இதுவரை வெண்டைக்காயை விதவிதமாக செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் ஒருமுறை இந்த பதிவில் நான் சொல்லப்போவது போல பச்சடி செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். குறிப்பாக இந்த வெண்டைக்காய் பச்சடியை நெய் விட்டு வெள்ளை சாதத்துடன் சாப்பிட்டால் சுவை சும்மா அடிப்பொலியாக இருக்கும். அதேபோல் இந்த உணவிற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே தேவையில்லை. எதாவது வேண்டுமென்றால் அப்பளம் வைத்து சாப்பிட்டாலே காம்போ வேற மாதிரியாக இருக்கும்.
தேவையானப் பொருட்கள்:
½ கரண்டி நல்லெண்ணெய்
ஒரு டீஸ்பூன் கடுகு, சீரகம்
கால் டீஸ்பூன் வெந்தயம்
2 டீஸ்பூன் தானியா
ஒரு டீஸ்பூன் கடலை பருப்பு
10 பல் பூண்டு
8 வரமிளகாய்
சிறிய அளவு புலி
ஒரு வெங்காயம்
கொத்தமல்லி ஒரு கைப்பிடி
ஒரு தக்காளி
எண்ணெய்
கால் கிலோ வெண்டைக்காய்
உப்பு
கருவேப்பிலை
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மிதமான சூட்டில் நல்லெண்ணெய், கடுகு, சீரகம், தானியா, கடலை பருப்பு, பூண்டு, வரமிளகாய், சிறிய அளவு புளி துண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
பின் கொத்தமல்லி, கருவேப்பிலையை வாசனைக்காக சேர்க்க வேண்டும். நன்றாக வதக்கிய பின்னர் அதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தைப் பொடியாகப் பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும்.
ஒருமுறை கிளறிவிட்டு சிறிய தக்காளியை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். அனைத்தையும் பச்சை வாசனைப் போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். முழுமையாக வதங்கிய பின்னர் தனியாக எடுத்து வைத்து குளிர வைக்க வேண்டும்.
கால் கிலோ வெண்டைக்காயை மெலிதாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதே பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து அந்த வெண்டைக்காயை வறுக்க வேண்டும்.
மறுபுறம் வதக்கி வைத்த அனைத்தையும் Mixie-யில் போட்டு சிறிது உப்புச் சேர்த்து அரைக்க வேண்டும். பின்னர் அதனுடன் வறுத்து வைத்த வெண்டைக்காயைச் சேர்த்து மென்மையாக அரைக்காமல் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் வெண்டைக்காய் பச்சடி தயார்.
இறுதியாக பூண்டு, கருவேப்பில்லை சேர்த்துத் தாளித்து பச்சடியில் சேர்த்துக்கொள்ளவும்.