Healthy foods Image credit - youtube.com
உணவு / சமையல்

சுவையான பால் பணியாரம், காரசாரமான மரவள்ளிக் கிழங்கு பணியாரம் செய்யலாம் வாங்க!

ராதா ரமேஷ்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு ரெசிபிதான் பணியாரம். அதை எப்போதும் போல தோசை மாவில் செய்வதை விட  சற்று வித்தியாசமாக செய்து பார்த்தால் அதன் சுவை இன்னும் நன்றாக இருக்கும். எப்படி செய்யலாம் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மரவள்ளி கிழங்கு பணியாரம்:

தேவையான பொருட்கள்:

 துருவிய மரவள்ளிக்கிழங்கு- 3 கப் 

 தேங்காய் துருவல்-1 கப் 

 தோசை மாவு-1 கப்

 காய்ந்த மிளகாய்-3

 சோம்பு-1/2 டேபிள்ஸ்பூன் 

 உப்பு  -தேவையான அளவு.

செய்முறை:

ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், காய்ந்த மிளகாய் , சோம்பு சேர்த்து நீர் விடாமல் அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் மரவள்ளிக் கிழங்கு துருவல் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். இதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதோடு தோசை மாவையும் சேர்த்து நன்கு கலந்து எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் பணியாரக்குழியை  வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் மாவை ஊற்றி இரண்டு பக்கமும் வேகவிட்டு பொன்னிறமாக வந்தவுடன் எடுத்தால் சுவையான காரசாரமான மரவள்ளி கிழங்கு பணியாரம் ரெடி.

தேங்காய் மற்றும் கார சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

பால் பணியாரம்:

தேவையான பொருள்கள்:

பச்சரிசி -1கப் 

 உளுந்து-1 கப் 

 தேங்காய்ப்பால் -3கப் 

 சர்க்கரை -1 கப் 

 ஏலக்காய் தூள் -1/2 டேபிள்ஸ்பூன் 

 உப்பு -தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

அரிசி மற்றும் உளுந்தை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு உப்பு மட்டும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

முழு தேங்காயை உடைத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி   மிக்ஸி ஜாரில் போட்டு  நன்கு அரைத்து அதில் இருந்து முதல் தரமான தேங்காய் பாலை எடுத்துக் கொள்ளவும். இந்த தேங்காய் பாலுடன் சர்க்கரை மற்றும் ஏலக்காய்தூள் சேர்த்து நன்கு கலந்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வானலியை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்  நன்கு சூடானவுடன் கலந்து வைத்த மாவை எடுத்து சிறு சிறு துண்டுகளாக மாவில் விட்டு பொரித்து எடுக்கவும். பொரித்து  வைத்த துண்டுகளை சிறிது நேரம் ஆற வைத்து மிதமான சூட்டில் தயார் செய்து வைத்த தேங்காய் பாலில் போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்தால்  சுவையான பால் பணியாரம் ரெடி.

மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கும்போது சத்து நிறைந்ததாகவும் அதே நேரத்தில் முன் பசியை ஆற்றக் கூடியதாகவும் இருக்கும்.

40 வயதில் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய 20 வாழ்க்கைப் பாடங்கள்!

பாலை காய்ச்சாமல் அப்படியே குடிக்கும் நபரா நீங்கள்? போச்சு! 

ஆயுட்காலத்தை அதிகரிக்கும் அறுசுவை உணவுகள்!

நெல்லிக்காய் பயன்படுத்தி மிட்டாய் செய்யலாம் வாங்க!

பணிபுரியும் இடத்தில் பிறரிடம் பேசக்கூடாத 5 விஷயங்கள்!

SCROLL FOR NEXT