மழைக்கால மூக்குக்கு முசுமுசுக்கை என்பார்கள். விடாத இருமல், சளித் தொல்லை, ஆஸ்துமா போன்ற நுரையீரல் பிரச்னைகளை போக்கும். மழைக்காலத்திற்கு ஏற்ற தோசை இது.
முசுமுசுக்கை அடை:
சின்ன வெங்காயம் 10
பச்சை மிளகாய் 2
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன் முசுமுசுக்கை இலை 2 கைப்பிடி
அரிசி மாவு 1 கப்
மிளகு, சீரகம் 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு 2 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
உப்பு தேவையானது
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முசுமுசுக்கை இலைகளை ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம் சேர்த்து சிறிது நல்லெண்ணெய் விட்டு சிவக்க வறுத்து அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், முசுமுசுக்கை இலைகளை சேர்த்து வதக்கி எடுக்கவும்.
சிறிது ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து அரிசி மாவுடன் கலந்து விடவும். பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையும் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு அடை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது சூடான தோசைக்கல்லில் சிறிது தடிமனான அடைகளாக தட்டி இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும் எடுத்து காரச் சட்னியுடன் பரிமாறவும்.
தக்காளி கார சட்னி:
தக்காளி 2
பெரிய வெங்காயம் 1
பூண்டு ஐந்தாறு
மிளகாய் 4
புளி சிறிய எலுமிச்சையளவு
உப்பு தேவையானது
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை எண்ணெய் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் போட்டு சிவக்க வறுத்ததும் அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து தேவையான உப்பு, புளியையும் போட்டு நன்கு வதக்கவும். தக்காளி மென்மையாக வதங்கியதும் சிறிதுநேரம் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கடுகு பொரிந்ததும் அரைத்து வைத்துள்ள சட்டினியுடன் கலந்து பரிமாற சுவையான ரோட்டுக்கடை கார சட்னி தயார்.