Things seniors should prepare themselves for 
வீடு / குடும்பம்

முதியோர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டிய 15 விஷயங்கள்!

ம.வசந்தி

முதியோர்கள் தங்கள் வயதை உணர்ந்து அதற்குத் தக்கபடி நடந்துகொண்டால் அவர்களது உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும். பொழுது இன்பமாகக் கழியும். அதற்கு முதியோர்கள் தங்களை எப்படித் தயார்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. ‘வயதாகிவிட்டதே, இனி வாழ்க்கை அவ்வளவுதான்’ என்று முதியோர்கள் நினைத்து, தங்கள் வாழ்க்கையை சூன்யமான கருதக்கூடாது. முதுமை என்பது இயற்கையானது. அதனால் முதுமையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளுங்கள். முதுமையை மனப்பூர்வமாக வரவேற்றால் அந்த வாழ்க்கையோடு பொருந்திப் போக எளிமையாகும்.

2. வயதான காலத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எப்போதும் வீட்டிலேயே இருக்காமல், அடிக்கடி வெளியேயும் சென்று வர வேண்டும். தினமும் சிறிது நேரம் நடக்க வேண்டும்.

3. அதிகமான அளவு உணவு சாப்பிடக்கூடாது. கலோரி குறைந்த உணவுகளையே உண்ண வேண்டும். வறுத்த, பொறித்த மற்றும் டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். பழங்கள், காய்கறிகள் நிறைய சாப்பிட வேண்டும்.

4. பிரார்த்தனைக்காக தினமும் சிறிது நேரத்தை ஒதுக்கி வையுங்கள். எல்லாவற்றையும் ஆத்மார்த்தமாக அணுகுங்கள். இது மனதுக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைத் தரும். டென்ஷனை முழுமையாக அகற்றி விடுங்கள்.

5. தேவைப்படும்போதெல்லாம் ஓய்வு எடுக்க வேண்டும். நன்றாகத் தூங்குவதன் மூலம் சோர்வை அகற்ற முடியும். மதியம் சிறிது நேரம் தூங்குவது உடலுக்கு நல்லது.

6. சிரிப்பது, நகைச்சுவை செய்வது ஆரோக்கியத்தைத் தந்து ஆயுளை அதிகரிக்கும். எப்போதும் சிரித்து சந்தோஷமாக இருங்கள். இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், தசை இறுக்கம் குறையவும் சிரிப்பு அவசியமான மருந்து. இதன் மூலம் அதிக நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற முடியும்.

7. கடந்த காலங்களில் நடந்த சோகமான சம்பவங்களை நினைத்து வருந்தக் கூடாது. அதுபோன்று, 'நாளை என்ன நடக்குமோ?’ என்ற அச்சத்தையும் தவிர்க்க வேண்டும். அவ்வப்போது நடக்கும் காரியங்களில் கவனம் செலுத்தி, சந்தோஷமாக இருங்கள்.

8. வருமானத்திற்குத் தக்கபடியே செலவு செய்ய வேண்டும். யாரிடமிருந்தும் எதையும் நிறைய எதிர்பார்க்கக்கூடாது. பணத் தட்டுப்பாடு டென்ஷனை உருவாக்கும்.

9. சும்மாவே இருந்து கொண்டிருந்தால், பலவித சிந்தனைகள் வலம் வந்துகொண்டிருக்கும். அதனால் முடிந்த அளவுக்கு ஏதாவது வேலையில் ஈடுபட வேண்டும். பாடுவது, படம் வரைவது, வீட்டுத் தோட்டத்தைக் கவனிப்பது ஆகியவை ஆரோக்கியமான பொழுதுபோக்குகளாகும்.

10. வாய்ப்பு கிடைத்தால் சிறிய அளவிலான சமூக சேவைகளில் ஈடுபடலாம். பெரியோர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது சுற்றுப்புற சூழலை கவனிப்பது போன்றவை சிறந்தவை.

11. வீட்டின் உள்ளேயோ, வெளியிலோ விழுந்து, எலும்பு முறிவு, காயம் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது. இறங்கும்போது கால்களைச் சரியாகக் கீழே ஊன்றி நிமிர்ந்த நிலையில் இறங்க வேண்டும். உட்காரும்போது முதுகெலும்பு நிமிர்ந்து இருக்க வேண்டும்.

12. இரவில் தூங்கத் தயாராகும்போது, பிரகாசமான டார்ச் லைட் ஒன்றை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி எழுந்து செல்லும்போது இது உதவியாக இருக்கும்.

13. நின்றுகொண்டே குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். உட்கார்ந்து குளியுங்கள். குளியல் அறை வழுவழுப்பாக இருக்கக் கூடாது. குளியலறை விபத்துக்கள் மோசமானவை. ஆகவே மிகுந்த கவனம் தேவை.

14. உடல் எப்போதும் சுத்தமாக இருக்கட்டும். முடியைச் சீவ வேண்டும். நகத்தை வெட்டிவிட வேண்டும். சுத்தமான தொள தொள ஆடைகளை அணியுங்கள். பாதங்களுக்குப் பொருத்தமான செருப்பு அவசியம்.

15. பேரக் குழந்தைகளோடு அதிகமான பொழுதைச் செலவிடுங்கள். அவர்களுக்கு கதை, கவிதை சொல்லிக் கொடுத்து விளையாடுங்கள்.

மேற்கூறிய 15 விஷயங்களை முதியோர்கள் கடைப்பிடித்தாலே வாழ்க்கை இனிதாகும்.

கதிரியக்க மாசுக்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும்!

என்ன ஸ்கூட்டர் ரிப்பேருக்கு 90 ஆயிரமா? ஆத்திரத்தில் சுக்கு நூறாக உடைத்த ஸ்கூட்டியின் சொந்தக்காரர்!

கொசுக்களை விரட்ட வேண்டுமா? முதலில் இந்தச் 5 செடிகளை வளர்க்கத் தொடங்குங்கள்!

சிறுகதை; மூணாம் நம்பர் சைக்கிள்!

இரவில் சரியாகத் தூங்காத குழந்தைகளைத் தூங்க வைக்கும் உணவுகள்!

SCROLL FOR NEXT