ஒரு குழந்தை பிறக்கும்போதுதான் பெற்றோர்களும் பிறக்கிறார்கள் என்று சொல்வார்கள். அதாவது அவர்களுக்குமே குழந்தை வளர்ப்பு என்பது புதிதே! எனினும், கண்டிப்பாக குழந்தை வளர்ப்பின் மீது கவனமும் அக்கறையும் கொள்ள வேண்டியது மிக அவசியம். ஏனெனில் குழந்தை வளர்ப்பு சரியாக இருந்தால்தான் சமூகத்தில் மேம்பட்ட மனிதனாக அந்த குழந்தை மாறும் என்பதில் எந்த ஐயப்பாடுமில்லை.
குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்:
* குழந்தைகளை பொத்தி பொத்தி வைத்து வளர்க்கக் கூடாது. அவ்வாறு செய்யும்போது அக்குழந்தை பெற்றோர்களின் நிழலிலேயே வளர்ந்து விடும். அது பிற்காலத்தில் அக்குழந்தை வெளியுலகை எதிர்க்கொள்வதை சிரமமாக்கி விடும்.
* குழந்தைகளை கண்டிக்கிறேன் என்ற பெயரில் அடிப்பது மிகவும் தவறாகும். தவறு செய்திருந்தால் சிறு சிறு கண்டிப்பின் மூலமாக திருத்தலாம்.
* பெண் குழந்தையோ, ஆண் குழந்தையோ கண்டிப்பாக ஒரு தற்காப்பு கலை கற்று தர வேண்டும். அது அவர்களுக்கு ஆபத்தான சமயங்களில் உறுதுணையாக இருக்கும்.
* அவர்களுக்குப் பிடித்ததை அவர்களே தேர்ந்தெடுக்க உரிமை கொடுங்கள். ஒரு சின்ன விஷயத்தில் கூட நம்முடைய விருப்பத்தை அவர்கள் மீது திணிப்பது தவறாகும்.
* குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுப்பது மிகவும் தவறாகும். அது அவர்களை பிடிவாதக்காரர்களாக மாற்றிவிடும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது போல வளர்ந்த பின்பு மாற்ற முடியாத குணமாகிவிடும்.
* ஜாதி, மதத்தை பற்றிச் சொல்லித் தருவதை விடுத்து, மனித நேயத்தின் மகத்துவத்தை சொல்லிக்கொடுப்பது சிறந்ததாகும்.
* ஒரு பெற்றோராக உங்களுடைய முக்கியமான கடமை, ஆண் குழந்தைக்கு சுதந்திரமும், பெண் குழந்தைக்கு அடக்குமுறையும் விதிக்கக் கூடாது. இருவரையுமே சமமாக நடத்த வேண்டும் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
* நம் வீட்டின் நிலைமை, கஷ்ட நஷ்டங்களை சொல்லிக் கொடுத்து குழந்தையை வளர்க்க வேண்டும். குழந்தை கேட்கிறது என்று அது ஆசைப்பட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்ப்பது தவறாகும்.
* படிப்பு என்பது குழந்தைகளுக்கு மிக முக்கியமான ஒன்றுதான். இருப்பினும் படிப்பே அவர்களுக்கு பிரதானம் என்று கட்டாயப்படுத்தாமல் அவர்களுக்கு வேறு துறையில் ஆர்வமிருப்பின் அதை கற்றுக்கொள்ள அனுமதியுங்கள்.
* யாரையும் தோற்றத்தை வைத்து முடிவெடுக்கக கூடாது. யாரையும் எளிதாக நம்பவும் கூடாது. பெரியவர்களோ, சிறியவர்களோ அனைவருக்கும் மரியாதை கொடுத்து பழக வேண்டும் என்ற மூன்று விஷயத்தையும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கக் கற்றுத் தர வேண்டும்.
இதையெல்லாம் கடைப்பிடித்து பாருங்கள்; நீங்களும் உங்கள் குழந்தையும் சேர்ந்தே வாழ்வில் மேம்படுவதை உணர்வீர்கள்.