காசியின் பெருமைகளை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. காசியை சுருக்கமாக விவரிக்க வேண்டுமென்றால் குறுகலான பாதைகள், பழங்காலத்தைச் சேர்ந்த கட்டிடங்கள், மிகவும் பழமையான கோயில்கள், எங்கு திரும்பினாலும் சிவ லிங்க ரூபங்கள், பக்தியைத் தூண்டும் சூழ்நிலை, பக்தர்களின் கூட்டம், ஹரஹர மகாதேவ் என்ற கோஷங்கள், புனிதமான கங்கை நதி.... இதுவே காசி.
காசி நகரமானது பெனாரஸ், வாரணாசி என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. ஒரு முறை சென்று வந்தால் மீண்டும் மீண்டும் காசிக்குச் சென்று காசி விஸ்வநாதரையும் விசாலாட்சி அம்பாளையும் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதுள் எழுவது இயற்கையே. இத்தகைய பெருமைகள் பல வாய்ந்த காசியை தரிசிக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது.
வாரணாசியில் கங்கைக்கரையில் அமைந்துள்ள தசாஸ்வமேத படித்துறை மிகவும் புகழ்பெற்றது. இங்குதான் தினமும் மாலைவேளைகளில் கங்கா ஆரத்தி நடைபெறுகிறது. பக்தர்களின் கூட்டம் எப்போதும் நிரம்பி வழியும் பகுதி.
நந்தி சர்க்கிள் என்ற பகுதி அமைந்துள்ள இடம் கோதோலியா (Godhowlia) என்று அழைக்கப்படுகிறது. நந்தி சர்க்கிளிலிருந்து தசாஸ்வமேத படித்துறை சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவு உள்ளது.
கோதோலியா நந்தி சர்க்கிளில் இருந்து தசாஸ்வமேத படித்துறை செல்லும் வழியெங்கும் இருபுறங்களிலும் சாலையோர உணவகங்கள் ஏராளமாக இருக்கின்றன.
இதில் காலை ஆறு மணிக்கே இட்லி மற்றும் மசாலா தோசை ரெடியாகி விடுகிறது. சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கிறது. அவலில் செய்யும் உணவான போகாவும் இங்கு காலை வேளைகளில் கிடைக்கிறது. பலர் பெரிதும் விரும்பி சாப்பிடுகிறார்கள். முளைகட்டிய பயிறுகளை வேக வைக்காமல் ஒன்றாகக் கலந்து தருகிறார்கள். விலை இருபது ரூபாய். உடலுக்கு நல்லது.
காசியில் ஏராளமான உணவு வகைகள் கிடைக்கின்றன. முதலில் சொல்ல வேண்டுமென்றால் ஜிலேபி மற்றும் கச்சோரி. காலை வேளைகளில் கச்சோரியையும் ஜிலேபியையும் விரும்பி சாப்பிடுகிறார்கள். விலையும் மலிவுதான்.
அடுத்ததாக பூரி மற்றும் சப்ஜி. உருளைக்கிழங்கு, பனீர், கீரை இவற்றைக் கலந்து ஒரு சப்ஜி செய்கிறார்கள். சுவையாக இருக்கிறது. எத்தனை முறை கேட்டாலும் சளைக்காமல் தருகிறார்கள். நான்கு பூரிகள் மற்றும் சப்ஜி எழுபது ரூபாய்தான்.
சோளே பட்டூரா எங்கு பார்த்தாலும் கிடைக்கிறது. இங்கு உணவகங்களில் ஒன்றல்ல இரண்டு பெரிய சோளாப்பூரியும் சன்னா பட்டூராவும் தருகிறார்கள். விலை எழுபத்தி ஐந்து ரூபாய். ஒரு செட் சாப்பிட்டால் போதும் அடுத்த வேளை வரை பசியெடுக்காது. காசியில் பெரும்பாலும் கடுகு எண்ணெயைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
காசியின் மற்றொரு பிரபலமான உணவு மலாய் லஸ்ஸி. காசி நகர் எங்கும் இந்த மலாய் லஸ்ஸி கிடைக்கிறது. ஒரு சிறிய மண் குடுவையில் தருகிறார்கள். சுவையாக அபாரமாக இருக்கிறது. ஒன்று சாப்பிட்டு முடித்ததும் இன்னொன்று சாப்பிடத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு சுவையாக இருக்கிறது. விலை வெறும் ஐம்பதே ரூபாய்தான்.
காசியில் இனிப்பை பெரிதும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். எல்லாமே பாலில் செய்த பேடா வகைகள் தான். குலோப்ஜாமூன்களும் வகைவகையாகக் கிடைக்கின்றன. காசியில் பல இடங்களில் இந்த இனிப்புகள் கிடைக்கின்றன.
சாம்பார், ரசம் போன்றவற்றை கண்களால் கூடப் பார்க்க முடியாது. ஓட்டல்களில் சாம்பார் என்ற பெயரில் தருவது நம்ம ஊர் காரக்குழம்பைப் போல இருக்கிறது.
பல சிறு கடைகளில் இட்லியை பஜ்ஜி போல கடலைமாவில் தோய்த்து எண்ணெயில் எடுத்துத் தருகிறார்கள். இந்த உணவும் இங்கே பிரபலமாக இருக்கிறது.
தெருவெங்கும் தேநீர் கடைகள் இருக்கின்றன. மண் குவளையில் தேநீர் தருகிறார்கள். பத்து ரூபாய்தான். காபியும் கிடைக்கிறது. பதினைந்து ரூபாய். பெரும்பாலும் குமுட்டி அடுப்பில்தான் தேநீர் தயாரிக்கிறார்கள்.
ஆலுடிக்கி, கச்சோரி சாட் முதலான உணவுகளும் தெருவோரக் கடைகளில் எங்கும் கிடைக்கின்றன.
இதைப் படிக்கும் உங்களுக்கு இப்பவே காசிக்குப் போகணும்னு தோணுதா ? காசிக்குச் செல்லுங்கள். முதலில் காசி விஸ்வநாதரை தரிசியுங்கள். மேலே உள்ள அனைத்து உணவுகளையும் வாங்கி சாப்பிட்டுப் பாருங்கள்.