்பு சேர்த்து தயாரிக்கப்பட்டிருக்கும் ஊறுகாயைத் தொட்டுக் கொண்டு உரல் அளவுக்கு அதிகமான சோற்றைக் கூட உண்டுவிடலாம் என்பதை மிகைப்படுத்திக் கூறப்பட்ட வார்த்தைகளே அவை.
இப்பவும் ஊறுகாய் இல்லாத வீடுகளே இல்லை என்று கூறும் அளவுக்கு அதற்கு முக்கியத்துவம் உண்டு. சாதத்திற்கு மட்டுமின்றி, உப்புமா போன்ற சில டிபன் வகைகளுக்கும் ஊறுகாயைத் தொட்டுக்கொள்ளலாம். எலுமிச்சை, மாங்காய், நெல்லிக்காய் போன்ற பல வகை ஊறுகாய்கள் நம் வீட்டு டைனிங் டேபிளில் இடம் பிடித்திருப்பது சகஜம். இப்போது நாம் கரம்போலா ஊறுகாய் (Star Fruit Pickle) செய்வது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
1. ஸ்டார் ஃபுரூட் 500 கிராம்
2. உப்பு 2 டேபிள்ஸ்பூன்
3. கடுகு எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
4.வெந்தயம் ½ டீஸ்பூன்
5. சீரகம் ½ டீஸ்பூன்
6. பெருஞ்சீரகம் ½ டீஸ்பூன்
7. கருஞ்சீரகம் ½ டீஸ்பூன்
8. பெருங்காயம் ¼ டீஸ்பூன்
9. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
10. சிவப்பு மிளகாய் தூள் 2 டேபிள்ஸ்பூன்
11. வினிகர் 2 டேபிள்ஸ்பூன்
12. வெல்லம் அல்லது சர்க்கரை 2 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
செய்முறை:
ஸ்டார் ஃபுரூட்டை கழுவி சுத்தப்படுத்தி மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின் அவற்றை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு அதன் மீது உப்பைத் தூவி கலக்கவும். அரை மணி நேரம் அப்படியே ஊற விடவும்.
பின் அதிலுள்ள நீரை நன்கு வடித்து விடவும். பின் ஒரு மெல்லிய காட்டன் துணி அல்லது பேப்பர் டவலால் பழத்தின் மேலிருக்கும் நீரை நன்கு ஒத்தி எடுக்கவும். பழத் துண்டுகளை ஈரப் பதம் இன்றி நன்கு உலர விடவும்.
பிறகு கடாயில் கடுகு எண்ணையை சேர்த்து சிறு தீயில் சூடாக்கவும். பின் அதில் வெந்தயம், சீரகம், பெருஞ்சீரகம், கருஞ்சீரகம் ஆகியவற்றைப் போடவும். இருபது செகண்ட் கழித்து மஞ்சள் தூள் பெருங்காயத் தூள் சேர்க்கவும். பின் ஸ்டார் ஃபுரூட் துண்டுகளைச் சேர்த்து நன்கு கலந்து விடவும். பின் மிளகாய் தூள் சேர்க்கவும். விருப்பப் பட்டால் வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்துக் கலந்து, சிறு தீயில் ஆறு அல்லது ஏழு நிமிடங்கள் வரை வேகவிடவும். பின் அதில் வினிகர் சேர்த்து கலக்கவும்.
வினிகர் நன்கு உறிஞ்சப்படும் வரை மேலும் மூன்று நிமிடங்கள் வேக விடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும். நன்கு ஆறிய பின், ஒரு சுத்தமான காற்றுப் புகாத ஜாடியில் போட்டு மூடவும்.
சுவையான கரம்போலா (Carambola) ஊறுகாய், சுவைத்து மகிழ தயார்.