மத்தியான வேளையில் சாதத்துடன் ஊற்றி சாப்பிட சத்தான, சுவையான குழம்பு வகைகள் பற்றி பார்க்கலாம்.
புதினா இலைகளில் புளி குழம்பு
தேவையான பொருட்கள்;
புதினா இலைகள்_1கப்
சின்ன வெங்காயம் _10
பூண்டு _10 பற்கள்
புளி _1 நெல்லிக்காய் அளவு
வெந்தயம், கடுகு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள், தலா_1/4 ஸ்பூன்
சாம்பார் பொடி _3 ஸ்பூன்
பொடித்த வெல்லம் _1 ஸ்பூன்
நல்லெண்ணெய் _4 ஸ்பூன்
உப்பு _ தேவைக்கு
வறுத்து அரைக்க
கடலைப்பருப்பு_1 ஸ்பூன்
வெள்ளை எள் _11/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் _1
செய்முறை:
புளியை வெந்நீரில் ஊறவைத்து 1/2 கப் தண்ணீருடன் சாறு எடுக்கவும். வெங்காயம் மற்றும் பூண்டுகளை உரிக்கவும். புதினா இலைகளை நன்கு கழுவி உலர வைக்கவும். ஒரு கடாயை சூடாக்கி கடலைப்பருப்பு, வெள்ளை எள் மற்றும் சிவப்பு மிளகாயை வறுத்து ஆறியதும் பொடித்து கொள்ளவும்.
ஒரு கடாயில் நல்லெண்ணெய் சூடாக்கி வெந்தயம், கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு சேர்க்கவும். அவை வெடித்ததும் சிறிய வெங்காயம், பூண்டு சேர்க்கவும். பொன்னிறமாகும் வரை வதக்கி பிறகு புதினா இலைகளை சேர்க்கவும்
புதினா இலைகள் கடும் பச்சை நிறமாக மாறி அளவு குறையும்வரை வதக்கவும். பிறகு புளி சாறு மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து மஞ்சள்தூள், சாம்பார் தூள் சேர்க்கவும். மிதமான தீயில் வைத்து சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.
கெட்டியானதும், பொடித்த வெல்லம் மற்றும் வறுத்து பொடித்த பொடியை சேர்க்கவும். பிறகு சிறிது கொதிக்க வைத்து பரிமாறலாம்.
வெள்ளை பூசணி சாம்பார்
தேவையான பொருட்கள்;
வெள்ளை பூசணி துண்டுகள்_1 கப்
துவரம் பருப்பு_1/4 கப்
வேக வைத்த கருப்பு காரமணி _2 ஸ்பூன்
புளி கரைசல் _3 ஸ்பூன்
தக்காளி _1
சாம்பார் பொடி _2 ஸ்பூன்
மஞ்சள்தூள் _1/4 ஸ்பூன்
கொத்தமல்லி இலைகள்_ சிறிதளவு
எண்ணெய், உப்பு _தேவைக்கு
தாளிக்க;
வெந்தயம், கடுகு, கடலைப்பருப்பு தலா _1/4 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் _1 ஸ்பூன்
கறிவேப்பிலை _ சிறிது
செய்முறை: துவரம் பருப்பை குழைய வேகவைக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் புளிசாற்றை சேர்த்து வெள்ளை பூசணித் துண்டுகள், உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வேகவைக்கவும். பூசணிக்காய் நன்றாக வெந்ததும் அதில் சாம்பார்பொடி, தக்காளி மற்றும் வேகவைத்த காராமணி சேர்க்கவும். பின்னர் வேகவைத்த துவரம் பருப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து சாம்பாரை 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்.
சாம்பார் கெட்டியானதும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை சேர்த்து அடுப்பை அணைக்கவும். இறுதியாக சிறிய வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு தாளித்து சாம்பாரில் ஊற்றி நன்கு கலந்து மூடியால் மூடி விட வேண்டும். சுவையான வெள்ளை பூசணி சாம்பார் ரெடி.
வெந்தயக்கீரை சாம்பார்
எளிதான செய்முறை: ஒரு கப் துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். 2 கட்டு வெந்தயக்கீரையை ஆய்ந்து சிறிதளவு எண்ணெய்விட்டு வதக்கவும். ஒரு வாணலியில் 1/2 கப் புளி கரைசல் ஊற்றி 3 ஸ்பூன் சாம்பார் பொடி, தேவையான உப்பு மற்றும் வதக்கிய கீரையை சேர்த்து கொதிக்க விட்டு அத்துடன் வேகவைத்த பருப்பை சேர்த்து கிளறவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து குழம்பில் சேர்த்து இறங்கவும். வெந்தயக்கீரை குளிர்ச்சி தருவதுடன் வயிற்று புண்ணையும் ஆற்றும்.