நாம் இப்போது விரும்பி சாப்பிடும் சாம்பார் ஒரு மராட்டிய மன்னருக்காக கண்டுபிடிக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?
தென்னிந்திய உணவுகள் சுவைக்கும் நறுமனத்திற்கும் பெயர் போனவை. இப்படி அவ்வளவு சுவையான உணவுகள் இருந்தாலும், தென்னிந்திய மக்கள் விரும்பி சாப்பிடுவது சாம்பார்தான். காய்கறிகள், துவரம்பருப்பு, புளி ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுவதுதான் 'சாம்பார்'.
இட்லியிலிருந்து சாதத்திற்கு வரை அனைவரும் சேர்த்து சாப்பிடும் ஒன்று சாம்பார். சாம்பாருக்காக உயிரைக்கொடுக்கும் ஆட்கள் தமிழ்நாட்டில் ஏராளம். அதுவும் தோசையுடன் சாம்பார் மற்றும் சட்னி வைத்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். சூடாக நெய்யுடன் சேர்த்து சாப்பிடுகையில் வேறு எந்த உணவும் வேண்டாம் என்று தோன்றும். குறிப்பாக சைவம் மட்டும் சாப்பிடுபவர்களுக்கு சாம்பார்தான் அனைத்துமே.
அந்தவகையில் சாம்பார் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
ஒவ்வொரு உணவுகளின் கண்டுபிடிப்புகளுக்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது என்பதை உண்மையே.
ஒருமுறை சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜி தஞ்சாவூர் சென்றிருக்கிறார். அப்போது அரண்மனை சமையலறையில் ஒரு சமையல்காரர் பாரம்பரிய உணவான அம்தி பருப்பை மன்னருக்காக தயாரித்துக்கொண்டிருந்தார். அப்போது அதற்கு தேவையான கோகும் என்ற பொருள் சமையலறையில் கிடைக்கவில்லை. ஆனால், புளி மற்றும் காய்கறிகள் இருந்தன. என்ன செய்வதென்று அறியாமல், அந்த சமையல்காரர் சிறிது நேரம் யோசித்தார். பின்னர் காய்கரிகளையும் புளியையும் பருப்புடன் சேர்த்து ஒரு உணவு செய்தார்.
அந்த உணவை தயங்கியப்படியே அரசருக்கு வைத்திருக்கிறார். ஆனால், சாம்பாஜி அந்த உணவை சாப்பிட்டுவிட்டு, மீண்டும் வாங்கி வாங்கி சாப்பிட்டிருக்கிறார். நாளடைவில் அந்த உணவு மிகவும் பிரபலமானது. சாம்பாஜிக்காக உருவாக்கப்பட்ட இந்த உணவிற்கு சாம்பார் என்றே பெயர் வந்தது.
இப்படித்தான் சாம்பார் கண்டுபிடிக்கப்பட்டதாம். ஆத்திர அவசரத்திற்கு என்ன செய்வதென்று தெரியாமல், இருப்பதைவைத்து செய்த உணவுதான் இன்று தமிழகத்தின் அடையாள உணவாக இருந்து வருகிறது.
இதைத்தான் இருப்பதை வைத்து வாழ்ந்தால், சிறப்புடன் வாழலாம் என்று சொல்வார்களோ?