சுவையான, ஆரோக்கியத்தை தரும் காரட் இனிப்பு போண்டா, வேர்கடலை அல்வா, மற்றும் உளுந்து பணியாரம்!
காரட் இனிப்பு போண்டா
தேவை:
கோதுமை மாவு _ 11/2 கப்
உப்பு _1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் _1/4 ஸ்பூன்
பட்டைத்தூள் _1/4 ஸ்பூன்
பொடித்த சர்க்கரை _2 ஸ்பூன் முட்டை _1
பாதாம்பருப்பு _10
முந்திரிப்பருப்பு _10
தோல் சீவிய காரட் துண்டுகள்_1 கப்
தேங்காய் துண்டுகள் _ ½ கப்
நெய் _1 ஸ்பூன்
ஏலக்காய் விதைகள் _4
பொடித்த வெல்லம் _ 1/2 கப்
எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, மஞ்சள்தூள், பட்டைத்தூள், பொடித்த சர்க்கரை, முட்டை சேர்த்து நன்கு கிளறி சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பக்கத்தில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் ,முந்திரிபருப்பு, பாதாம்பருப்பு சேர்த்து அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதே ஜாரில் காரட் துண்டுகள், தேங்காய் துண்டுகள், ஏலக்காய் விதை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் ஏற்றி நெய் ஊற்றி அரைத்த கேரட் விழுதை போட்டு வதக்கி அத்துடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து வதக்கி பின்னர் அரைத்து வைத்த முந்திரி, பாதாம் பவுடரை சேர்த்து 10 நிமிடம் வதக்கி ஆறியதும் லட்டு மாதிரி உருண்டை பிடித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் எண்ணெய் சட்டையை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி உருண்டைகளை கலக்கி வைத்திருந்த கோதுமை மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சூப்பர் சுவையுடன் காரட் இனிப்பு போண்டா தயார்.
வேர்க்கடலை அல்வா
தேவை:
வேர்க்கடலை _1 கப்
ஏலக்காய் _2
பால் _1கப்
நெய் _1 ஸ்பூன்
முந்திரி பருப்பு _10
காய்த்து வடிகட்டிய வெல்லபாகு _1/2 கப்
செய்முறை: முதலில் வேர்க்கடலையை வறுத்து ஆறியதும் தோல் நீக்கி ஒரு மிக்ஸிஜாரில் போட்டு, ஏலக்காய், பால் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையை ஒரு வாணலியில் சேர்த்து சிறு தீயில் வைத்து கை விடாமல் கிளறி கொண்டே இருக்கவும். சிறிது நேரத்தில் நன்றாக வெந்து வரும். அதே நேரத்தில் காய்ச்சி வடிகட்டிய வெல்லபாகுவை சேர்த்து கை விடாமல் கிளறவும். அல்வா இறுகி வரும் வேளையில் நெய் சேர்த்து கிளறி இறுதியாக முந்திரி சேர்த்து இறக்கி ஆற விடவும். சுவையான, ஆரோக்கியமான அல்வா தயார்.
உளுந்து பணியாரம்
தேவை:
உளுத்தம்பருப்பு _100 கிராம்
நாட்டுசர்க்கரை _1/2 கப்
முட்டை _1
ஏலக்காய்ப்பொடி _1/2 ஸ்பூன்
தேங்காய்துருவல் _1/2 கப்
நல்லெண்ணெய் _ தேவைக்கு
உப்பு _1/4 ஸ்பூன்
செய்முறை: உளுத்தம்பருப்பை நன்கு கழுவி தண்ணீர் விட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு ஊற வைத்த தண்ணீர் சேர்த்து நைசாக, நன்கு கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அத்துடன் நாட்டுசர்க்கரை, முட்டையை உடைத்து ஊற்றி, ஏலக்காய் பொடி, உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரை ஒரு சுற்று சுற்றி விட்டு அனைத்தும் கலந்ததும் தனிப் பாத்திரத்தில் எடுத்து அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து மாவை ரெடி பண்ணவும்.
பின்னர் குழி பணியாரம் கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி, ஒவ்வொரு குழியிலும் அரை பகுதிக்கு மாவை ஊற்றி வேக வைக்கவும். வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக விடவும். எலும்புகள் வலுப்பட, ஆரோக்கியமான உளுந்து பணியாரம் ரெடி.