குலாப் அல்வா என அழைக்கப்படும் ரோஸ் அல்வா நெய் மற்றும் நட்ஸ் பயன்படுத்தி ரோஜாக்களின் நறுமணத்துடன் செய்யும் சூப்பரான இந்திய உணவாகும். பார்ப்பதற்கே அழகாக இருக்கும் அதன் ரோஸ் நிறம் மற்றும் நறுமணம் காரணமாக பலரால் விரும்பி உண்ணப்படுகிறது. குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் நிச்சயம் விரும்பி உண்பார்கள். சரி வாருங்கள் இந்தப் பதிவில் ரோஸ் அல்வா எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
1 கப் ரவை
1 கப் சக்கரை
1 கப் பால்
1 கப் தண்ணீர்
¼ கப் நெய்
¼ ஸ்பூன் ஏலக்காய் தூள்
ஒரு கைப்பிடி நட்ஸ்
1 ஸ்பூன் ரோஸ் வாட்டர்
ரோஜா எசன்ஸ் சில துளிகள்
அழகுப்படுத்த ரோஜா இதழ்கள்
செய்முறை:
முதலில் அடி கனமான கடாயில் மிதமான சூட்டில் நெய் சேர்க்கவும். பின்னர் அதில் ரவையை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
அடுத்ததாக ஒரு தனி வாணலியில் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து ஒன்றாகக் கொதிக்க விடவும். பின்னர் வறுத்த ரவையில் சூடான பால் மற்றும் தண்ணீர் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டிகள் இல்லாமல் கிளறவும். கிளறும்போது கவனமாக இருங்கள்.
இந்தக் கலவையை குறைந்த வெப்பத்தில் ரவை வேகும் வரை சுமார் 10 நிமிடங்களுக்கு வேக விடவும். பின்னர் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அல்வா பதம் கிடைக்கும்.
இப்போது ஏலக்காய் தூள், நட்ஸ், ரோஸ் வாட்டர் மற்றும் ரோஸ் எசென்ஸ் ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும். இது அல்வாவுக்கு ரோஜாவின் சுவை மற்றும் நறுமணத்தைக் கொடுக்கும்.
இப்போது தொடர்ச்சியாக ஐந்து நிமிடங்களுக்கு அல்வாவைக் கிளறிக் கொண்டிருந்தால், நீங்கள் எதிர்பார்க்கும் அல்வா பதம் வந்துவிடும். இப்போது அடுப்பை அணைத்து சிறிது நேரம் ஆறவிடுங்கள்.
இறுதியில் அல்வா ஆறியதும் ரோஜா இதழ்களை மேலே தூவி அலங்கரித்தால் சூப்பர் சுவையில் ரோஸ் அல்வா தயார்.