Pirandai thuvaiyal 
உணவு / சமையல்

பிரண்டைத் துவையல் பெருகும் பலன்கள்!

ரெ. ஆத்மநாதன்

துவைத்துச் சாப்பிடுவதால் துவையல் என்றழைக்கப்படும் இந்த ‘சைட் டிஷ்’, அதிகமான சத்துக்களை நமக்கு அப்படியே தந்து, நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது! துவையலில் ஏகப்பட்ட வகைகள் உள்ளன. இவற்றின் சிறப்பு என்னவென்றால், இவற்றில் சேர்க்கப்படுகின்ற பொருட்கள் நன்கு துவைக்கப்பட்டு ஒன்று சேர்கின்றன! கூட்டணிதானே வலுவானது! அவையனைத்தும் கூட்டாகச் சேர்ந்து நம் உடல் உபாதைகளை நீக்கி, நமக்கு உற்சாகம் அளித்து, ஆரோக்கியத்தோடு ஆனந்தத்தையும் பரிசாக அளிக்கின்றன. சேரும் பொருட்கள் வேக வைக்கப்படாமல் நீர் கூட்டி வடிக்கப்படும் முறை காரணமாக, இயற்கையாகவே அவை கொண்டுள்ள சத்துக்களை அப்படியே நமக்கு வழங்குகின்றன!

பருப்புத் துவையல், உளுத்தம் துவையல், கொள்ளுத் துவையல் போன்று, தானியத் துவையல்கள் ஒரு வகை! பீர்க்கங்காய் தோல் துவையல் போன்று, காய்கறிகளையும்  அவற்றின் தோல்களையும் மூலப் பொருட்களாகக் கொண்டவை மற்றொரு வகை!பிரண்டை, முடக்கத்தான், வல்லாரை போன்ற மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படுபவை வேறொரு வகை! பலவகைக் கீரைகளைக் கொண்டும், பச்சை மிளகாய், தேங்காய் போன்றவற்றைக் கொண்டும் துவையல் அரைக்கலாம். இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்தப் பச்சை மிளகாயும் தேங்காயும் பல துவையல்களுடன் கூட்டணி சேருபவை! ருசிக்கும், சத்துக்கும் உதவுபவை!

தற்காலத்தில் சர்க்கரை நோயும், இதய நோய்களுந்தான் மனிதர்களை அதிகமாக வதைக்கின்றன! கல்யாண விழாக்களில் நடனமிடும் கல்லூரி மாணவர்கள் கண நேரத்தில் மயங்கி விழுந்து விடுகிறார்கள்! ரத்தக் குழாய்களில் ரத்தம் ஓட வழி விடாமல், கொழுப்புத் திசுக்கள் கொடி பிடிக்கின்றன! அடுத்ததாக ஆஸ்துமாவும், மூல நோயும், எலும்புத் தேய்மானமும் என்று வரிசைகட்டி வந்து அல்லற்படுத்துகின்றன! இவற்றையெல்லாம் கட்டிப்போடும் வல்லமை படைத்ததுதான் பிரண்டை!

பெண்களின் மாதவிடாய்ப் பிரச்னைகளுக்கும் மருந்தாகும் இந்தப் பிரண்டை! ஜீரணம் சிறப்பாகச் செயல்படும் உடல்களை நோய்களால் எளிதாக அணுக முடியாது! உறுதியுள்ள எலும்புகள் எளிதில் தேயமாட்டா! கொழுப்புப் படியாத ரத்தக் குழாய்களே இதய நோய்களின் எதிரிகள்!அமைரின், அமிரோன், சிட்டோசிரால் மற்றும் விடமின் சி ஆகியவற்றை அதிகமாகத் தன்னிடத்தே கொண்டது பிரண்டை! அடிக்கடி பிரண்டைத் துவையலை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மேற்குறிப்பிட்ட நோய்கள் வராமலும், வந்தவர்கள் அவற்றிலிருந்து விடுபடவும் உதவும் அற்புதக் கொடிதான் பிரண்டை!

பிரண்டைத் துவையலுக்குத் தேவையான பொருட்கள்:

  • ஒரு கட்டு பதமான பிரண்டை

  • 5 பச்சை மிளகாய்கள்

  • பெருநெல்லி அளவு புளி

  • தேவைக்கேற்ற அளவில் உப்பு

  • ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு (இது ஆப்ஷன்- துவையல் அதிகம் தேவையென்றால் சேர்த்துக் கொள்ளலாம்)

செய்முறை எளிதானதுதான்!

பொடிசாக பிரண்டையை நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், புளி ஆகியவற்றையும் உடன் சேர்த்து, வாணலியில் சிறிதே எண்ணெய் விட்டு, பிரண்டையின் கலர் மாறும் வரை வதக்கிக் கொள்ளவும். வதக்கப்பட்டவற்றை ஆற விட்டு, பின்னர் மிக்சியில் இட்டு அரைத்துக் கொள்ளவும்.

மருத்துவக் குணங்கள் நிறைந்த துவையலைச் சூடான சோற்றுடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடவும். ருசியுடன் சேர்ந்து ஆரோக்கியத்திற்கும் அடி கோலும்!

கர்ப்பிணிகளும்,சர்க்கரை வியாதி உள்ளவர்களும் மருத்துவரின் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது! பிரண்டையை வீட்டுத் தோட்டத்திலும், மாடித் தோட்டத்திலும் வளர்க்கலாம்!

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

SCROLL FOR NEXT