Vazhaipoo Kola and Green Gram Susiyam Img Credit: Pinterest
உணவு / சமையல்

வாழைப்பூ கோலா உருண்டையும், பச்சைப்பயிறு சுழியமும்!

ராதா ரமேஷ்

பெரும்பாலும் வாழைப்பூவில் வடை செய்து சாப்பிட்டு இருப்போம்! மாறுதலாக ஒரு முறை இந்தக் கோலா உருண்டையை ட்ரை பண்ணி பாருங்க!

வாழைப்பூ கோலா உருண்டை:

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 2 கைப்பிடி

பொட்டுக்கடலை - 1/4 கப்

துருவிய தேங்காய் - 1/4 கப்

அரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன்

பூண்டு - 3

இஞ்சி - சிறிதளவு

பட்டை, கிராம்பு - 2

சோம்பு - 1/4 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய், வர மிளகாய் - 2

சின்ன வெங்காயம் - 5

பெரிய வெங்காயம் - 1

கொத்தமல்லி இலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரித்து எடுக்க தேவையான அளவு

செய்முறை:

ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலையை போட்டு மாவு பதத்திற்கு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வர மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும். பின் அதே வாணலியில் சுத்தம் செய்து வைத்த வாழைப்பூவை சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 3 நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொண்டு, அதனோடு வதக்கி வைத்த சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு கலவையை சேர்த்து அரைக்கவும். பின் இதோடு வேகவைத்த வாழைப்பூவையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இக்கலவையோடு துருவிய தேங்காய், அரிசி மாவு மற்றும் பொட்டுக்கடலை மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி இதனோடு சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி இலைகளையும் தூவி நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு சூடானவுடன் உருண்டைகளை போட்டு மிதமான சூட்டில் பொரித்து எடுத்தால் காரசாரமான வாழைப்பூ கோலா உருண்டை ரெடி!

பச்சைப்பயிறு சுழியம்:

தேவையான பொருள்கள்:

பச்சை பயிறு - 1 கப்

துருவிய வெல்லம் - 3/4 கப்

துருவிய தேங்காய் - 1/2 கப்

ஏலக்காய் தூள் - சிறிதளவு

கோதுமை மாவு - 1 கப்

மஞ்சள் தூள் - 1/4 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரித்தெடுக்க தேவையான அளவு

செய்முறை:

பச்சைபயிரை ஓரளவுக்கு நன்கு வறுத்து கழுவி ஒரு குக்கரில் போட்டு மூழ்கும் அளவுக்கு தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து 5 விசில் வரும் வரை நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின் பச்சைப்பயிறு ஆறியவுடன் நன்கு மசித்து எடுத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து துருவிய வெல்லம்,1/4 கப் தண்ணீர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதனோடு துருவிய தேங்காய், மசித்து வைத்து பச்சைப்பயிரையும் சேர்த்து கெட்டியாகும் அளவுக்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இக்கலவையை சிறிது நேரம் ஆற வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு நன்கு கலந்து 20 நிமிடங்கள் கழித்து எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு சூடானவுடன் பச்சை பயிறு கலவையை உருண்டைகளாக உருட்டி, கோதுமை மாவு கலவையில் புரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பாசிப்பயிறு சுழியம் ரெடி!

மிகவும் சத்து நிறைந்த இந்த ரெசிபியை மாலை வேளைகளில் குழந்தைகளுக்கு தாராளமாக செய்து கொடுக்கலாம்!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT