இட்லி, தோசைக்கு சட்னி அரைச்சு அரைச்சு கையெல்லாம் வலிக்குதா? இனி ஒரு முறை சட்னி பொடி அரைத்து வைத்தால் போதும், அதை எப்போது வேண்டுமானாலும் சட்னியாக மாற்றிக் கொள்ளலாம். இந்த பதிவில் புதினா சட்னி பொடி எப்படி செய்வது? எனத் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
புதினா - 2 கட்டு
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - 1 இன்ச் அளவு
பூண்டு - 8 பல்
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
கடலைப்பருப்பு - ½ கப்
உளுத்தம் பருப்பு - 1 கப்
கடுகு - ½ ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயத்தூள் - ½ ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, அது நன்றாகக் காய்ந்ததும் பச்சை மிளகாய் பூண்டு இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
இவை நன்கு வதங்கியதும் அதிலேயே சுத்தம் செய்து வைத்துள்ள புதினாவை சேர்த்து அதை மொத்தமாக சுருலும் வரை வதக்க வேண்டும். இந்த செயல்முறையில் தீயை மிதமாக வைத்து வதக்க வேண்டும். இல்லையேல் பொருட்கள் அனைத்தும் கருகிவிடும். புதினா நன்றாக சுருண்டதும் அதில் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பை சேர்த்து அவை பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அதிலேயே தேவையான அளவு உப்பு மற்றும் புளி சேர்த்து ஈரம் போகும் வரை வறுத்துவிட்டு, கடாயை கீழே இறக்கி அனைத்தையும் நன்றாக ஆறவிடுங்கள். இதில் ஈரப்பதம் இல்லாத அளவுக்கு பார்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இவை அனைத்தையும் ஒன்றாக மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் கடாயை மீண்டும் அடுப்பில் வைத்து, கடுகு, கருவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அந்த தாளிப்பை இந்த பொடியில் சேர்க்க வேண்டும். இதில் எண்ணெய் சேர்த்து தாளிக்கக்கூடாது. அவ்வளவுதான் எளிதான புதினா சட்னி பொடி தயார். இதை ஒரு டப்பாவில் அடைத்து நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம். நீங்கள் விருப்பப்பட்டால் இதில் தண்ணீர் சேர்த்து சட்னியாக மாற்றியும் பயன்படுத்தலாம் அல்லது அப்படியே கூட இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.